ஆதிசங்கரர் ஸ்தாபித்த மரகத லிங்கம்!

ஓங்கி உயர்ந்த அந்த மலையும் மலையையட்டிய வனமும் கண்டு பூரித்துப் போனார் அந்த மகரிஷி. சிம்மம் ஒன்று அமர்ந்திருப்பது போல் இருந்த அந்த மலையை வியந்து பார்த்தார். 'இந்த மலையடிவாரமும் மலையும் சக்தி வாய்ந்த இடமாக இருப்பதாக உள்ளுணர்வு சொல்லியது அவருக்கு!

எனவே தவம் இருப்பதற்கு இதுவே அருமையான இடம் என்று எண்ணியவர், அந்த வனத்தில் இருந்த திருக்குளத்தில் நீராடினார்; நெற்றியிலும் உடலிலுமாக விபூதியை தரித்துக் கொண்டார். மனதுள் சிவனாரைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இன்றி, கடுந் தவத்தில் மூழ்கலானார்!

நாட்கள் வாரங்களாயின; வாரங்கள் மாதங்களாக விரிந்தன; மாதங்கள் ஆண்டுகளாக வளர்ந்தன. இந்தக் காலங்களில் உக்கிரமான வெயில் முகத்தில் அறைந்தது; ஆனாலும் தவம் கலையவில்லை. சூறாவளியென காற்று சுழற்றியடித்து தேகத்தையே அசைத்தது; கண் திறக்கவே இல்லை. மலையெங்கும் மழை வெள்ளமென நீர் பெருகி வழிந்து ஓடியது; சிவ சிந்தனையிலேயே லயித்திருந்தார். ஊசியென உடலைத் துளைத்தெடுத்தது குளிர்; சின்ன நடுக்கம்கூட இன்றி, ஈசனையே நினைத்திருந்தார்.

ஒருநாள்... சுள்ளென்று வெயில் தாக்கியது; கூடவே... பூமியையே புரட்டிப் போடும்படியான சூறாவளி வீசியது; கொட்டோகொட்டென்று வெளுத்து வாங்கியது மழை; கிடுகிடுக்கச் செய்தது பனி. இத்தனைக்கும் நடுவே, அந்த மலையெங்கும் விபூதியின் மணம் கமழ்ந்தது. எவரோ ஒருவர் எதிரே நிற்பது போல் ஓர் உணர்வு மேலிட... மெள்ள கண் திறந்தார். எதிரே கோடி சூரியப் பிரகாசத்துடன் நின்று, அந்த மகரிஷிக்கு திருக்காட்சி கொடுத்து அருளினார் சிவபெருமான்!

'என் சிவனே! என் சிவனே...' என பரபரப்பும் பதைபதைப்புமாக... நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக சாஷ்டாங்கமாக விழுந்து சிவனாரை நமஸ்கரித்தார். 'என்ன வரம் வேண்டும் கேள்' என்றார் சிவனார்.

பூரித்துப் போன மகரிஷி, 'சிவ தரிசனத்தை விடவா வேறு வரம் வேண்டும் எனக்கு? இந்த எனது ஜன்மம் நிறைவுற்று விட்டது. அடியேனுக்கு எந்த வரமும் வேண்டாம். இந்தச் சிறியவனுக்கு அருள் புரிந்த இந்தப் பகுதியில் இருந்தபடி, உலக மக்கள் அனைவருக்கும் அருள் புரியுங்கள், ஸ்வாமி! அதுபோதும் எனக்கு!'' என்று வேண்டினார்.

'அப்படியே ஆகட்டும்' என அருளினார் சிவபெருமான். அதன்படி, அங்கேயே சுயம்பு மூர்த்தமாக திருக்காட்சி தந்தார். பிறகு, இந்த சுயம்புமூர்த்தத்தை மலையடிவாரத்தில் பிரதிஷ்டை செய்தார். பல காலங்கள் வழிபட்டு வந்தார் அவர்... காகபுஜண்டரின் சீடரான ஏரண்ட மகரிஷி!

சிங்கம் ஒன்று அமர்ந்திருப்பது போல் தோற்றம் அளிக்கும் மலை என்பதால், அந்த மலைக்கு சிம்ம மலை என்று பெயரிட்டார் ஏரண்ட மகரிஷி. அதுமட்டுமா? சுயம்பு லிங்கத்துக்கு சிம்மபுரீஸ்வரர் எனும் திருநாமத்தைச் சூட்டி வழிபட்டார்.

காலங்கள் ஓடின! நகரங்கள் பெருநகரங்களாக மாறின. கிராமங்கள் நகரங்களாயின. காடுகள் பலவும் நாடுகளாக, கிராமங்களாக முளைத்தன. இருந்த பாதைகள் மறைந்தன; புதிய பாதைகள் உருவாயின. இந்த நிகழ்வுகளில்... சிம்மபுரீஸ்வரர் ஆலயமும் சிதைந்து போனது. சுயம்பு மூர்த்தம் முதலான அனைத்துமே மண்ணோடு மண்ணாகிப் போனது!

இந்தக் காலகட்டத்தில்தான், பாரதநாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் அந்த மகான். கண் சொல்லும் இடத்தில் தங்காமல், மனம் கட்டளையிடும் இடங்களிலெல்லாம் முகாமிட்டு, மக்கள் பலருக்கும் உபதேசங்களை அருளினார்.



வடக்கு, தெற்கு பாகுபாடு இல்லாமல் தேசம் முழுவதும் இவருடைய திருப்பாதங்கள் பயணித்தன. 'இந்த மகான் நம்மூருக்கு வரமாட்டாரா... நல்லதா நாலு வார்த்தை சொல்ல மாட்டாரா...' என்று ஊர்மக்கள் பலரும் ஏங்கினர். அப்படி முகாமிட்டு, பூஜை செய்த ஊர்களில், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, மக்களை வழிபடச் செய்தார் அந்த மகான். இதையடுத்து இவர் முகாமிட்டு பூஜித்த தலங்கள் செழித்தன; செழித்து வளர்ந்தன. அமைதியும் நிம்மதியு மாக மக்கள் குறையின்றி வாழ்ந்தனர்.

இப்படித்தான் ஒருமுறை, சிம்மபுரத்துக்கு வந்தார் சுவாமிகள். சிம்ம மலையும் மலையடிவாரமும், ஏரண்ட மகரிஷியை தவம் செய்யத் தூண்டியது போலவே, சுவாமிகளுக்குள்ளும் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது. எனவே, சிம்மபுரத்தில் முகாமிட்டார் மகான்!

தினமும் பூஜை- புனஸ்காரங்களுடன், ஊர் மக்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு நல்லவற்றை உபதேசித்து வந்தார். ஒருநாள்... சிவ பூஜையில் சுவாமிகள் இருந்த போது, அவருக்கு ஏரண்ட மகரிஷி காட்சி கொடுத்து அருளினாராம்! இங்கே... சக்தி வாய்ந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதை விவரித்தாராம்! இந்த ஊர் மட்டுமின்றி சுற்றியுள்ள பல ஊர்களையும் சிவபெருமான் செழிக்கச் செய்ததைச் சொன்னவர், இங்கே... லிங்கப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம்!

இதையடுத்து... சிம்மபுரம் என ஒருகாலத்தில் சிறந்து விளங்கிய அந்த ஊரில், லிங்கப் பிரதிஷ்டை செய்தார் அந்த மகான். அவர்... ஆதிசங்கரர்!

இதன்பிறகு, மொத்த கிராமத்து மக்களும் ஒன்றுகூடி வழிபடத் துவங்கினர். அந்த ஊர்... அவனியாபுரம் எனப்பட்டு பின்னர் ஆவணியாபுரம் என மருவியுள்ளது. சிவனாரின் திருநாமம்... ஸ்ரீஅவனீஸ்வரர்! இதையடுத்து வந்த மன்னர்கள் பலரும் ஆலயம் எழுப்பி, திருப்பணிகள் செய்துள்ளனர்.

காலங்கள் ஓடின!

ஜோதிடங்களில் பல வகைகள் உண்டு. இவற்றில் நாடி ஜோதிடம் எனப்படும் ஓலைச்சுவடி ஜோதிடமும் ஒன்று. சிதம்பரம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில், நாடி ஜோதிடத்துக்கு பெயர் பெற்று விளங்கும் அழகிய ஊர். இன்றைக்கு ஊருக்கு ஊர் நாடி ஜோதிடம் வந்து விட்டது.

இந்த நிலையில், சிம்மபுர சிவனாரை வழிபட்டால் சுபிட்சம் கிடைக்கும் என்கிறதாம் ஓலைச் சுவடிகள்! ஆனால் சிம்மபுரமும் தெரியாமல், சிம்மபுரீஸ்வர ரையும் அறியாமல் தவித்துப் போனார்கள் மக்கள்.

இதேபோல், 'சிம்ம ராசிக்காரர்கள் வந்து வணங்க வேண்டிய தலங்களில்... சிம்மபுரம் எனப்படும் அவனியாபுரத்துக்கு சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் சிவனாரை வணங்கினால் நலம் உண்டு' என்று ஜோதிடங்கள் சொல்ல... அவனியாபுரத்தையும் அங்கே அருள் பாலிக்கும் சிவாலயத்தையும் அறிய முடியாமல் தவித்துப் போனார்கள் பக்தர்கள்!



பல பயணங்கள்... தேடல்களுக்குப் பிறகு அவனியாபுரம் ஆவணியாபுரம் என மருவியதையும் அங்கே குடி கொண்டிருக்கும் ஸ்ரீஅவனீஸ்வரரையும் கண்டு கொண்ட மக்கள், அதிர்ந்து போனார்கள். சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, மிக பிரமாண்டமான ஆலயம், இப்போது சிதிலமாகி, சிறிய ஆலயமாக சுருங்கியிருப்பதைப் பார்த்தால் அதிர்ந்துதானே போவோம்! சுமார் 300 வருடங்களாக வழிபாடே இல்லாமல் இருந்ததாகச் சொல்கின்றனர்.

எங்கே இருக்கிறது இந்த ஆலயம்?

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவணியாபுரம். இந்த ஊரின் மலையடிவாரத்தில்... ஆமாம்... சிம்ம மலையின் அடிவாரத்தில், அழகுற அருள்பாலிக்கிறார்

அவனீஸ்வரர்! பாணம் மரகதத் திருமேனி யாக அமைந்துள்ளதை விசேஷமாகச் சொல்கின்றனர். பன்னெடுங்காலமாக சிதிலம் அடைந்து, புல்லும் புதருமாக இருந்த கோயில் என்பதால், சிலைகள் பலவற்றைக் காணோம். குறிப்பாக, அம்பாள் விக்கிரகத்தையே காணவில்லை என்கின்றனர் ஊர்மக்கள்.

ஓலைச் சுவடிகளில் இருந்த குறிப்புகள், கல்வெட்டுகளில் இருந்த தகவல்களைக் கொண்டு ஆலயத்தின் மகிமையையும் இறைவனின் சாந்நித்யத்தையும் அறிந்த ஊர் மக்கள், திருப்பணிக்குழு ஒன்றை நிறுவி, திருப்பணியைத் துவக்கியுள்ளனர்.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீஅவனீஸ்வரர் ஆலயம் சிதைந்த நிலையில் வழிபாடு இன்றி இருப்பதை அறிந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,

குறிப்பிட்ட ஒரு பெரிய தொகையைத் தந்து கோயில் திருப்பணிக்கு உதவினார் என்று சிலிர்ப்புடன் தெரிவிக் கின்றனர் திருப்பணிக் குழுவினர்.

கோபுரம், மதில், கொடிமரம்... ஆகியவற்றைக் காணோம். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபார்வதி. ஆனால், அம்பாளின் விக்கிரகமும் இல்லை. விஷ்ணு துர்கை மட்டுமே தரிசனம் தருகிறாள். இப்போதைக்கு அம்பாள் சந்நிதியில், விஷ்ணு துர்கையை வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆறுமுகமும் பன்னிரண்டு கரமும் கொண்டு பச்சை நிற மேனியராக காட்சி தரும் முருகப்பெருமான் கொள்ளை அழகு! 'இவருக்கும் ஸ்ரீவிநாயகருக்கும் தனிச் சந்நிதி அமைக்க வேண்டும்' என்று ஆர்வத்துடன் சொல்கின்றனர் திருப்பணிக் குழுவினர். முக்கியமாக... ஸ்ரீஅவனீஸ்வரரின் சந்நிதியைச் சுற்றி, கோஷ்ட மூர்த்தங்களை அமைக்க வேண்டுமாம்!

சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்ட லிங்கத்தை, ஏரண்ட மகரிஷி ஸ்தாபித்த இடம், ஸ்ரீஆதிசங்கரர் மரகத பாணத்துடன் கூடிய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம், பிரமாண்டமாக வளர்ந்து நின்ற ஆலயம்... இப்படி சீரும் சிறப்பும் இன்றி இருக்கலாமா?

விவசாயத்தையும் வியாபாரத்தையும் செழிக்கச் செய்த ஆலயமாம் இது! சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரக் கோயில் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. திருமணத் தடையை அகற்றி, பிள்ளை பாக்கியத்தையும் அருளுகிறாராம் ஸ்ரீஅவனீஸ்வரர்!

இத்தனை சாந்நித்யம் கொண்ட ஆலயத்தில், பூஜை, நைவேத்தியம், திருக்கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் என வழிபாடுகள் நடைபெற வேண்டாமா? எனவே, அவனீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணியில் பங்கேற்போம். இந்த அவனி செழிக்க அவனீஸ்வரர் அருளுவது உறுதி!

எங்கே இருக்கிறது?

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ளது ஆவணியாபுரம். ஆரணி - வந்தவாசி சாலையில் ஆரணியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவணியாபுரம் கூட் ரோடு. வந்தவாசியில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவு. இங்கிருந்து ஊருக்குள் பிரிந்து செல்லும் சாலையில் ஐந்து நிமிட தூரம் பயணித்தால், மலையையட்டி அமைந்துள்ள ஸ்ரீஅவனீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

ஸ்ரீஅவனீஸ்வரர் ஆலயத்துக்கு அருகிலேயே மலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. விசேஷமான திருத்தலம் இது!

கோயில் தொடர்புக்கு

எஸ். நீலமேகம்
(திருப்பணிக்குழு தலைவர்)
332, முதலியார் தெரு,
ஆவணியாபுரம் - 604 504
திருவண்ணாமலை மாவட்டம்
செல் 94432 93924

வி. மாசிலாமணி
(திருப்பணிக்குழு செயலாளர்)
ஸ்ரீபாரத் நவீன அரிசி ஆலை,
ஆவணியாபுரம் கூட் ரோடு,
திருவண்ணாமலை மாவட்டம்
செல் 97515 23688

Comments