ஆயிரங்கால் மண்டபத்தை நூல் பிடிக்க வந்தாயோ!

“இசையும் நடனமும் எவ்வளவு பழமையான கலைகளோ அவைகளைப் போல மிகத் தொன்மையானது நமது சிற்பக்கலை. ஆனால், நடனத்துக்கும் இசைக்கும் இன்றும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சிற்பக் கலை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்குவதில்லை. சிற்பங்களை ரசிக்க மக்களுக்கு கற்றுக்கொடுத்தால், நமது பாரம்பரியத்தை அவர்கள் புரிந்துகொள்வதுடன் நல்ல சிற்பிகள், புதிது புதிதாக உருவாவார்கள். இந்தக் கலை மென்மேலும் வளரும்” என்கிறார் வேலூர் தங்கக் கோயிலை நிர்மாணித்த ஸ்வாமிநாதன் ஸ்தபதி.

இந்தக் கலையை வழிவழியாகக் கற்றுக்கொள்வது தவிர, சிற்பப் பள்ளிகளும் வந்துவிட்டன. இந்த வகையில் கற்றுக்கொள்வதில் ஏதேனும் வித்தியாசம் உண்டா?

எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, சிற்ப வேலையை பல தலை முறைகளாகச் செய்து வருகிறோம். ஆனால், என் தந்தை சுப்பையா ஸ்தபதி மாமல்லபுரம் சிற்பப் பள்ளியிலும் பயின்றவர். நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், என் தந்தையிடம் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். இன்னமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். எங்கள் மரபணுவில் இந்தக் கலை ஊறிவிட்டது. வீட்டில் அம்மாக்கள் தாலாட்டுப் பாடும் போதே ‘ஆயிரங்கால் மண்டபத்துக்கு நூல் போட வந்தாயோ’ என்றுதான் தாலாட்டுப் பாடுவார்கள். ‘நூல் போடுவது’ என்பது நூலைக் கட்டி, கட்டுமானத்தை நேர்க்கோட்டில் அமைப்பது. நாங்கள் தேவலோக சிற்பி விஸ்வகர்மாவின் வாரிசுகள். விஸ்வகர்மாவுக்கு ஐந்து மகன்கள். மனு, மயன், த்விஷ்டா, விஸ்வக்யன், சில்பி ஆகியோர். இவர்கள் இரும்பு, பொன், மரம், சுதை, கல் ஆகியவற்றில் சிற்பங்களை வடிப்பதில் தேர்ந்தவர்கள். இவர்களது பரம்பரை தற்போது கம்மாளர், ஆசாரி, சில்பி என்று பிரித்து அடையாளம் காணப்படுகிறது. சிற்பப் பள்ளியில் படித்து வந்தவர்களிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தொன்மையான கலையை குறித்து 37 நூல்கள் ஆதிகாலத்தில் இருந்திருக்கின்றன. இப்போது ஐந்து நூல்கள்தான் இருக்கின்றன. அவற்றில் காஷ்யப சில்ப சாஸ்திரம் முக்கியமானாது.

ஒரு சிலைக்கு கல் தேர்ந்தெடுப்பதே ஒரு கலை என்று சொல்வார்களே!

இதற்கொரு பாரம்பரிய முறையே இருக்கிறது. எந்த மலையில் சிலைக்கான பாறை பெயர்த்து எடுக்கப்படுகிறதோ, அந்தப் பாறையின் பக்கத்தில் கொட்டகை போட்டு ஸ்தபதி தங்கணும். எந்த கடவுளருக்கான சிலையோ, அந்தக் கடவுளுக்குரிய மூல மந்திரத்துடன் ஹோமம் செய்ய வேண்டும். இரவு அந்தப் பாறைக்கு பக்கத்தில் படுத்துத் தூங்க வேண்டும். தூக்கத்தில் எந்த கடவுளுக்கு சிலை செய்யப் போகிறாரோ, அந்தக் கடவுள் ஸ்தபதியின் கனவில் வந்தால் உத்தமம். பாறையை தட்டிப் பார்த்து, ஆண் கல், பெண் கல் என்று அடையாளம் காணுவோம். ஒரு உலோகத்தில் தட்டினால் என்ன ஒலி வருமோ, அதுபோல ஆண் கல்லில் ஒலி வரும். ஜலதரங்கம் வாசிக்கும்போது கேட்கும் ஒலியை, பெண் கல்லில் கேட்கலாம். ஆண் கல்லில் ஆண் தெய்வங்களும், பெண் கல்லில் பெண் தெய்வங்களும் செய்வோம். மற்றக் கல்லை தரை, படிகள், மதில் போன்றவைகளுக்கு உபயோகிப்போம். ஒலி மூலமாக கல்லைக் கண்டுபிடிப்பது என்பது அனுபவம். ஒலி மிகச் சரியான கணிப்பாக இருக்கும். பாறையில் விரிசல் இருக்கக்கூடாது. அதேபோல், பாறைக்குள் தேரை இருக்கும் கல்லை உபயோகிக்கமாட்டோம். தேர்ந்தெடுத்த பாறை, முழுக்க சந்தனம் தடவி, பல மணி நேரம் கழித்து காய்ந்தவுடன் பார்த்தால், தேரை இருக்கும் இடம் மட்டும் சந்தனம் காயாமல் இருக்கும். இதுதான் கல்லுக்குள் தேரையை கண்டுபிடிக்கும் வழி. சில சமயம் பாறையை தேர்ந்தெடுத்து சிலை செய்யும்போதே உள்ளுக்குள் விரிசல் தெரியும். உடனே பணியை நிறுத்திவிட்டு வேறு பாறையை தேர்ந்தெடுப்போம்.

சிலை வடிப்பதைப் பற்றிச் சொல்லுங்கள். முதலில் எங்கிருந்து தொடங்குவீர்கள்?

சிலை செய்வது ஒரு விதத்தில் தியானம் போன்றது தான். மனசும், அறிவும் சிலைக்குள் சங்கமமாக வேண்டும். முதலில் தலைப்பகுதியில் தொடங்குவோம். ஒரு அவுட்லைன் உருவாக்கி தொடருவோம். தலையிலிருந்து கால்வரை உள்ள பாகங்கள் எல்லாவற்றுக்கும் அளவு இருக்கிறது. குணம், ரவி, நயனம், ருத்ரை, சோடசம், சத்சடாங்கம், அலை அலை, ரச, குணம் பாகங்கள் என்று அந்த அளவுகள் குறிக்கப்படுகின்றன. சிலையை செங்குத்தாக பிரித்து, அந்த அளவுகள்படி வடிவமைக்கவேண்டும்.

சிலைக்கு ‘கண் திறத்தல்’ என்பது முக்கியமான நிகழ்வல்லவா?

தெய்வச் சிலை செய்த பிறகு, 48 நாட்கள் ஜலத்திலும், 48 நாட்கள் நெல்லிலும் வைத்திருக்க வேண்டும். பின்னர் பீடத்தில் நிறுத்தி, தோஷங்கள் போக்க ஹோமம், பூஜைகள் செய்ய வேண்டும்.

சிவன், பெருமாள், அம்பாள் சிலைகளை மூலஸ்தானத்தில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? என்பதற்கு கணக்குகள் உண்டு. சிற்ப சாஸ்திர மந்திரம், ஆகம மந்திரம் இரண்டும் இப்போது கலந்துவிட்டது. கண் திறக்க நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும். கண் திறக்கும் போது மூலஸ்தானத்துக்குள் ஸ்தபதி மட்டுமே இருப்பார். திரை போடப்பட்டிருக்கும். மண்டபத் தில் கர்த்தாவைத் தவிர (திருப்பணி செய்பவர்) யாரும் இருக்கக்கூடாது.

கண் திறப்பதற்கு என்று வைத்திருக்கும் பிரத்யேக ஊசியால் கண்களைத் திறப்போம். இதற்கும் அளவுகள் உண்டு. வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். எனவே சூரியன், சந்திரனுக்கான மூல மந்திரம் சொல்வோம். நெற்றிக் கண் திறக்கும்போது அக்னிக்கான மூல மந்திரம் சொல்ல வேண்டும். திறக்கப்பட்ட கண்களின் பார்வை சம திருஷ்டியாக இருக்க வேண்டும். பின்னர் தேன், பால் இரண்டையும் கலந்து, வெள்ளி ஊசியால் சொட்டுசொட்டாக எடுத்து, கண்களில் விடுவோம். பின்னர், திரை விலகும்போது ஸ்வாமியின் நேர் எதிரில் பசுவும் கன்றும் தான் முதலில் தெரிய வேண்டும். அடுத்தது கண்ணாடி; பின்னர் சுமங்கலிகள், கன்னிப்பெண்கள், வைதீக பிராமணர்கள் ஆகியவர்களை நிறுத்தி, பின்னால் யானையையும் நிறுத்துவார்கள். ஸ்தபதிக்கு உரிய மரியாதைகள் செய்யப்பட்டு வாத்யத்துடன் வீட்டுக்கு கொண்டு விட வேண்டும்.

உங்களுக்கு சவாலாக இருந்த பணியைப் பற்றி...


இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு சிற்பப்பணி செய்திருக்கிறோம். ஒவ்வொரு வேலையும் சவால்தான். வேலூர் தங்கக் கோயில் பணி ஏழு வருடம் நடந்தது. மூலஸ்தானத்தில் வைக்க லட்சுமி நாராயணி சிலையை ஏழுமுறை செய்தும் சக்தி அம்மாவுக்கு திருப்தி இல்லை. எட்டாவது முறைதான் பூரண திருப்தி. அந்தப் பணிகளின் போது, நிகழ்ந்த அற்புதங்கள் அநேகம். இப்போது ஸ்ரீலங்காவில் சீதை சிறை வைக்கப்பட்ட நுவரேலியா அசோகவனத்தில், சீதைக்கான கோயில் கட்டுவதில் இறங்கியிருக்கிறேன். இந்தக் கோயிலை, அந்த நாட்டு அரசு கட்டுகிறது. அதே போல, கரூர் அருகில் காவிரிக் கரையில் மகேந்திர மங்கலம் என்ற ஊரில் மகா பெரியவர் சன்னியாசம் வாங்கிய பிறகு, 5 வருடம் வேத அப்பியாசம் பயின்றார். அங்கு பூமியில் கண்டெடுக்கப்பட்ட லிங்கத்தை வைத்து கோயில் கட்டும் வேலைகளும் நடக்கின்றன.

Comments