தோளில் தொற்றிய கிளி!

பளபளவென்று பட்டாடையும், ஆபரணங்களும் அணிந்து நிற்கிறார் ஆண்டாள். ஆண்டாளின் தோளில் கிளியைக் காண்கிறோம். எதற்காகக் கிளி? சொன்னதை மாற்றிச் சொல்லத் தெரியாது அதற்கு. தூது செல்ல உகந்தது. தன்னுடைய உள்ளம் கவர்ந்த நாதனைப் பற்றி, அவனிடம் தான் கொண்டுள்ள மாறாக் காதலைப் பற்றி, தான் சொன்னதை, திரும்பத் திரும்ப அந்தக் கிளி சொல்லக் கேட்டு ஆனந்தப்படவே, அதைத் தோளில் கொண்டிருக்கிறாளோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டாளுக்கு பகவானை அடையும் வழியை காட்டியவர்கள் கோபியர்கள்.

நீலமேகச் சியாமளனான கிருஷ்ணனைக் காணாமல் துயருற்றார்கள் கோபியர்கள். தங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவனைக் காண விரும்பித் துடித்தார்கள். யமுனையின் மணல் திட்டில், அதிகாலைப்பொழுதில் மாயையான துர்க்கைக்கு, சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபட்டனர். நோன்பிருந்து வழிபட்ட கோபியர்க்கு ஸ்ரீதுர்காதேவி கண்ணனைக் காட்டினாள். கண்ணனின் அருட்கடாக்ஷத்தைப் பெறச் செய்தாள்.

அந்தக் கோபிகையர்களைப் போன்றே, பாவை நோன்பை மேற்கொண்டாள் ஆண்டாள் நாச்சியார். பாமாலை சூட்டிய வண்ணம் விரதத்தை மேற்கொண்டாள். அப்படி, பாவை நோன்பிருந்த ஆண்டாளுக்கு, 27வது பாசுரமான, ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்னும் பாசுரத்தை மொழிந்த பொழுதுதான், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரம் அளித்தாராம் பகவான்.


சரி; கூடாரை என்றால் என்ன பொருள்? தன்னை வந்து அடையாதவர்கள்; எதிர்ப்பவர்கள் என்று அர்த்தம். பகவான் அவர்களை இரண்டு வகையில் வெல்கிறான். எப்படி? எதிர்ப்பவர்களை ‘அம்பால்’ வெல்கிறான்; தன்னைச் சரணென்று அடையாதவர்களை, தம் அளப்பரிய கருணை வெள்ளத்தால் வெல்கிறான். அதுதான், கூடாரைவல்லி நாளின் மகத்துவம்! அந்த நன்னாளே, ‘கூடாரைவல்லி’ என்று கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில், ‘அக்கார அடிசில்’ என்னும் சர்க்கரைப் பொங்கலை நைவேத்யமாக படைக்கிறார்கள். மனம் ஒன்றி பரந்தாமனை வழிபட்டால், அக்கார அடிசிலாக அவன் அருள் கைகூடும் என்று பொருளோ?

Comments