கண்ணதாசன் தத்துவத் துளிகள்!

இரு கோடுகள் தத்துவம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு நேர்க்கோடு பெரியதா? இல்லை, சிறியதா என்பதை, அந்தக் கோட்டினை வைத்து நிர்ணயம் செய்ய முடியாது. அதன் பக்கத்தில் போடப்படும் கோட்டின் அளவை வைத்தே அது நிர்ணயமாகிறது.

பக்கத்தில் சிறிய கோடு போடப்பட்டால், முதல் கோடு பெரியதாகிவிடுகிறது. ஒருவேளை புதிய கோடு பெரியதாக அமைந்துவிட்டால், ஏற்கனவே இருப்பது சிறியதாகிவிடும். ‘இரு கோடுகள்’ என்னும் தலைப்பில், இந்தக் கருத்தினை மையமாக வைத்தே ஒரு திரைப்படமும் வந்தது.

ஒரு தாளின் ஒரு முனையில் இருந்து மறுமுனைவரை நேர்க்கோடு போட்டாலும், தாளின் முனை முடியுமே தவிர, கோடு முடிந்துவிட்டது என்று சொல்லக்கூடாது. தாள் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால், கோடு இன்னும் பெரிதாகும். உலகின் ஒரு முனையில் இருந்து மறுமுனைவரை நேர்க்கோடு போட்டாலும் இதே நிலைதான்!

‘கோடு முடிந்துவிட்டது’ என்று சொல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு. கோடு நேராகப் போய்க்கொண்டிருக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக வளைய வேண்டும். வளைந்துகொண்டே இருந்தால், தொடங்கிய இடத்துக்கே வந்து, தொடக்கப்புள்ளியுடன் கலந்துவிடும். அந்தக் கோடு முடிந்த இடத்தில் வட்டமாகிவிடுகிறது.

வட்டத்தில் வேண்டுமானால் சிறிய வட்டம் பெரிய வட்டம் உண்டே தவிர, கோடு முடிந்துவிட்டதை மறுக்கமுடியாது. கோடு இங்கு பூரணமடைந்துவிடுகிறது!

அறிவைத் தேடிக்கொண்டே போகின்றான் மனிதன். எவ்வளவு தேடி அறிந்து கொண்டாலும், அவனுக்குத் தெரியாத ஒன்றை மற்றொருவன் தெரிந்து வைத்திருக்கின்றான். இதற்கு முடிவே இல்லை.

வெளியே அறிவைத் தேடிச் செல்பவன், வெளியே மட்டுமே தேடிக் கொண்டிருந்தால் பயனில்லை. சற்றே தனது முயற்சியினை வளைத்துத் தன்னை நோக்கித் திருப்பினால், தனக்குள்ளேயும் தேடத் தொடங்குகின்றான்.

அறிவைத் தேடித் தன் மனத்தில் இருந்து புறப்பட்டவன், தன்னை நோக்கித் திரும்பி, ஒரு வட்டமடித்துத் தனது மனத்துக்குள்ளே இறங்கும்போதுதான், அவனது தேடல் பூரணமடைகின்றது.

தேடுதலைத் தன்னிலே இருந்து தொடங்கி தன்னிலேயே முடிக்கும் வட்டம்தான் பூரணம். உலகில் அனைத்தும் உண்டு என்பதையும், ஆனால், எதுவுமே நிலையானதில்லை என்பதையும் புரியவைக்கும் பூரணம் இது.

‘மனித வாழ்க்கையின் அடிப்படையே ஆசைகள்; ஆசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை...’ என்பதையும், ‘துன்பங்களுக்கெல்லாம் நாம் கொள்ளும் ஆசைகளே காரணம்; தவிர்க்கப்பட வேண்டியவை ஆசைகளே...’ என்னும் முரணையும் புரிய வைக்கும் பூரணம்.

இந்தப் பூரணத்தின் குறியீடுதான் பூஜ்ஜியம். தூய தமிழில், சுழியம். கணிதத்தில், மிக உயர்வான எண் பூஜ்ஜியமே. தனக்கென்று தனி மதிப்பை இது வைத்துக் கொள்வதில்லை. ஆனால், தன்னுடன் சேர்ந்த ஒன்றினைப் பத்தாக்கும்; பத்தினை நூறாக்கும்; ஆயிரமாக்கும்; பத்தாயிரமாக்கும்... எனவே பூஜ்ஜியத்தைவிட உயர்ந்தது ஒன்றில்லை.

சுயபெருமை எதுவுமின்றி, தன்னைச் சார்ந்தவர்களைப் பெருமைப்படுத்தும் பூஜ்ஜியம் மிகவும் பெருமைக்குரியதல்லவா..? அந்தப் பூஜ்ஜியத்தையே தனது ராஜாங்கமாக ஒருவன் தேர்ந தெடுத்துக் கொண்டானாம்!

பூஜ்ஜியத்தை ஆள்பவனைப் புரிந்து கொள்ளமுடியுமா...? முடியாதுதான். ஒரு வேளை அவனைப் புரிந்துகொண்டால்...?

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு,

புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்

புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்!

இறைவனைப் பற்றித் திரைப் பாடலில் இப்படி விளக்கம் கொடுக்கின்றார் கண்ணதாசன். பாடலின் அடுத்த வரிகளும் அருமை.

‘பழமொழி நானூறு’ என்னும் பழந் தமிழ் இலக்கியம், நானூறு பழமொழிகளைக் கொண்ட, நானூறு வெண்பாக்களால் அமைந்தது. ‘நாய் பெற்றத் தெங்கம் பழம்’ என்று ஒரு பழமொழியை அந்நூல் குறிக்கின்றது.

நாயிடம் அகப்பட்ட முழுத் தேங்காய், உருண்டுகொண்டே இருக்குமே தவிர, தானும் உடைபடாது; நாய்க்கும் பயன் படாது. ஓடு உடைபடாத தேங்காயால் பயனில்லை.

ஓட்டினை உடைக்காவிட்டாலும், அசைத்துப் பார்த்து உள்ளே நீர் இருப்பதனை எவரும் அறிந்து கொள்ள முடியும். ஆனால், உடைத்தால் தவிர, உள்ளே இருக்கும் தேங்காயினை எவரும் காண முடியாது.

‘மனத்தை மூடியிருக்கும் மாயை என்னும் ஓட்டினை உடைத்தால் தவிர, உள்ளே இருக்கும் இறைவன் தெரிய வாய்ப்பில்லை’ என்று குறிப்பால் உணர்த்துகின்றது பாடல்.

தென்னை இளநீருக்குள்ளே

தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே

தேங்காயைப்போல் இருப்

பான் ஒருவன் - அவனைத்

தெரிந்துகொண்டால் அவன் தான் இறைவன்!

வாழ்க்கைக் கசந்தவர்கள் உறவுகளை வெறுக்கின்றார்கள். அவர்களுக்கு எவர் மீதும், எவற்றின் மீதும் பற்றில்லாமல் போகின்றது. உலக இன்பங்களை, உற்றார் உறவுகளைத் துறந்துவிடுகின்றார்கள்.

உலகப்பற்று எதுவு மின்றி அனைத்தையும் வெறுத்து ஒதுங்கி வந்தவர்களுக்கு, ‘உனக்கு நான் சுற்றம்...’ என்று உறவு சொல்லிக்கொண்டு வந்து நிற்பானாம் ஒருவன்! எல்லோரையும் உதறியவர்கள் கூட, இவனைத் தொடர்ந்து சென்றால் இவன் யார் என்று புரிந்துகொள்ளலாம்!

முற்றும் கசந்ததென்று

பற்றறுத்து வந்தவர்க்கு

சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்

தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்!


இப்படித் தொடர்ந்து செல்லும் திரைப் பாடல், மனிதனின் நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை கேட்கப்படும் விடை தெரியாத வினா ஒன்றினை, இறைவனுடன் இணைத்துப் பேசுகின்றது. அனைத்துக்கும் விடையாக, அவன் மட்டுமே இருப்பான் என்பதனைக் குறிப்பால் உணர்த்தி, நிறைவு கொள்கின்றது.

கோழிக்குள் முட்டை வைத்து

முட்டைக்குள் கோழி வைத்து

வாழைக்குக் கன்று வைத்தான் ஒருவன் - அந்த

ஏழையின் பேர் உலகில் இறைவன்!

Comments