கருணையின் வடிவம்

பகவான் புத்தரின் புகழ் வளர்வதையும் பௌத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள வெற்றியையும் கண்ட மற்ற குருமார்களுக்கு புத்தர் மீது பகையே மூண்டது. புத்தரை அவமானப்படுத்தி தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள முயன்றனர். எனினும் அவர்களது பல்வேறு திட்டங்களும் தோல்வியே அடைந்தன. இறுதியாக, ஒரு இழிவான முறையைக் கையாண்டு புத்த பகவானை அவமானப்படுத்த முயன்றனர்.

அச்சமயம், அவர்களுக்கு நினைவில் வந்தவள் அழகி சிஞ்சா மாணவிகை! அவளிடம் தங்களின் திட்டத்தைக் கூறினர். பகவான் புத்தரின் அருங்குணங்களைப் பற்றி முன்பே அவள் கேள்விப்பட்டிருந்தாள். தயங்கிய அவளுக்கு, தைரியம் சொன்னார் குரு ஒருவர். குருவின் வார்த்தைக்கு மறுமொழி கூற அவளால் முடியவில்லை. எனவே, அரை மனதுடன் சம்மதித்தாள்.

முதன் முதலில் - பகவான் புத்தரைக் கண்டவளுக்கு, அவருடைய தேஜஸான முகம், கருணை ததும்பும் அழகிய தாமரை மலர் போன்ற விழிகள் தயக்கத்தை ஊட்டின.

அவர் ஏறெடுத்துப் பார்ப்பதே கிடையாது. பின் அவரை எவ்வாறு வசியப்படுத்த முடியும்?" என்று தனது குருமார்களிடம் கேட்டாள்.

அப்படியா?" என யோசித்தவர்கள் பிறகு, ஒன்றும் கவலைப்படாதே! தினந்தோறும் இரவு வேளைகளில் புத்த பிக்கு தங்கியுள்ள அந்த இடத்துக்கு வருவதும், காலை வரை தங்கி இருந்தது போலும் போக்கு காண்பி. பிறவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றனர்.

அதன்படியே சிஞ்சா மாணவிகை நாள்தோறும் இரவு வேளைகளில் பகவான் புத்தர் தங்கி இருந்த இடத்துக்கு வருவதும், காலை வேளைகளில் பலரும் பார்க்கும்படி அங்கிருந்து போவதுமாக இருந்தாள். நாளும் இச்செய்கை தொடர்ந்தது.

புத்த பகவான் மீது பக்தி கொண்ட மக்கள் சிலருக்கு சிஞ்சா மீதுதான் சந்தேகம் ஏற்பட்டது. பகைவர்களான குருமார்களின் சீடர்கள், மக்களிடையே புத்த பகவான் மீது அவதூறு பேச ஆரம்பித்தார்கள். பகவான் புத்தர் ஒன்றும் அறியாதவர் போல் பிக்குகளுக்குப் போதனை செய்தார்.

அவள் மேலும் முன்னேறினாள். கர்ப்பம் கொண்டவள் போல் நடிக்க ஆரம்பித்தாள். கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருளைக் கட்டியவாறு ஊர் மக்களின் பார்வையில் படுமாறு நடந்தாள்.

ஒருநாள் மாலைப்பொழுது. பகவான் புத்தர் தாம் வழக்கமாக அமரும் மரத்தடியில் உட்கார்ந்து போதனை செய்து கொண்டிருந்தார். பிக்குகளுடன் மக்களும் திரண்டிருந்தனர். இதுதான் ஏற்ற தருணம் என்று நினைத்த சிஞ்சா, அந்த சபைக்கு விரைந்தாள்.

கூடியிருந்த மக்கள் முன் நின்று, எனக்கு நல்ல தீர்ப்பு தாருங்கள். மகான் என்று நீங்கள் கொண்டாடும் இவர், என்னிடம் கூடா ஒழுக்கம் கொண்டவர். என்னுடைய கர்ப்பத்துக்கு இவரே காரண புருஷர்! எனக்குப் பேறு காலமும் நெருங்கிவிட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு இந்த மகா புருஷருக்குக் கூறுவதுடன், நீங்களும் இதற்கு உதவி செய்ய வேண்டும்" என்று கண்ணீர் மல்க நடித்தாள்.


பகவான் புத்தர் முன் அமர்ந்திருந்த பிக்குகளும், மக்களும் அவள் மீது ஆத்திரம் கொண்டனர். நிலைமையைப் புரிந்து கொண்ட புத்த பகவான் தமது கரங்களை உயர்த்தி அவர்களை அமைதிப்படுத்தினார்.

பின் அவளைப் பார்த்து, அன்புச் சகோதரியே! நீ இப்போது என்னைப் பற்றிக் கூறியது மெய்யா அல்லது பொய்யா என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால், அதன் உண்மை நிலை என்ன என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்" என்று சொன்னார்.

அப்போது அவரது கண்களில் வாஞ்சையே மின்னிற்று. பதிலேதும் கூற முடியாமல் சிஞ்சா அசைவற்று, தலைகுனிந்து நின்றாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கர்ப்பவதி போல் சிஞ்சா தன் வயிற்றில் கட்டியிருந்த மரத்தினால் செய்யப்பட்டிருந்த வயிறு கீழே விழுந்து, அவளின் கால் விரல்களைக் காயப்படுத்தியது. ‘ஆ’வென அலறினாள் அவள்.

உண்மை அறிந்த பிக்குகளும் மக்களும் அவளை அடிக்க முனைந்தனர். பகவான் அவர்களைத் தடுத்தார்.

இவளைத் துன்புறுத்தாதீர்கள். இவள் ஒன்றும் அறியாதவள். நம் அன்புக்குப் பாத்திரமானவள். இவளை அனுப்பிய குருமார்களே தவறிழைத்தவர்கள். அம்பை எய்தியவர்களை விட்டு அம்பின் மீது கோபப்படாதீர்கள்" என்ற புத்தர், பின் அவளிடம் சகோதரி மன அமைதியுடன் சென்று வா..." என வாழ்த்தி, அவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.

ஸ்ரீகுரோ: பரமம் ரூபம் விவேக ச க்ஷு ரக்ரத: I

மந்த பாக்யா ந பச்யந்தி அந்த்தா:

ஸூர்யோதயம் யதா II

(ஸ்ரீ குருகீதை 1-82)

ஞானக்கண் படைத்தவர்களின் முன்பு ஸ்ரீகுருவின் உத்தமமான வடிவம் தெரிகின்றது! பார்வையற்றவர்கள் சூர்யோதயத்தை எப்படிப் பார்ப்பதில்லையோ அப்படி பாக்கியம் குறைந்தவர்கள் குருவைக் காண்பதில்லை" என்று குருவின் தன்மையைக் கூறுகின்றது ஸ்ரீ குருகீதை!

Comments