விரல்கள் இணைந்தால் விருப்பம் கைகூடும்!

திருமாலின் அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்மாவதாரம்! பாற்கடலைக் கடையும்போது, நீரில் சாய்ந்த மந்திரமலையை ஆமை வடிவில் தாங்கினார் திருமால். அந்த கூர்மரூபியான பகவானுக்குரிய சிறப்புத் தலம் ஸ்ரீகூர்மம்! ஆந்திர மாநிலத்தில் உள்ள தலம் இது!

இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது என்று சொல்லப்பட்டாலும், ஏழாம் நூற்றாண்டில்தான் இதன் பெருமை தெரியவந்தது. இக்கோயிலில் உள்ள தூண்களில் ‘தேவநாகரி’ எழுத்துக்களில் அமைந்த நிறைய செய்திகள் உள்ளன. 11ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை உள்ள சம்பவங்கள் இதில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அழகான சிற்ப வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன.

இங்கு நடைபெறும் பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைக்கான விதிமுறைகளைத் தொகுத்தளித்து ஒரு அர்ச்சகரையும் நியமித்தவர் ஸ்ரீராமானுஜர். அந்த அர்ச்சகரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் இன்றும் பூஜை செய்து வருகிறார்களாம். இவை இஙகுள்ள அர்ச்சகர் தெரிவிக்கும் செய்தி.

கருவறைக்குச் செல்லும் பாதை சற்று குறுகலானது. தரையில் ஒரு செவ்வக மேடை. அதன் மேல் ஆமை போன்ற ஒரு சிலை, ஸ்ரீகூர்மநாதர். கருவறைக்கு உள்பக்கமாக கிழக்கு நோக்கி ஆமையின் முகம், கெட்டியான மேடான உடம்பு மற்றும் முதுகு, சுருட்டப்பட்ட வால், ஆமை முகத்தில் நெற்றியில் திருமண். முதுகில் பட்டு வஸ்திரம் சாத்தியிருக்கிறார்கள். சிறு பூச்சரம். சுருட்டப்பட்ட வால் சுதர்சனராம். சக்கர வடிவில் சந்தனத்தால் வாலை அலங்கரித்திருக்கிறார்கள்.

ஸ்ரீஆதிசங்கரர் இத்திருக் கோயிலுக்கு வந்தபோது, சுதர்சன சாளக்ராமம் கொடுத்திருக்கிறாராம். அது ஸ்ரீகூர்மநாதரின் நெஞ்சில் சாத்தப்பட்டிருக்கிறதாம்.

அர்ச்சாவதாரத்தின் முகம் சுமார் அரை அடி உயரமும், மேடான முதுகுப்பகுதி இரண்டு அடி உயரமும் இருக்கிறது. கருவறைச் சுவரை நோக்கிய முகம்;

சாளக்கிராம திருமேனி!

இந்த இடத்தில்தான் கூர்மாவதாரம் நடந்தது என்றும், இங்கே காட்சி தரும் ஸ்ரீகூர்மமூர்த்தியே ஒரு தொல்லுயிர்ப் படிமம் (Fossil) என்றும் கருதப்படுகிறது. அதாவது, அவதரித்த கூர்மம் படிமமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

கருவறையைச் சற்று உற்று நோக்குகிறோம். அங்கே கூர்மமூர்த்திக்கு அருகே ஹனுமன், சீதாதேவி, இலக்குவன், ஸ்ரீராமர் சிலாரூபத்தில் காட்சி தருகிறார்கள். இவை ஸ்ரீ மத்வாசாரியார் பூஜித்த விக்கிரங்கங்கள் என்கிறார்கள்.

ஸ்ரீராமரின் அருகே அமர்ந்த நிலையில் ராமானுஜர். கருவறைக்கு வெளியே, இடப்புறமாக மேற்குப் பார்த்த நிலையில் அமர்ந்த கோலத்தில் கூர்ம நாயகி - லட்சுமிதேவி!

அடுத்து, நன்கு உயர்ந்த ராமநாம ஸ்தூபம். அதில் சீதா லட்சுமண சமேதராக ஸ்ரீதசரதராமனும் மாருதியும்.

பிரகாரத்தில் உள்ள 108 தூண்கள் எவ்வளவு அழகிய வேலைப்பாடுகள் அமைந்தவை! அவற்றில் ஒரு தூணைச் சுற்றி ஆண்களும் பெண்களும் கும்பலாக இருந்தனர். அந்தத் தூணை இரு கைகளால் சுற்றி அணைத்துக் கொண்டால், இரு கை விரல்களும் கூடினால் நாம் நினைத்த காரியம் கைகூடுமாம். ஏனென்றால், அது தசாவதார தூண்!

இங்கு கோயிலில் உள்ளே முன்புறமும், பின்புறமும் இரண்டு துவஜஸ்தம்பங்களைப் பார்க்கிறோம்.

கோயிலுக்கு அருகில் ஸ்வேத புஷ்கரணி. ஸ்வேத புஷ்கரணியில் குளித்து விட்டு ஸ்ரீகூர்ம ஸ்வரூபத்தையும் சுதர்சன ஆழ்வாரையும் தரிசனம் செய்தால் ஆயிரம் அஸ்வமேத யாகங்களும் நூறு வாஜ பேய யாகங்களும் செய்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை.

கிரக தோஷங்கள் நீங்க, வழக்கு விவகாரங்களில் வெற்றிபெற அருள் பாலிக்கிறார் ஸ்ரீகூர்மநாதர்.

ஆமைகள் தரிசனம்!

சாதாரணமாக ஆமை வீட்டினுள் வரக்கூடாது என்பார்கள். இத்திருத்தல பிரகாரத்தில் வேலியிட்ட சிறு இடத்தில் ஏராளமான ஆமைகள். அவைகளுக்கு இலைகளைக் கிள்ளி உணவுக்காகப் போடுகின்றன. ஏன் இங்கு ஆமைகள் வளர்க்கிறார்கள்?

புராணத்தின்படி, சுவேதாமஹிபதி என்ற அரசனை, ஸ்ரீகூர்மர் ஆசிர்வதித்திருந்தார். அரசன் இறந்து அவனுடைய எலும்புகளை அருகிலிருந்த சுவேத புஷ்கரணியில் போட்டவுடன், அந்த எலும்புகள் அனைத்தும் கூர்மங்களாக (ஆமைகளாக) மாறின. அதனால் இந்தப் புஷ்கரணி மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது; ஆமைகளும் வளர்க்கப்படுகின்றன.

தலபுராணத் தகவல்:

விஷ்ணு பக்தரான ஸ்வேத பூபாலன் என்ற அரசன் இப்பகுதியை ஆண்டு வந்தார். தினசரி விஷ்ணு பகவானை பூஜித்து விரதம் இருப்பவள் அவர் மனைவி சுபாங்கி. அன்று ஏகாதசி தினம். அரசன், அரசியுடன் உல்லாசமாக இருக்க பிரியப்பட்டான்.

இதை அறிந்த சுபாங்கி மிகவும் குழப்பத்தில் இருந்தாள். அரசனின் விருப்பத்துக்கு இணங்கினால் இவ்வளவு நாட்கள் கட்டிக்காத்த விரதம் விரயமாகிவிடும்.

‘ஹே - பெருமானே - ஹரிதேவனே எனது விரதத்தைக் காப்பாற்று’ என்று விஷ்ணுவை வேண்டினாள்.

அப்போது சலசலவென்ற ஓசையுடன் கங்கை நதியின் கிளையான வம்சதாரா அவர்கள் இருவருக்கும் இடையில் சீறிப்பாய்ந்தது. அரசனும் அரசியும் ஆச்சரியப்பட்டனர். மன்னனோ தனது தவறை உணர்ந்தான். அரசியோ ஹரியை வேண்டி விரதம் காத்ததற்கு நன்றி கூறினாள். அரசன் தவம் செய்ய சென்று விட்டான். அவருக்கு நாரதர் வந்து, “நீ, தவம் செய்ய வேண்டிய இடம் கலிங்கப் பட்டினம். வம்சதாரா நதி தக்ஷிண சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் தவம் செய்” என்றார். தவம் பலிக்கவே ஸ்ரீகூர்மதரிசனம் கிடைத்தது. மஹாலஷ்மி தோன்றி, “மன்னவனே, நீங்கள் வைகுண்டத்துக்கு வரவேண்டும்” என்று அழைத்தாள். ஸ்ரீகூர்ம சேவையே எனக்கு வைகுண்டம் என்று மறுத்த அரசன், அங்கே ஒரு கோயில் கட்ட விரும்பி நாரதரிடம் கேட்டார். அரசனின் விருப்பத்தை நாரதர் பிரம்மாவிடம் கூற, நாராயணனை வேண்டினார் நான்முகன்.


திடீரெனு பளிச்சென்று ஒளி கண்களைக் கூசிற்று. ஒளி சட்டென்று மறைந்தது. அங்கே ஸ்ரீகூர்ம விக்கிரகம் இருந்ததைக் கண்ட அரசன் திடுக்கிட்டான். தானே கொடிமரமாகிவிட்டான் என்கிறது தலபுராணம்.

இருப்பிடம்!

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் அமைந்திருக்கும் கிராமத்துக்குப் பெயர் சாலிகுண்டா. ஸ்ரீகூர்ம மூர்த்திக்கென்று இந்தியாவில் உள்ள பிரத்யேக கோயில் இது ஒன்றுதான்.



Comments