பக்தி என்னும் ஆதார ஸ்ருதி

நான் வைகுண்டத்தில் இல்லை; நான் யோகிகளின் இருதயத்தில் இல்லை; எங்கெங்கு என் பக்தர்கள் பாடுகிறார்களோ அங்கு நான் நிதர்சனமாய் இருக்கிறேன் என்று நாரதரிடம் மஹா விஷ்ணு கூறினார். அந்த சர்வவியாபியான பரமாத்மாவே இசையில் கட்டுண்டு இருக்கும்போது, நாம் எம்மாத்திரம்? கோடி ஜபம் தியானத்திற்கு சமானம்; கோடி தியானம் லயத்திற்கு சமானம்; கோடி லயம் கானத்திற்கு சமானம்; கானத்திற்கு சமானம் வேறில்லை என்று சொல்வதுண்டு. பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடிக்க சிறந்த சாதனம், இசையாகும்.
இசையும் பக்தியும் ஒரே கட்டுக்குள் எப்படி எதற்கு ஆரம்பித்தது என்று சற்றே பின்னோக்கிச் செல்வோம். எல்லா மதத்தினரும் தத்தம் மதத்தின் புகழையும் கொள்கைகளையும் பரப்ப இசையை ஒரு கருவியாகவே கையாண்டனர். இந்த வகையில் இசையும் வளர்ந்தது, பக்தியும் தழைத்தது.
தேவார நால்வரிலிருந்து ஆரம்பித்து, அன்னமய்யா, புரந்தரதாசர், பத்ராசல ராமதாசர், தியாகய்யர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி, கோபால கிருஷ்ண பாகவதர், முத்து தாண்டவர், இவர்களுக்குப் பிறகு தோன்றிய பட்டணம் சுப்ரமண்ய ஐயர், பூச்சி சீனிவாச அய்யங்கார், மேலும் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபநாசம் சிவன், அம்புஜம் கிருஷ்ணா, பெரியசாமி தூரன் போன்றவர்களும் அவரவர் உள்ளத்து சிந்தனை ஊற்றை வெளிக் கொண்டுவர இசையையும், இசைத் திறனை வெளிக்காட்ட தங்களது பக்தி பரவசத்தையும் உணர்ச்சியையும் கையாண்டனர் என்று கூறலாம். ஏன், மகாகவி பாரதியார், தாய் நாட்டின் மேலிருந்த பக்தியின் தூண்டுதலால் தேசபக்திப் பாடல்களைப் புனைந்தார்
இசை, பாடுபவரை அன்றி, இசையைக் கேட்பவரையும் ஒரு விதமான தியானத்திற்குக் கொண்டு செல்கிறது. ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி அவர்கள் ஒரு முறை என் குரு சங்கீத கலாநிதி கோவிந்த ராவ் அவர்களிடம் கூறியதை இங்கு பகிர்ந்துகொள்வது மிக பொருத்தமாய் இருக்கும். பல காலம் கடுமையான தவமிருந்து யோகிகள் அடையும் தியான நிலையை, ஆதார ஸ்ருதியை மீட்டியவுடன் பாடகர்கள் அடைந்துவிடுகிறார்கள். பாடும் நேரம் முழுதும் அந்த ஆதாரத்திலிருந்து வழுவாமல், நடுவில் பேச்சு இருந்தாலும், மீண்டும் அதே ஸ்ருதியில் சஞ்சரித்துப் பாடுவது ஒரு வகை தவம். அதே சமயம் இசையைக் கேட்பவர்களின் மனோநிலையும் ஓர் உன்னதமான தியான நிலைக்குச் சென்றுவிடுகிறது. இசைக்கு ஆஸ்திகர், நாஸ்திகர் என்ற பாகுபாடு கிடையாது. வார்த்தைகளே இல்லாமல் பாடப்படும் ராக ஆலாபனை அல்லது வாத்திய இசையைக் கேட்பவரும் மகுடிக்கு மயங்கிய பாம்பாய் இசைக்குக் கட்டுப்பட்டுவிடுகின்றனர்.இசையைப் பற்றி தியாகய்யர் அனேகப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். அவர் பக்தியையும் இசையையும் வேறுபடுத்திப் பார்க்கவே இல்லை. ‘சங்கீத ஞானமு பக்தி வினா’ என்ற தன்யாசி ராகப் பாடலில் பக்தியில்லாத சங்கீதம் நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்லாது என்கிறார். பக்தியை வேண்டி உன் முன் நிற்கிறேன் என்று சங்கராபரண ராகத்தில் ‘பக்தி பிச்சமிய்யவே’ என்ற கீர்த்தனையில் சொல்கிறார். பணத்தாசை பிடித்து கருமியாய் வாழ்க்கை நடத்திய புரந்தர்தாசரை இசையும் பக்தியும் கைகோர்த்து நல் வழிப்பாதையில் அழைத்துச் சென்றது. இன்று சங்கீத உலகிற்குப் பொக்கிஷமாய் அவருடைய பாடல்கள் திகழ்கின்றன. பக்தியுடன் முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய கீர்த்தனைகள் கோவில், அங்கு வீற்றிருக்கும் தெய்வம், ஆகம முறை, மேரு, பூஜை முறைகள் என்று பல விஷயங்களை நமக்கு தெரிவிக்கின்றன. பக்திப் பூர்வமான தன் இசைப் பாடல்களின் மூலம் அம்ருதவர்ஷிணியாக மழையையே கொண்டு வந்தார் தீட்சிதர். பூலோக சாப்புச்சுட்டி (உலகத்தையே பாயில் சுருட்டியவர்) என்று அழைக்கப்பட்ட பொபிலி கேசவய்யா, தன்னை யாராலும் இசையில் வெல்ல முடியாது என்ற இறுமாப்புடன் வந்த இசை விற்பன்னர். அவரை எதிர்த்துப் போட்டியிட, தன் இஷ்ட தெய்வமான காமாட்சியிடம் மனமுருகி, பக்தியுடன் வேண்டி, சிந்தாமணி ராகத்தில் ‘தேவி ப்ரோவ சமயமிதே’ என்ற கீர்த்தனையைப் புனைந்து பாடி பின் அரசவையில் தன் இசையால் கேசவய்யாவை ஜெயித்தவர் ஸ்யாமா சாஸ்திரி.
தியாகய்யர் ‘மோக்ஷமு கலதா’ என்ற சாரமதி ராக கீர்த்தனையில் ‘பக்தி இல்லாதவர்களுக்கும், சங்கீத அறிவில்லாதவர்களுக்கும் மோட்சமே இல்லை’ என்கிறார்.
பக்தி என்பது ஒன்றுடன் நாம் ஒன்றுவது. பக்தி என்பதைக் கடவுள் நம்பிக்கை என்று பார்த்தாலும் அல்லது ஒன்றின் மேல் நாம் வைத்திருக்கும் தீவிர ஆசை என்று பார்த்தாலும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் தன்னை மறக்கச் செய்வது இசை.
இசைக்கு இசையாதவர்கள் இப்புவியில் உண்டோ?

Comments