கந்தனைக் காட்டிய அருணகிரியார்!

இம்மைக்கும் மறுமைக்கும் நலன் பயக்கும் மகா மந்திரம் திருப்புகழ். இதன் சிறப்பை, அருளாளர்கள் சொல்லக் கேட்பதில்தான் எவ்வளவு ஆனந்தம்?!

சென்னை- குரோம்பேட்டை, நியூகாலனி- ஸ்ரீசுந்தர விநாயகர் ஆலயத்தில், 'திருப்புகழ் அமுதம்' என்ற தலைப்பில், திருப்புகழ் திலகம் மதிவண்ணன் ஆற்றிய சொற்பொழிவு, நம்மை அருணகிரியாரின் காலத்துக்கே அழைத்துச் சென்றது. ''மகான்களும் ஞானிகளும் இறைவனைக் கண்டவர்கள்; அவனது அனுபூதியை உணர்ந்தவர்கள். அருணகிரியார் மட்டுமே கந்தனின் தரிசனத்தை மற்றவர்க்கும் காட்டி அருளியவர், அவனது அனுபூதியை அனைவருக்கும் ஊட்டியவர்...'' என்று துவங்கி, அண்ணாமலையில் அருணகிரிக்கு அருளிய முருகனின் திருவிளையாடலை விவரித்து, அவர் வழங்கிய திருப்புகழ் அமுதத்தில் சில துளிகள் இங்கே...

''அருணகிரியார் காலத்தில் திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்தவர் பிரபுடதேவராயன். இவரது அவைப் புலவர் சம்பந்தாண்டான். மன்னவன், அருணகிரியார் மீது மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தது சம்பந்தாண்டானுக்குப் பிடிக்கவில்லை. 'எமது சக்தியை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உங்கள் அருணகிரியால் பாடல் பாடி, முருகனை நேரில் வரவழைக்க முடியுமா?' என்று சவால் விட்டான். இதை அருணகிரியாரிடம் மன்னர் தெரிவிக்க, அவரும் ஒப்புக் கொண்டார்.

அனைவரும் கோயிலில் கூடினர். 'அதல சேடனாராட...' எனத் துவங்கும் திருப்புகழால் முருகனைப் பாடத்துவங்கினார் அருணகிரியார். அன்புக்குரிய அடியவரின் குரல் அழைக்க, உடனே புறப்பட்டான் ஆறுமுகன்! ஆனால்... எளிதில் அவனது தரிசனம் கிடைத்துவிடவில்லை. காரணம்?!

பாடியபடியே கண் மூடி தியானித்தார் அருணகிரி; சம்பந்தாண்டானின் சூழ்ச்சி புரிந்தது. சக்தி உபாசகனான அவனது வேண்டுதலை ஏற்று, வேலவனை நகர முடியாதபடி தன் மடியில் வைத்து, அணைத்துக் கொண்டிருந்தாள் உமையவள். அவ்வளவுதான்... 'தரணியில் அரணிய...' எனத் துவங்கி, உமையவளைப் பாடினார் அருணகிரி. அற்புதமான பாடலில் மெய்மறந்தாள் அம்பிகை. சாதுரியமாக அவளின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஓடோடி வந்தான் வேலன்; மாமனைப் போலவே தூணில் காட்சி தந்தான். அருணகிரியாருடன் அனைவரும் முருகனை தரிசித்துப் பேறு பெற்றனர்.

அருணகிரியாருக்கு மட்டுமா... தூய உள்ளத்துடன் தம்மை வணங்கும் ஒவ்வொருவருக்கும் அருளும் வள்ளல் அல்லவா அந்த வடிவேலன். அவனிடம் எதையெல்லாம் பிரார்த்திக்க வேண்டும் தெரியுமா?

மூல மந்திரம் ஓதல் இங்கிலை...
ஈதல் இங்கிலை நேயம் இங்கிலை...
ஞானமும் மோனமும் இங்கிலை...

- அதாவது, 'எப்போதும் சரவணபவ எனும் முருகனின் மூல மந்திரத்தை ஓதுதல் வேண்டும், ஈதல்- பிறருக்கு அள்ளி வழங்கும் ஈகை குணம் வேண்டும், நேயம் வேண்டும், ஞானமும் மோனமும் வேண்டும்... என்னிடம் இல்லாத இவற்றை நீயருள வேண்டும்' என்று பிரார்த்திக்கச் சொல்கிறார் அருணகிரியார். அவர் வழியிலேயே நாமும் முருகனைப் பிரார்த்தித்து திருவருள் பெறுவோம்!''

Comments