ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசிவாநந்தீஸ்வரர் ஆலயம்

''திருக்கண்டலம் சிவனாருக்கும் எனக்கும் 78 வருஷ தொடர்பு உண்டு. இப்ப எனக்கு 98 வயசு'' என்கிறார் ஆறுமுக குருக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த வெங்கல் அருகே அமைந்துள்ளது திருக்கண்டலம். இங்குதான், ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசிவாநந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. வயோதிகம் உடலில் தளர்ச்சியைத் தந்தாலும் சுறுசுறுப்புடன் பேசுகிறார் ஆறுமுக குருக்கள்.

''அகத்தியருக்கு சிவனார் தரிசனம் தந்த தலம்! ஞானசம்பந்தரின் பூஜைப் பெட்டியை எடுத்துகிட்டு வந்துட்டார் சிவனார். அதைத் தேடி வந்தப்பதான், சிவாநந்தீஸ்வரரை தரிசிச்சார் ஞானசம்பந்தர். பாடல் பெற்ற ஸ்தலம்; அதுமட்டுமா? ஸ்ரீராமரின் மகன்களான லவனும் குசனும் இங்கே வந்து, திருக்குளத்தில் நீராடி, ஸ்வாமியை தரிசிச்சதாச் சொல்றது ஸ்தல புராணம்'' என்று பெருமிதத்துடன் விவரித்தவர் தொடர்ந்தார்...



''சிதைஞ்சு போயிருந்த கோயில் இது! நல்ல மனுஷங்களோட உதவியால திருப்பணி நடந்துச்சு. இன்னிக்கி எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வர்றாங்க. அன்பர்களோட உதவியால மூணு கும்பாபிஷேகம்; என் சொந்த முயற்சியால மூணு தெப்போற்ஸவம்னு பண்ணிருக்கேங்கற நிறைவு உள்ளுக்குள்ளே! இத்தனை வயசுக்கு அப்புறமும் பகவானுக்கு சேவை பண்றதுக்கு உடம்புல தெம்பையும் ஆயுசையும் கொடுத்திருக்கானே... வேறென்ன வேணும்'' என்று உருகுகிறார்.

''வீடுங்களோ தெரு விளக்குகளோ அதிகம் இல்லாத காலம் அது! பெரம்பூர்லேருந்து பத்துப் பேரா சேந்து, சுவாமி தரிசனத்துக்கு வந்தாங்க. ஆனா, கோயிலுக்கு வர்றதுக்கான வழி தெரியல; இருட்டு வேற! அப்ப அங்கே வந்த ஒருத்தர், கூடவே துணைக்கு வந்தாராம்! கோயில் கண்ணுல தென்படும்போது அவரைக் காணோமாம்! அவர்... சிவாநந்தீஸ்வரரைத் தவிர வேற யாரா இருக்க முடியும்?

பொற்கொல்லர் ஒருத்தரோட கனவுல வந்து, 'என் மனைவிக்கு தாலியும் எனக்கு விபூதிப் பட்டையும் பண்ணிக் கொடேன்'னு கேட்டாராம் சிவபெருமான். அப்படியே செஞ்சு, வேண்டிட்டுப் போனாரு அவரு!

''ஒருமுறை... கோயில்ல ரெண்டு சிலைகள் திருடு போயிருச்சு. பைரவருக்கு வடை மாலை சார்த்தி, பூஜை பண்ணினா சிலைகள் கிடைச்சிரும்னேன். அதன்படி, பத்தாம் நாள், சிலைகள் கிடைச்சுது. அத்தனை சக்தி வாய்ந்த ஆலயம் இது!

சென்னை அயன்புரத்துலேருந்து ஒரு பொண்ணு வந்து, அவளோட புருஷன் வேற ஒரு பொண்ணோட வாழறதாச் சொல்லி அழுதா! அவளுக்காக பைரவருக்கு ரெண்டு அஷ்டமில சங்கல்பம் பண்ணி பூஜை செஞ்சேன். அப்புறமா, தம்பதி சமேதரா இங்கே வந்து தரிசனம் செஞ்சாங்க'' என்று சிவனாரைப் போற்றும் குருக்களின் 98-வது பிறந்த நாளை, ஆன்மிக நற்பணி மன்றத்தினர் விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

'இங்கே வர்றவங்களோட கவலையைப் போக்கி, அவங்களை சந்தோஷமா வாழ வைடாப்பா'ங்கறதுதான் என் பிரார்த்தனை. அதுபோதும் எனக்கு!'' என்றவர், கருவறையில்... ஸ்ரீசிவாநந்தீஸ்வரருக்கு தீபாராதனை காட்டினார். ஆறுமுக குருக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை ஓடியது, மனதுள்!

Comments