ஆரூரன்

நரசிங்க முனையரையருக்குக் கண்களைத் திறக்க வேணும் என்கிற குறுகுறுப்பு. 'கூடாது' என்று உள் மனது தாளிட, அதையும் தாண்டி அகம் கட்டளையிட்டது... 'கண்களைத் திறந்து அந்த தெய்விக வடிவைக் காண்பதே ஆனந்தம்...' அகத்துக்கே அடிபணிந்தார் அரசர்.

வேறொன்றுமில்லை. திருக்கோவலூர் திருமுனைப்பாடி நாட்டு அரசரான நரசிங்க முனையரையர், திருநாவலூர் திருக்கோயிலுக்கு வந்திருந்தார். அவ்வப்போது அவர் வருவதும், சிவாச்சார்யர்கள் அவருடைய வருகையை நன்னிமித்தமாகக் காண்பதும், ஆச்சார்யர்களை ஆண்டவனுக்கு நிகராக அவர் பேணுவதும் வழக்கம் தான் என்றாலும், அன்றைக்கு வேறொன்றும் நடந்தது.

அரசர் ஆலயத்துக்கு அன்று வந்தபோது, சடையனார் என்று ஊர் மக்களால் அழைக்கப்பட்ட ஜடாதர சிவாச்சார்யர், சந்நிதியில் பூஜைகள் செய்தார். சடையனாருக்கு ஒரு மகன் உண்டென அரசருக்குத் தெரியும்; கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், இன்று அந்தப் பிள்ளை, அப்பாவுடன் கோயிலுக்கு வந்திருந்தான். அவன் முகப் பொலிவும் கண்களின் எழிலும்... அதைவிட, ஞானசம்பந்தப் பெருமானுடைய பாசுரங்களை அவன் பாடிய அழகும்... சந்நிதியில் கண்களை மூடி நின்று, இறைவனுடன் ஒன்றிவிடும் அரசருக்கு, இன்று கண்களைத் திறந்து அந்தப் பிள்ளையைப் பார்த்தால் போதும், தெய்வம்கூட பின்னர்தான் என்று தோன்றியது! தீபத் தட்டை அரசர்முன் நீட்டினார் சடையனார். கைகளை நீட்டியபடியே அரசர் கேட்டார் ''ஆச்சார்யரே, இவன்...''



''என் மகன் ஆரூரன்''

''கொள்ளை புத்திசாலியாக இருப்பான் போல் தோன்றுகிறதே! அர்ச்சனை செய்கிறான்; அழகாகப் பாடுகிறான்...''

''ஆமாம், கொஞ்சம் அலங்காரப் பிரியனும்கூட! அவனுடைய தாய்க்கு இசைஞானம் நிரம்பவே உண்டு. ஞானசம்பந்தரின் பாசுரங்களையும் அப்பர் பெருமானின் பாடல்களையும் அவளே இவனுக்குப் புகட்டியிருக்கிறாள்!''

பணிவும் சிறிது பெருமிதமும் கலந்து சடையனார் சொல்ல... ஆரூரனின் அழகு முகத்தையே கண்கொட்டாது பார்த்தார் நரசிங்க முனையரையர்.

அதன் பின், அரசர் திருநாவலூருக்கு அடிக்கடி வந்தார். குதிரைமீது வந்தால், ஆரூரனுக்கும் குதிரை சவாரி உண்டு. ஆண்டவன் வழிபாட்டுக்கான திரவியங் களைக் கொண்டு வருகிறாரோ இல்லையோ, ஆரூரனுக்கானவற்றைக் கொண்டுவர அரசர் மறக்கவே மாட்டார். ஆடைகள், அணிமணிகள், உணவு வகைகள், அவனுக்குப் பிடித்தவை என்று மழை போல் அவன் முன் பொழியும்.

நாட்கள் சென்றது. அரசரின் ஆதங்கமும் அதிகமானது. சொந்தப் பிள்ளையைவிட இந்தப் பிள்ளையிடம் அரசர் உருகுகிறார் என்பது அரசிக்கும் புரிந்தது. தயங்கித் தயங்கி கடைசியில் அரசர் கேட்டேவிட்டார் ''ஆசார்யரே! ஆரூரனை நான் வளர்க்கிறேனே.''



அரசருடைய நிலைமையை நன்கு உணர்ந்திருந்த சடையனாரால் மறுக்கவும் முடியவில்லை; ஆனால், ஆரூரனுக்கு உபநயனம் செய்யவில்லை; அவன் வேதமும் ஆகமமும் பயிலவேண்டும்! ஒன்றும் புரியாமல் நின்ற சடையனாருக்கு, அரசருடைய வாக்கும் போக்கும் புதிய உலகைக் காட்டின. பின்னர் ஆரூரன், ஒரே நேரத்தில் அந்தணர் வீட்டுப் பிள்ளையாகவும் அரசர் வீட்டுப் பிள்ளையாகவும் வளர்ந்தான்; அறிவும் செல்வமும் ஒருங்கிணைந்த ஞானப் பெட்டகமானான். அரசரே அவனுடைய உபநயன விதி நிறைவு செய்தார்; கல்வி- கேள்விகளில் உதவினார்.

என்ன... ஆரூரனைக் காண வேண்டும்போல் தோன்றுகிறதா?

ஆரூரனான அவர்தாம் பின்னாளில், சிவனடியார்களின் பெருமைகளைப் பாடிக்கொடுத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆனார். புராணங்கள் போற்றும் ஆலால சுந்தரரும் இவரே!

தேவாரப் பாடல்களைப் பாடிய சுந்தரர், அடியார்களின் பெருமையைக் கூறும் 'திருத்தொண்டத் தொகை' பாடினார். அதனை ஆதாரமாகக் கொண்டு, நம்பியாண்டார் நம்பி, 'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடினார். இதனை அடிப்படையாகக் கொண்டு 'திருத்தொண்டர் புராணம்' பாடினார் சேக்கிழார். இந்த வகையில், திருத்தொண்டர்களின் வரலாறு கிடைப்பதற்கும் அவர்களைப் போற்றுதற்கும் சுந்தரர் வழிகோலினார் என்பது மாத்திரமல்ல, அவருடைய தந்தை- தாயான சடையனார்- இசை ஞானியார் ஆகியோரும், அவரை வளர்த்த நரசிங்க முனையரையரும் அறுபத்து மூவர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

இவ்வாறு, அடியார்களின் பெருமையை அகிலம் அறியக் காரணம் காட்டிய சிவபெருமானை தரிசிக்க வேண்டாமா? வாருங்கள், திருநாவலூர் போகலாம்.

திருநாவலூர்... கடலூர்- உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் உள்ள இந்தத் தலத்தை, பண்ருட்டி யில் இருந்தும் (சுமார் 25 கி.மீ), விழுப்புரத்தில் இருந்தும் (சுமார் 20 கி.மீ) அடையலாம். விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர், மடப்பட்டு தாண்டி, கெடிலம் என்ற இடத்தை அடைந்தால், அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் இந்த ஊர் உள்ளது.

திருநாமநல்லூர் என்றே அறியப் பட்ட ஊர்ப் பெயரை திரு.வி. கல்யாண சுந்தரனாரே பெருமுயற்சி செய்து, அஞ்சல் துறையிலும் அலுவல்பூர்வ அமைப்புகளிலும் 'திருநாவலூர்' என்னும் பெயரை நிலைபெறச் செய்தார். இப்போது இந்தப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.

பழங்காலத்தில் 'நடுநாடு' என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. தெற்கில் சோழ நாட்டுக்கும் வடக்கில் தொண்டை மண்டலத்துக்கும் இடையில் இருப்பதால் இந்தப் பெயர். நடுநாட்டின் தேவாரத் தலங்களில் (மொத்தம் 22) 8-வது தலமான இது, கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ளது.

நடுவில் மண்டலம், திருமுனைப் பாடி நாடு, சேதி நாடு, மகத நாடு, சனநாத நாடு என்றெல்லாம் பெயர் கொண்ட நடுநாட்டின் பல பகுதிகள், கெடில நதியால் வளம் பெற்றன. பழைய கால நடுநாட்டின் தலைநகரமாகத் திருக்கோவலூர் திகழ்ந்தது. அங்கிருந்துதான் நரசிங்க முனையரையர் ஆட்சி நடத்தினார். திருநாவலூர் திருக்கோயிலுக்கும் வருவார்.

ஊரின் தொடக்கத்திலேயே கோயில் இருக்கிறது. ஓங்கி உயர்ந்த கிழக்கு ராஜ கோபுரம்; ஐந்து நிலைகளுடன், அழகும் பொலிவும் தோன்ற நிற்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், விசாலமான வெளிப் பிராகாரம். கோபுரத்துக்கு எதிரில் பலிபீடம், கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி. பிராகார வலத்தைத் தொடங்குகிறோம்.

கிழக்கில் இருந்து தெற்கு சுற்றுக்கு திரும்புமுன், மேற்கு நோக்கிய சந்நிதி; சுந்தரர், தமது தேவியரான பரவை மற்றும் சங்கிலி நாச்சியார்களுடன், நின்ற கோலத்தில், கைகளில் தாளம் ஏந்தியபடி காட்சி தருகிறார். என்ன இருந்தாலும், இறைவனாரை இசையாக, இசைப் பயனாகக் கண்டவராயிற்றே! எதிரில் யானை வாகனம்; பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு; எனவே, சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும், யானை வாகனமே அமைப்பது வழக்கம். இங்கும் அப்படியே!

வெளிப் பிராகாரத்தின் வடக்குத் திருச்சுற்றில், அம்பாள் சந்நிதி. தனிக்கோயில் என்று சொல்லும் அளவில், கிழக்குப் பார்த்து உள்ளது. வடக்குச் சுற்றிலேயே, தல மரங்களான நாவல் மரங்கள். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே. நாவல் மரம் நிறைந்த இடம். சுந்தரரும் தன்னை 'நாவல் ஆரூரன்' என்றும் 'நாவலர் கோன்' என்றும் அழைத்துக் கொள்கிறார்.

வடக்குச் சுற்றில் இன்னும் சற்றே வந்தால், அடடா! ஸ்ரீதேவி- பூதேவி உடனாய ஸ்ரீவரதராஜப் பெருமாள் சந்நிதி. உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டபமும் மகா மண்டபமும் உள்ளன. முகப்பு மண்டபத்தின் தெற்கு வாயிலில் நுழைகிறோம். எதிரில் தெற்குப் பார்த்த ஆஞ்சநேயர். மகா மண்டபத்தில் ஸ்ரீநிவாசர். மூலவரான வரதராஜர், சங்கு- சக்கரங்கள்; அபய- வர ஹஸ்தம் தாங்கியவராக கிழக்கு நோக்கி, ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக நிற்கிறார். பெருமாள், தாயார், ராம-சீதா- லட்சுமண உற்சவ மூர்த்தங்களும் உள்ளன. சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம்.

கருடனுக்கும் கெடில நதிக்கும் நிறைய தொடர்பு உண்டு. சிவபெருமானின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளே, கெடில நதியாக உருவானது என்கிறது பாதிரிப்புலியூர் புராணம். ஆனால், கருடன் உருவாக்கிய நதி- கருட நதியாகி, கெடில நதியாகப் பெயர் மாற்றம் பெற்று விட்டதாக திருநாவலூர் புராணம் கூறும்.

வைகுண்டத்தில் அன்றொரு ஏகாந்த வேளை. சிவனை நெஞ்சில் நினைத்து தியானத்தில் ஆழ்ந்தி ருந்தார் திருமால். யோகாக்னியின் வெப்பம் ஏற ஏற, அதைத் தாங்கமுடியாத ஆதிசேஷன், விஷத்தைக் கக்கினான். காற்றெங்கும் நஞ்சு பரவ, அங்கு வந்த கருடன் மீதும் நச்சுக் காற்று படர... பொன்னொளி கருடன், கன்னங்கரேலென்று ஆனான். தன் கருமையைப் போக்க வழி தேடிய கருடனுக்கு சிவனாரே வழி சொன்னார்.

முன்னொரு காலை, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால நஞ்சு எழுந்ததல்லவா! பரமனாருக்குப் பணிவிடை செய்த ஆலால சுந்தரர் (இவர்தாம், நம் சுந்தரமூர்த்தியாக பூலோகம் வரப் போகிறார்), ஆலகாலத்தை உருண்டையாக உருட்டினார்; அதையே பரமனார் விழுங்கினார். சிவபெருமானுடைய தொண்டை யில் அந்த விஷத்தை நிறுத்தியபோது, அதன் ஒருதுளி, நாவலங்காட்டின் மரத்தில் நாவல் பழமாகக் கனிந்துவிட்டது. 'அந்தப் பழம் எப்போது மிகக் கனிந்து, சாம்பூநத வாவியில் விழுகிறதோ, அப்போது, அதன் நச்சுத்தன்மை நீங்கும். அது மட்டுமா? அந்த தீர்த்தத்தில் நீராடினால், கருடனுடைய உடல் மீண்டும் பொன்னென ஒளிரும்' என்று மொழிந்தார் ஈசனார்.

அதன்படி, சாம்பூநத தீர்த்தத்தில் கருடன் நீராட, அவனுடைய மேனி வெண்ணிறம் பெற்றது. கருமை போனதால் காலாந்தகன் எனப்பட்டான். பிறகு கோயிலைப் புதுப்பித்தான்; விழா எடுத்தான்; ரதோற்ஸவம் கண்டான்; பூமியில் அம்பு செலுத்தி தீர்த்தம் உண்டாக்கினான்; அவ்வாறு உருவான கருட தீர்த்தமே, கருட நதியாகப் பாய்ந்து, பின்னர் பேச்சுவழக்கில் கெடிலமாகிவிட்டதாகச் சொல்லப் படுகிறது. பெருமாள் சந்நிதிக்கு முன்னே உள்ள சிற்பத்தில், இந்தக் கதையின் வடிவங்களைக் காணலாம். வெளிப் பிராகார வலத்தை நிறைவு செய்து, கொடி மரத்தடியில் வந்து பணிகிறோம்

Comments