பழனி வளர் கருணை மழை!

வைராக்கிய சீலரான ஆதிசங்கரர், தாம் இயற்றிய ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தில் ஒரு வாத்ஸல்யம் மிகுந்த காட்சியை இடம்பெறச் செய்கிறார்: பார்வதியின் மடியில் அமர்ந்திருக்கிறானாம் பாலமுருகன். பரமேசுவரன் இரு கரங்களையும் நீட்டி, “இங்கே வா கண்ணே!” என்று ஆசையோடு அழைக்கிறாராம். உடனே குட்டி முருகன் எழுந்து ஓடி அப்பாவிடம் செல்ல, அவர் அவனை அப்படியே வாரி அணைத்துக் கொள்கிறாராம்! ‘அப்படிப்பட்ட குமாரக் கடவுளை நான் தியானிக்கிறேன்’ என்று புஜங்கத்தின் பதினெட்டாவது சுலோகத்தை முடிக்கிறார் பகவத்பாதர்.

இத்தகைய ஒரு தருணத்தில்தான் நாரதர் கையிலாயத்தில் நுழைந்திருக்கிறார். அவர் கையிலே மாங்கனி ஞானப்பழம்! பார்வதியிடம் அதனைக் கொடுக்கிறார். பார்வதி தமது குழந்தைகளுக்கு அதைத் தர முற்பட, “உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே மாங்கனி” என்று சிவனார் போட்டி வைக்க, பெற்றோரையே குடு குடுவென்று சுற்றி வந்து போட்டியில் ஜெயித்து, பிள்ளையார் பழத்தைப் பெற்றுக்கொள்ள, மயில் வாகனத்தில் ஜிவ்வென்று உலகை வலம் வந்திறங்கிய முருகன் ஏமாற்றமடைந்து, கோபத்தில் ஆண்டிக்கோலம் பூண்டு, பழநி மலையில் போய் நின்றுகொண்டானாம். அந்தக் கோலத்தில்தான் இன்றும் அங்கே காட்சியளிக்கிறான். கோவணாண்டியாக!

முருகன் ஒன்றும் கோபித்துக்கொண்டு போகவில்லை. அண்ணாவைப் போல் தமக்கு ஞானம் இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் ஆபரண ஆடைகளையெல்லாம் துறந்து ஞானத் தேடலுக்காகத்தான் போனான் என்று சொல்லும் வழக்கமும் உண்டு. அதன்பிறகு தந்தைக்கே உபதேசிக்கும் அளவுக்கு, அவனே சுவாமிநாத சுவாமியாக விளங்கியவன்தானே! எப்படியாயினும் குன்றங்கள் குமரனுக்கானவை என்பது தமிழ் நாட்டின் மகிழ்ச்சிகரமான மரபு. பழநி மலையோ அறுபடை வீடுகளுள் ஒன்று என்பதுடன், முருக பக்தியின் முழு வடிவமாகத் திகழ்ந்த அருணகிரிநாதருக்கு மிகப் பிடித்தமான தலம். பல்வேறு ஊர்களுக்குரிய திருப்புகழ் பாக்களில்கூட எப்படியோ ஆவினங்குடியாகிய பழநியைப் புகுத்திப் புகுத்திப் பாடி வைத்துள்ளார் அவர். பழநிக்கென்றே தனியாகப் பாடிய திருப்புகழ்களும் உண்டு.

திருப்புகழின் பக்தி மணத்தையும் பொருள் செறிவையும் குழைத்து எளிமைப் படுத்தி, அதே பழநி முருகனைப் பாடுகிறார் பாபனாசம் சிவன்.

கா வா வா கந்தா வா வா’ என்ற வராளி ராகப் பாடல். பரமேசுவரன் முருகனை ‘வா! வா’ என்று அழைத்தது போல் வாத்ஸல்யத்துடன் அழைத்தாலும் வேதாந்த வேண்டுதலுடன் முற்றுப்பெறுகிற கீர்த்தனை. ‘தேவாதி தேவன் மகனே வா! பரதேவி மடியில் அமரும் குகனே வா! என்று சுப்ரமண்ய புஜங்க காட்சியை விவரித்து, ‘பாபத் திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணை மழையே!’ என்று முருகனிடம் தஞ்சமடைகிறது அவர் நெஞ்சம்.

சிறந்த பாடகர்கள் இப்பாடலை உருக்கமாகப் பாடினால், ‘பழநி வளர் கருணை மழையே’ நாம் கண்ணீர் மழை பொழியச் செய்துவிடும்.

ஆனால் நாம் வா! வா! என்று அழைத்தால் முருகன் நம்மிடம் எளிதில் ஓடி வந்துவிடுவானா? நாம்தான் அவனைத் தேடி ஓடிப் போக வேண்டும். அதிலும் பழநி மலைப் படிகளை, சராசரி ஆரோக்கியம் படைத்த யாரும் ஓடிச் சாடி ஏறிவிடலாம். அதை விரும்பாதோர் யானையடிப் பாதை வழியே நடந்தோ அல்லது ‘விஞ்ச்’ ஏறியோ சௌகரியமாக பழநி மலை உச்சியை அடைந்துவிடலாம். அகன்ற வெளிச்சுற்றைக் கடந்து மண்டபங்கள் சிலவற்றைக் கடந்து தான் மூலஸ்தானத்தை அடைய முடியும். நித்யமே திருவிழாக் கூட்டம்தான் இங்கு. பொறுமை காத்து தரிசன வாய்ப்புப் பெற வேண்டும். கால பூஜை யோடு அபிஷேகங்கள் இடையறாது நடைபெறுவதால், அபிஷேகத்துக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தி, சற்று ஆசுவாசத்துடன் அமர்ந்தும் தரிசிக்கலாம்.

சின்னஞ்சிறு சன்னிதிதான். அதிலே நின்ற கோலத்தில் காவிக் கோமணத்துடன் நிற்கும் முருகனின் சிரிப்பில், ‘பழனி வளர் கருணை மழையே!’ என்பதற்கான முழுப் பொருளையும் உணர்கிறோம். தமிழ்க் கடவுளான அவனை போகர் என்ற சித்தர் நவபாஷாண கலவை கொண்டு உருவாக்கியிருக்கிறார். ஒன்பது வகை மூலிகைகளின் சேர்க்கையே நவ பாஷாணம். ஆகவே, அவன் மேனி தீண்டி வரும் தீர்த்தமும் பிரசாதங்களும் அசாதாரண சக்தி வாய்ந்தவை என்று நாம் நம்பி ஏற்கிறோம்; பழநி பஞ்சாமிர்தமும் விபூதியும் போட்டியின்றி முதலிடம் பெறுவது இதனால்தான். இங்கே வெறுமே உற்பத்தி ஆகி அபிஷேகத்துக்கென்று கருவறைக்குள் சென்று வராத திரவியங்களைக் கூட பக்தியுடன் வாங்கிச் செல்கின்றனர் யாத்திரிகர்கள்.

பழநி முருகன் அபிஷேகத்தின்போது ஓதுவா மூர்த்திகள் திருப்புகழ் பாடக் கேட்டால், அது நிகரற்ற இன்பம். அவ்வாறு வாய்க்கப்பெறாவிட்டால் நாமே நமக்குத் தெரிந்த பாக்களைப் பாடலாம். அல்லது ‘அரோஹரா!’ கோஷத்தில் சேர்ந்துகொண்டு சிலிர்க்கலாம். ‘ஹர ஓம் ஹர’ என்பதே மருவி ‘அரோஹர!’ வாகியிருக்கிறது என்று குருஜி திருப்புகழ் ராகவன் அளித்துள்ள விளக்கம் நினைவுக்கு வருகிறது.

காவடி எடுப்பது இந்தத் தலத்தில் மிக விசேஷமாகச் செலுத்தப்படும் பிரார்த்தனை என்பது நமக்குத் தெரியும். ‘காவடி’ என்பதுகூட மருவிய சொல்தான்! ‘காவு தடி’ என்பதன் திரிபு. தமிழ் முனிவரான அகத்தியர் கைலாய யாத்திரை சென்றாராம். அங்கே அவர் பார்த்த சிவகிரி சக்திகிரி என்ற சிகரங்களை, தென்னாட்டுக்கு எடுத்துக்கொண்டு வர விருப்பப்பட்டாராம். குறுமுனியான அவரால் அவற்றைத் தூக்க முடியவில்லை;. இடும்பன் என்ற அசுரன் அந்தச் சமயம் பார்த்து வந்து சேர்ந்திருக்கிறான். முனிவரை வணங்கிவிட்டு குன்றுகளைப் பெயர்த்தெடுத்து இரண்டு கூடைகளில் வைத்து, கயிறு கட்டி, நீண்ட தடி ஒன்றின் இரு முனைகளிலும் அவற்றை ஊஞ்சல் போல் தொங்கவிட்டிருக்கிறான். தடியின் மையம் தனது தோளில் பதிகிற வகையில் இருத்திகொண்டு நடந்து விறுவிறுவென்று தெற்கே வந்தும்விட்டான். இளைப்பாற ஓர் இடத்தில் ‘காவு தடி’ என்றழைக்கப்படும் அந்தத் தோள் தடியை இறக்கியிருக்கிறான். ஆனால் மீண்டும் அதை எடுக்க முடியாதபடி மலைச் சிகரங்கள் பூமியில் பதிந்துவிட்டனவாம்.

ஒரு சிகரத்தின் மீது சிறுவன் ஒருவன் நிற்கக் கண்டு, அவனை இறங்கி ஓடுமாறு விரட்டுகிறான் இடும்பன். சிறுவனோ இடும்பனுக்குச் சவால் விடுகிறான். பால முருகனான அவனுடன் மல்லுக்கு நின்று தோற்று விழுகிறான் இடும்பன். அவன் மனைவி வந்து முருகனிடம் கதறியழ, நற்கதி பெறுகிறான் இடும்பன். அகஸ்தியரும் அங்கே வந்து சேருகிறார்; அருள் பெறுகிறார்.

இடும்பன் தூக்கி வந்த ‘காவு தடி’யின் அடையாளமாகவே இன்று காவடி தூக்கி பிரார்த்தனை செலுத்தும் பழக்கம் நிலவுகிறது. சாதாரண நாட்களிலேயே காவடிகளைக் காண முடியும் பழநியில். தைப் பூசத்தின் போதோ, தூரத்து ஊர்களிலிருந்து விரதமிருந்து வெற்றுக் கால்களுடன் காவடி தூக்கி வருவோரை, கூட்டம் கூட்டமாகக் காணலாம். அவர்கள் மலையேறும்போதே, மேள - தாள வாத்தியங்கள் இசைக்க ஆடிக்கொண்டுதான் ஏறுவார்கள். மலையுச்சியை அடைந்து துவ ஜஸ்தம்பம் அருகே வெளிப் பிராகாரத்தில் சுழன்றும் சாய்ந்தும் குதித்தும் துள்ளியும் அவர்கள் பரவசத்துடன் ஆடுவது காணக்கிடைக்காத காட்சி. மயில் வாகனத்தின் நளினமும், முருகனின் வீரமும் குழந்தை வேலாயுதனின் குதூகலமும், மிக ஆழந்த மானுட பக்தியின் லயிப்பும் கலந்த அரிய கலவை அவ்வாட்டம். அதில் சிறந்த சில மரபினருக்கு விசேஷ தினங்களில் இங்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது.

இந்த அழகான காவடி மரபுக்கு வழிகோலிய இடும்பனுக்கும் பழநி மலை ஏறி வருகையில் ஒரு சிறு கோயில் இருக்கிறது. அப்பகுதி, இடும்பன் மலை என்ற அழைக்கப்படுகிறது. இடும்பனை மல்லுக்கு இழுத்த குராவடி முருகனும் இங்கே குடிகொண்டிருக்கிறான்.

பழநிக்கு திருவாவினங்குடி என்று ஆதி தமிழ்ப்பெயர் உண்டு. இந்தப் பெயருக்குரிய கோயிலும் மூர்த்தியும் மலை ஏறிச் செல்லும் முன், அடிவாரத்திலேயே இருக்கின்றன. காவடி எடுப்போர் முதலில் இந்த ஆதி முருகனை வணங்கிவிட்டுத்தான் மேலே ஏறுவர். இறங்கும் முன் பழநி ஆண்டியை நிர்மாணித்த போகரின் அதிஷ்டானத்தில் மறக்காமல் வணங்கி விட்டு வருவர்.

காவடி எடுக்கும் மரபையொட்டி உருவானவையே, அச்சமயத்தில் பாடுவதற்கென்று இயற்றப்பட்ட காவடிச் சிந்து பாடல்கள். அண்ணாமலை ரெட்டியார் போன்றோர் இயற்றிய அந்த அருந்தமிழ் சிந்துகளில் தமிழும் தாளக்கட்டும் துள்ளி விளையாடும்; பக்தியும் மண் மணமும் கமழும். முருகனால் தமிழுக்கு அலங்காரம்; தமிழால் முருகனுக்கு அலங்காரம்!


ராகம்: வராளி தாளம்: ஆதி

பல்லவி:

கா வா வா கந்தா வா வா என்னைக் கா வா வேலவா
பழநி மலை உறையும் முரு (கா வா....)

அனுபல்லவி:

தேவாதி தேவன் மகனே வா பரதேவி மடியில் அமரும் குகனே வா - வள்ளி
தெய்வயானை மணவாளா வா
சரவணபவ பரமதயாளா ஷண்மு
(கா வா...)


சரணம்:

ஆபத்திருளற அருளொளி தரும் அப்பனே அண்ணலே ஐயா வா
பாபத்திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணை மழையே வா
தாப த்ரய வெயிலற நிழல்தரும் வான் தருவே என் குலகுருவே வா
ஸ்ரீபத்மநாபன் மருகா ராமதாஸன் வணங்கும் முத்தையா விரைவொடு


(கா...வா)

Comments