ஆணையை ஏற்றவர்!

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்

தங்கள் உச்சியாய்

அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆனாய்

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு

காலனையே

(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7 - பதிகம் 92 - குறிஞ்சி)

- ‘உன்னைப் போற்றிப் பேசுபவர்களுடைய போற்றுதல்களில் உறைபவனே, என்றும் உன்னை நினைப்பவர்களின் தலைமீது வசிப்பவனே, படமெடுத்தாடும் பாம்பை இடையில் அணிந்தவனே, முதலும் முடிவும் ஆனவனே, முல்லை நிலங்களும் சோலைகளும் சூழ்ந்த திருப்புக்கொளியூர் என்னும் திருத்தலத்தில் அவிநாசித் திருக்கோயிலில் அவிநாசியப்பராக எழுந்தருளியவனே, முதலையையும் யமனையும் குளக்கரையில் விழுங்கிய பிள்ளையைத் தரச் சொல்லு’ என்று இரக்கமும் இறைஞ்சுதலும் சினமும் சீற்றமும் கலந்ததாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய திருப்பாட்டு இது.

துன்பங்களை நாசம் செய்தருளும் பெருங்கேடிலியப்பராக அவிநாசியப்பர் என்னும் திருநாமத்தோடு ஐயனும், அரவணைத்துப் பாதுகாக்கும் பெருங் கருணை நாயகியாக கருணாம்பிகை என்னும் திருநாமத்தோடு அம்மையும் காட்சி கொடுக்கும் திருத்தலமான அவிநாசியில், பிள்ளையை இழந்து தவித்த பெற்றோரின் துயரத்தைப் போக்கி, அவர்களுக்குப் பிள்ளையை மீட்டுத் தந்த அற்புதத்தை நிகழ்த்திய பாடலும் இதுவேயாகும்.

சுந்தரர், திருவாரூரிலிருந்து சேரநாட்டுக்குப் புறப்பட்டார். வழியில் கொங்கு நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டே சென்றார். திருப்புக் கொளியூர் என்று அந்நாட்களில் அழைக்கப் பெற்ற அவிநாசியை அவர் அடைந்து ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பக்கம் இனிய மங்கலவொலி கேட்டது; மற்றொரு பக்கம், அழுகுரல் கேட்டது. இரண்டு ஒலிகளும் கலந்தொலிக்க, சுந்தரரும் அவை குறித்து விசாரித்தார். அந்த வீதியில், கங்காதரன் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார். நெடுநாட்கள் பிள்ளையின்றிப் பின்னர் மகன் பிறக்க, அவனுக்கு அவிநாசி லிங்கம் என்றே பெயர் சூட்டி வளர்த்தனர். அந்த பாலகனுக்கு ஐந்து வயதாகையில், அதே வயதுக்குரிய எதிர்வீட்டுப் பிள்ளையோடு ஆற்றுப்பகுதிக்கு விளையாடச் சென்றான். சிறிது நேரத்துக்குப் பின், ஆற்று முதலை அவிநாசிலிங்கத்தைப் பிடித்து விழுங்கிவிட்டது. எதிர்வீட்டுச் சிறுவன் அழுது கொண்டே வர, பெரியவர்கள் ஓடிப்போய் ஆற்றுப் பகுதியில் தேட, கரையிலிருந்து பார்க்கும்போது முதலையின் சுவடு தெரியவில்லை. எங்கே அது பதுங்கியிருந்தது என்றும் புரியவில்லை. கங்காதரனும் அவர்தம் மனைவியும் ஆற்றில் இறங்க முற்பட்ட போது, மற்றவர்கள் தடுத்துவிட்டனர்.

நாட்கள் நகர்ந்து ஆண்டுகளும் ஓடிவிட்டன. இப்போது, மூன்றாண்டுகளுக்குப் பின்னர் எதிர்வீட்டுச் சிறுவனுக்கு உபநயனம். அந்த வீட்டில் மங்கல இசை முழங்குகிறது. தங்கள் பிள்ளையும் உயிருடன் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் செய்திருப்போமே என்கிற ஆற்றாமையில் கங்காதரன் வீட்டில் அழுகுரல். இரண்டும் கலந்து சுந்தரர் திருச்செவிகளில் ஒலித்தன.

விஷயத்தை சுந்தரர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, அவருடைய வருகையை அறிந்த கங்காதரனும் அவருடைய மனைவியும் அங்கு வந்தனர்; தம்பிரான் தோழரைத் தொழுதனர். ஊரார் அடையாளம் காட்ட, ‘உங்கள் பிள்ளையா ஆற்றுமுதலையால் அநியாயமாக விழுங்கப்பட்டவன்?’ என்று வினவினார். ‘இறைவன் விளையாட்டு! என்ன செய்வது?’ என்று மனம் தேறி விடை தந்தனர் பெற்றோர். ‘அந்தப் பிள்ளையை மீட்காமல் அவிநாசியப்பரைத் தொழேன்’ என்று உறுதிகொண்ட சுந்தரர், ‘வாருங்கள், அவன் விழுந்த இடத்தைக் காட்டுங்கள்’ என்று அனைவரையும் அழைத்தார்.

பாலகர்கள் விளையாடிய இடத்தை அடைந்த சுந்தரர் இறைவனாரைத் தொழுது பாடத் தொடங்கினார். ‘நீரில் விளையாடிய பிள்ளையின் தவறென்ன?’ என்கிற தொனியில் பாடியவர், பதிகத்தின் நான்காம் பாடலில், ’கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என்று ஆணையிட்டார்.

சுந்தரர் ஆணையைச் சிவனார் மீறுவாரா? காலதேவனான யமனுக்கு எப்படி ஆணை போயிற்றோ தெரியாது. காலன், தனதுலகிலிருந்து அப் பிள்ளையை ஆற்று முதலையின் உடலுக்குள் புகுத்தினானாம். சுந்தரரும் பிறரும் நின்ற கரையின் பக்கம் சர்வ சாதுவாக ஒதுங்கிய முதலை, பாலகனைத் தனது வாயிலிருந்து உமிழ்ந்தது. என்ன அதிசயம்! பிள்ளை உயிருடன் வந்தான் என்பது மட்டுமில்லை; இடைப்பட்ட ஆண்டுகளின் வளர்ச்சி குன்றாமல், பொலிந்த தோற்றத்தோடு வெளிப்பட்டான்.

பிள்ளை மீண்டும் கிடைத்ததால், புத்தொளி பெற்ற பெற்றோரையும், முதலை வாய் மீண்ட அப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு, அவிநாசியப்பரைத் தரிசித்த சுந்தரர் அடுத்த நாள், அந்தப் பிள்ளைக்கும் உபநயனம் செய்து வைத்தார்.

இந்தப் பாடலில், சுந்தரர் வாக்கு அலாதியானது. முதலையை மட்டுமல்லாமல் காலனையும் சேர்த்துச் சொல்லி, இருவரையும் பிள்ளையைத் தரச் சொல்லு என்று சிவபெருமானுக்கு ஆணையிடுகிறார். முதலைதானே பிள்ளையை விழுங்கியது, யமனைக் கூறுவானேன் என்று வினவலாம். என்னதான் முதலை விழுங்கினாலும், உயிரைக் கொண்டுபோய் யமனிடம்தானே சேர்த்திருப்பான்! கிருஷ்ணாவதாரத்திலும் இப்படியொரு சம்பவம் உண்டு. சாந்தீபனியின் பிள்ளை கடலில் மாய்ந்துபோக, அவனை மீட்டுத் தரும்படி குருபத்தினி கிருஷ்ணரிடம் கேட்கிறாள்.

கடலுக்குள் கிடக்கும் பஞ்சஜனன் என்னும் சங்கு வடிவ அரக்கன் அப்பிள்ளையை விழுங்கினான் என்பதால் அவனிடம் கிருஷ்ணர் போரிட, அவனோ அப்பிள்ளையை யமலோகத்தில் விட்டுவிட்டேன் என்றுகூற, பின்னர் யமனிடம் சொல்லி அப்பிள்ளையை கிருஷ்ணர் வரவழைத்தார். இரண்டு முறை தனித்தனியாகப் போராடுவானேன் என்றெண்ணிய சுந்தரர், ஒற்றை வரியில் ஒட்டுமொத்தமாக ஆணையிட்டுவிட்டார் போலும்!! விழுங்கிய முதலை உடலைத் தர, யமன் உயிரைத் தர, சிவனாரன்றோ அருள்தர வேண்டும்? ஆகவே, ஆணை முதலைக்கும் யமனுக்கும் மாத்திரமில்லை; சிவனாருக்கும் சேர்த்துத்தான்!

அடியாரின் அன்பு, எத்தகையவற்றையெல்லாம் சாதித்துக் கொடுக்கும் என்பதற்கான சான்று அவிநாசி திருத்தலம்! பழைய காலங்களில், இவ்வூருக்குப் புக்கொளியூர் நத்தம் என்றே பெயர். அவிநாசி என்பது ஆலயத்திற்கும் அதைச் சுற்றிய பகுதிகளுக்கும் வழங்கப்பட்ட பெயர். இப்போது ஆறு பாயவில்லையென்றாலும், சிறிய ஏரி காணப்படுகிறது. முதலை மடு என்றே பெயர். சுந்தரர் காலத்தில் இங்கே ஆறோடி, பின்னர் திசைமாறி, ஏரியாக மட்டுமே தங்கிவிட்டது. உயிர்களுக்கு உய்வு தருகிற தலமாதலால், தட்சிண காசி என்றும் பெயர். இரண்டு அம்பாள்கள் அருள்புரியும் இங்கு, தலமரமான பாதிரியின் அடியில் அம்பாள் தவமிருக்கிறாள். ஆகவே, பாதிரிமர அம்பாளைத் தரிசித்த பின்னரே சுவாமியைத் தரிசிப்பது இங்கு முறை.

பாதிரி மரம், சித்திரைப் பெருவிழாவின்போது மட்டுமே பூக்கும்;

சுவாமிக்கு, தன்னுடைய மலர்களைக் காணிக்கையாக்குவதாக ஐதிகம். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கால பைரவர் வெகு விசேஷமானவர்; காசி பைரவரின் மூத்த சகோதரராகக் கருதப்படும் இவருக்கு வடைமாலை சாத்துவது வெகு சிறப்பு. எதிரிகள் தொல்லை நீங்கும்.

தனிச் சன்னிதி அம்பாள், சுவாமிக்கு வலதுபக்கமாக எழுந்தருளியிருக்கிறாள். அம்பாள் சன்னிதி சுவரில், தேள் உருவம் காணப்படுகிறது. அம்மனை வழிபட்டால், விஷ ஜந்துக்களால் ஏற்படும் துன்பங்களும் நோயும் உடனடியாக நீங்கும். இந்தக் கோயிலில் சனைச்வரர், அபயஹஸ்தம் தாங்கியவராக வாகனத்தோடு காட்சி தருகிறார். சனித் தொல்லை அகல வசிஷ்டர் இங்கு வழிபட்டதாகவும், தோஷங்களைப் போக்கும் அபயமூர்த்தியாக இங்கு தங்குவதற்கு சனி சம்மதித்ததாகவும் ஸ்தல புராணம்.

முதலை மடு ஏரிக்கரையில் சுந்தரருக்குத் தனிச் சன்னிதி உள்ளது. அங்கும், அவிநாசி பிரதான ஆலய வாயிலிலும் முதலையுண்ட பாலகன் மீண்டுவரும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சேரநாட்டுப் பகுதிகளில், கோயிலுக்கு முன்னால் தீபஸ்தம்பங்கள் இருக்கும். அதுபோன்றே இங்கேயும் உண்டு. பழங்காலத்தில் மைசூர் மன்னர்கள், பட்டமேற்பதற்கு முன்பாக காசிக்குச் சென்று, அங்கிருந்து லிங்கம் கொண்டுவந்து அவிநாசியில் பூஜை செய்து வழிபட்ட பின்னரே, பட்டம் சூடுவராம்.

பங்குனி உத்திர விழாவின்போது, முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் மீட்கும் காட்சியும் அவனுக்கான உபநயன திருக்கல்யாணக் காட்சியும் நிகழ்த்தப் பெறுகின்றன. ’காசியில் வாசி அவிநாசி’ என்பார்கள். காசியில் வழிபடமுடியவில்லையென்றால், அவிநாசியில் வழிபட்டால் போதும்; அங்கு கிட்டுவதில் பாதிக்குக் குறையாமல் இங்கு கிட்டும் என்பது பொருள். அவிநாசியப்பரை அணுகுவோம்; அகலா அருள் பெறுவோம்!

Comments