ஒருமைக்கண் தான்கற்ற கல்வி

சமீபத்தில் ஒரு குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தேன். 'உனக்கு எந்தப் பண்டிகை பிடிக்கும்... தீபாவளியா, பொங்கலா?' என்று கேட்டேன். 'சரஸ்வதி பூஜை' என்று பளிச்சென பதில் சொன்னது குழந்தை. காரணம், அன்று பாடம் படிக்க வேண்டாமே!

படிப்பது என்ற சுகமான விஷயம், பலருக்கும் சுமையாகத் தோன்று கிறது. உடல்நலத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் தேவை. மனதுக்கு, நல்ல விஷயங்கள் தொடர்ந்து தேவை! புத்தகப் பிரியர்களுக்கு, எப்படிப் பொழுதைப் போக்குவது என்ற கவலையே இல்லை. இளமையிலும் முதுமையிலும்... வாழ்வின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் சரி, புத்தக வாசிப்புக்கு தங்களையே அர்ப்பணித்து விடுவர்.

வாசிப்பது- உயர்ந்த பழக்கமே! ஆனால், கண்டதையும் படிப்பது மனநலனுக்கு ஏற்றதல்ல. 'கண்டதைக் கற்பவன் பண்டிதனாவான்' என்ற பழமொழிக்கு சரியான அர்த்தம்- 'கண்டவுடன் கற்பவன் பண்டிதனாவான்' என்பதே!

ஊசியின் மூலம் செலுத்தப்படும் மருந்து, நரம்புகளின் வழியே உடலுக்குள் செல்வதைப் போல, நாம் படிக்கும் கருத்துகள், வேகமாக உள்ளத்துக்குள் சென்று ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையை திசைமாற்றும் ஆற்றல் படைத்தவை புத்தகங்கள். எனவேதான், படிக்கும் புத்தகத்தில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.



புத்தகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சில புத்தகங்களைப் படிப்பதால், நமக்கும் சமுதாயத்துக்கும் கேடு உண்டாகும். நம் மன அமைதியைக் கெடுத்து, அறிவை மழுங்கச் செய்யும், அறத்துக்குப் புறம்பானவற்றை பற்றிப் பேசும் அத்தகைய புத்தகங்களைப் பார்த்தால், ஒரு கும்பிடு போட்டு விலகிவிட வேண்டும்.

சில புத்தகங்களால், நமக்கோ சமுதாயத்துக்கோ கேடு இல்லை என்றாலும், பெரிய நன்மைகள் ஏதும் விளையாது. பொழுதுபோக்கு புத்தகங்களான இவற்றைப் படிக்க ஆரம்பிக்கும்போது, ஆர்வம் கொப்பளிக்கும்; படித்து முடித்தால் சப்பென்று ஆகிவிடும்!

சமுதாய அக்கறை கொண்ட ஆன்றோரால் எழுதப் பட்ட முதல்தர புத்தகங்கள் உள்ளன. அவை, நம் உள்ளத்தை உயர்த்தும்; மனிதனை அறவழியில் செலுத்தும். வாழ்க்கையின் குறிக்கோளை எடுத்துக் கூறி, அதனை அடையும் வழியையும் காட்டும். இத்தகைய புத்தகங்களை தேடித் தேடிப் படிக்க வேண்டும்.

மகான்கள், லட்சிய புருஷர்கள், சாதனையாளர்கள் ஆகியோரின் சரிதங்களைப் படிப்பது நன்மை பயக்கும். கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில், நமக்கு முன்னே பயணித்தவர்களின் அனுபவங்கள், நமக்கு உற்சாகத்தைத் தருகின்றன. வாழ்க்கையில் பெரிதாக சாதித்த பலரும், வறுமையான குடும்பச் சூழலில் பிறந்தவர்கள் என்பதையும், ஆர்வமும் உழைப்புமே அவர்களது மூலதனம் என்பதையும் இந்தப் புத்தகங்களிலிருந்து அறியலாம்.

உபநிடதங்கள், புராண- இதிகாசங்கள், திருக்குறள், திருமந்திரம் போன்ற நம் தேசத்து அறிவு நூல்களைப் படித்து முடிக்க ஆயுட்காலம் போதாது. நுனிப்புல் மேய்வது போல், அங்கொன்றும் இங்கொன்றுமாக வெறும் கதைப் பகுதியை அறிந்து கொள்வதால், பெரிய பயன் ஒன்றும் இல்லை. ராமாயணத்திலும், மகாபாரதத்திலும், திருக்குறளிலும் இன்றைக்கும் நமக்குப் பயன்படக்கூடிய நீதி நுணுக்கங்கள், மேலாண்மைத் தத்துவங்கள், வாழ்வியல் நெறிகள் கொட்டிக் கிடக்கின்றன. அறிவுப் பசிக்கு சரியான உணவளிக்கத் தெரிந்து கொண்டவர்களுக்கு, நிம்மதி தேடி வரும்.

கல்வியே உயர்ந்த செல்வம். இதை எவராலும் திருட முடியாது; அரசனால் அபகரிக்க முடியாது; சகோதரன் இதில் பங்கு கேட்க முடியாது; அது சுமையானதும் அல்ல. செலவு செய்யச் செய்ய கல்வி மென்மேலும் வளரும்.

வெள்ளத்தால் அழியாது; வெந்தழலால்வேகாது; வேந்தராலும்
கொள்ளத்தான் இயலாது; கொடுத்தாலும்குறையாது; கொடிய தீய
கள்ளத்தால் எவராலும் களவாடமுடியாது; கல்வி என்னும்
உள்ளத்தே பொருள் இருக்க உலகெங்கும்
பொருள்தேடி உழல்வது என்னே?

- என்று, கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு எதனால் என்பதை விவரிக்கிறது விவேக சிந்தாமணி.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

- ஒருவர் கற்ற கல்வியானது பிறவி தோறும் தொடர்ந்து வரும் என்கிறார் திருவள்ளுவர்.

வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி

- என கல்விச்சாலைகள் அமைப்பதையே சரஸ்வதி பூஜை என்கிறார் பாரதியார்.

மதிப்பெண் பெறுவதற்காகப் படிப்பது வேறு; அறிவை வளர்ப்பதற்காகப் படிப்பது வேறு. வாழ்வில் மேன்மையடைய விரும்பும் ஒவ்வொருவரும் நல்ல புத்தகங்களை நாடிப் படிக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியப் பெருமக்கள், தங்கள் அறிவை விசாலப் படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

முருகன் கையில் உள்ள வேல் அறிவைக் குறிக்கும் சின்னம். அறிவானது வேல் போன்று ஆழமாகவும், அகன்றதாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும்.

நல்ல கருத்துகளைப் படித்தல், பெரியோரிட மிருந்து கேட்டல், படித்ததையும் கேட்டதையும் சிந்தித்து உள்வாங்கி, அதன் மயமாகுதல்... இதுவே அறிவை வளர்க்கும் முறை. மெய்யறிவின் துணை யுடன்தான் மனிதன் துன்பக் கடலைத் தாண்ட முடியும். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்றார் திருவள்ளுவர்.

சிறந்த நூல்களைப் படிப்பதால், தெளிவு பிறக்கிறது; தன்னம்பிக்கை, ஊக்கம், உற்சாகம் ஆகிய உயர் குணங்கள் ஓங்கி வளர்கின்றன; வீண் பேச்சு குறைகிறது. தெளிவாக சிந்திக்கத் துவங்குவதால், வாக்கில் தெளிவும் செயல்களில் நேர்த்தியும் மிளிர்கிறது.

'ஒரு புத்தகம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது' என்று சொல்லும்படி, வாழ்க்கை வானில், பட்டாம் பூச்சியாக சிறகடித்துப் பறக்க கற்றவை உதவ வேண்டும்.

சிலர், நிறைய படித்திருப்பார்கள். வீடு முழுவதும் புத்தகங்களே நிறைந்திருக்கும். எதைப் பற்றிக் கேட்டாலும், புள்ளி விவரத்துடன் துல்லியமாகப் பேசுவார்கள். ஆனால் அந்த அறிவினால், இவர்களுக்குப் பயன் இருக்காது!

புத்தக அறிவு, உள்ளத்தை மலரச் செய்து, அறிவை கூர்மைப் படுத்த வேண்டும். வெறும் தகவல் சேகரிப்பால் ஒருவனுக்கு மன நிம்மதி ஏற்படாது. மாறாக... படிப்புக்கும், பேச்சுக்கும், நடத்தைக்கும் இடையே மிகப் பெரிய பிளவு உண்டாகி, தனது உண்மையான இயல்பு எதுவென்று அறிய முடியாத அளவுக்கு குழப்பம் ஏற்பட்டு விடும்.

இன்னும் சிலர், தங்களது அந்தஸ்தை வெளிக்காட்டும் விதம், புத்தகங்களை வாங்கி அலங்காரமாக அடுக்கி வைப்பர். வாசிப்பது என்பது, 'நான் இவ்வளவு புத்தகங்கள் படித்திருக்கிறேன்' என்று பீற்றிக்கொள்வதற்காக அல்ல!

சிலர், தங்களை அடையாளப்படுத்த, பெயருக்குப் பின்னால் பட்டங்கள் பல சுமப்பர். இன்னும் சிலர், படிக்கிறேன் பேர்வழி என்று தங்களது அகங்காரத்தைக் கூர்தீட்டுவர். இவர்களெல்லாம்... அகங்காரத்தைத் தொலைப்பதற்கே கல்வி துணைபுரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நிறையப் படிப்பதால், வாழ்க்கையைக் குறித்த தேடல் அதிகமாகும். தேடலால், குருநாதர் ஒருவரது வழிகாட்டுதல் கிடைக்கும். நமது உண்மையான இயல்பு பற்றிய அறிவை சாஸ்திர நூல்கள் வழங்குகின்றன. அவற்றை நாமாகப் படிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குருவின் திருவடி நிழலில் அமர்ந்து மெய்யறிவைப் பெறுவதற்குரிய தகுதியை, நாம் படிக்கும் நூல்கள் நமக்கு வழங்க வேண்டும்.

நமது பண்டைக்கால கல்வித்திட்டத்தில் அகராதியையே மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. இன்று, மக்களுக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது. ஓலைச் சுவடிகளில் இருந்தவை நூல்களாகி, குறுந்தகடுகளில் காப்பாற்றப்பட்டும்... அந்த அறிவுச் செல்வத்தை நாம் பயன்படுத்தவில்லை எனில், நம்மை விட முட்டாள் வேறு எவரும் இல்லை.

மதிப்பெண் பெற மட்டுமே திருக்குறளைப் படித்து, மறந்தும் விட்டோம். வாழ்க்கையின் பல பிரச்னைகளுக்கும் தீர்வு திருக்குறளில் உண்டு. தமிழ்நாட்டில் திருக்குறள் தெரியாதவர் எவரும் இல்லை என்ற நிலை வர வேண்டும் என்பதே எனது கனவு. தினமும் சில குறட்பாக்களையாவது மனனம் செய்யுங்கள். அதன் பொருளை சிந்தியுங்கள். நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, குழந்தைகளை வாசிக்க உற்சாகப் படுத்துங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும், ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது வாழ்க்கைக்குப் பயனுள்ள நூல் ஒன்றை வாசிக்க உறுதி பூணுங்கள். நல்ல நூல்களை ஓதி, வாழ்வில் உயர்வடைய வாழ்த்துகள்!

Comments