சரணாகதியே வீரம்!

இந்தியப் பெண்களின் லட்சியமாக சீதாதேவியை முன்னிறுத்தி னார் சுவாமி விவேகானந்தர். ஏன்?

அசோகவனத்தில் சிறைப்பட்டிருந்த சீதாதேவி நினைத்திருந் தால், ராவணனை ஒரு கணத்தில் பஸ்பமாக்கி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை! தான், ராவணனை சபித்தால் அவன் மாய்ந்து விடுவான். ஆனால், 'மனைவியைக் காப்பாற்றத் துணிவு இல்லாதவர்' என்ற பழிச்சொல் ஸ்ரீராமருக்கு வந்துவிடும் என்று கருதியே சீதாதேவி அமைதி காத்தாள்.



''தாயே! உங்களை சுமந்து சென்று ஸ்ரீராமரிடம் சேர்க்கிறேன்'' என்றார் அனுமன். அப்போதும் சீதாதேவி, அதை மறுத்து, ஸ்ரீராமனின் புகழ் ஓங்க வேண்டும்; தனது ஒவ்வொரு செயலாலும் அவருக்கே மகிமை கூட வேண்டும் என்ற உன்னதமான மனநிலை படைத்திருந்தாள். தன்னை மறைத்து, தன் தலைவனின் பெருமையைப் பாருக்கு எடுத்தியம்பிய வீராங்கனை சீதாதேவி! இந்தப் பண்பை, அன்னை ஸ்ரீசாரதாதேவியின் வாழ்க்கையிலும் காணலாம்.

அன்னை சாரதாதேவியை அம்பாளாகவே கண்டு வழிபட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். அன்னையே எண்ணற்ற பக்தர்களுக்கும் துறவிகளுக்கும் தீட்சை வழங்கினார்; தெய்வ தரிசனமும் வழங்கினார். அப்படிப்பட்டவர் தமக்கோ, தன் உடலுக்கோ எந்தத் துன்பம் வந்தாலும் பொறுமையுடன் சகித்துக் கொண்டார். ஆனால், 'துன்பத்தில் தன்னை மேம்படுத்தவே, தெய்வம் தன்னைச் சோதிக்கிறது' என்று துணிவுடன் இருப்பார்.

அதேநேரம் பிறருக்கு ஒரு துன்பம் என்றால், அவரை அந்தத் துன்பத்தில் இருந்து மீட்பதே தனது கடமை என்று அவர்களுக்காகவே உருகுவார்.

அது, 1900-ஆம் ஆண்டு. ஸ்ரீசாரதாதேவி மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெயராம்பாடியில் இருந்தார். கடும் வாந்தி பேதியால் அவதிப்பட்டார். அங்கே, மருத்துவ வசதி சிறிதும் இல்லாத காலம். படுத்த படுக்கையாக இருந்த அன்னைக்கு, சாகரேர்மா என்ற பெண்மணி, சிறிதும் அருவருப்பின்றி, அலுத்துக் கொள்ளாமல் ஒரு செவிலியராகவே சேவை செய்தார்.

அன்னை நலம் பெற்று பேலூர் மடத்துக்குப் புறப்பட்டபோது சாகரேர்மாவை அழைத்து, ''உனது கடைசிக்காலம் வரை உனக்கு உடைக்கோ, உணவுக்கோ ஒரு சிறிதும் பஞ்சம் வராது'' என ஆசீர்வதித்தார்.

அது ஒரு பொதுவான ஆசி என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அன்னை மகாசமாதி அடைந்த பல காலத்துக்குப் பிறகு சாகரேர்மா, ''அன்னையின் ஆசியால் இன்று வரை எனக்கு உணவுக்கோ உடைக்கோ பஞ்சமே வந்ததில்லை; எப்போதும் எல்லாம் கிடைத்தன'' என்று நினைவு கூர்ந்தார்.

இதைப் படித்த பிறகு, 'ஸ்ரீசாரதாதேவி வறுமையை நீக்கி வளம் சேர்க்கும் அன்னபூரணியோ?' என்று கேட்டால், 'ஆம்' என்றுதானே கூறத் தோன்றும்!

ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்டது மற்றொரு நிகழ்ச்சி!

ஸ்ரீராமகிருஷ்ணர் காசிப்பூரில் இருந்த தருணம்... ஒருநாள் அன்னையிடம், ''என் காலத்துக்குப் பிறகு நீ ஆன்மிகச் சாதனைகளில் ஈடுபடு. தெய்வத்தை மட்டும் நம்பியிரு. ஒரு காசுக்காகக்கூட எவரிடமும் கையேந்தி விடாதே. கையை நீட்டினால், உன் தலையை அடமானம் வைத்து விட்டாய் என்று பொருள்'' எனக் கூறியிருந்தார்.

குருதேவரின் மகாசமாதிக்குப் பிறகு, காமர்புகூரில் கொடுமையான வறுமையை அனுபவித்தார் அன்னை. உணவுக்கே பஞ்சம். அரிசி இருந்தால் உப்பு இருக்காது; காய்கறி கிடைத்தால் அரிசி இருக்காது. அன்னபூரணியே அன்னத்துக்காக அல்லலுற்ற நிலை! அன்னையின் உறவினர் எவரும் ஆதரவு தரவில்லை. அன்னையும் குருதேவர் கூறியபடி எவரிடமும் கையேந்தவில்லை. விதியை நினைத்துப் புலம்பவும் இல்லை. சில நாட்களில் நிலைமை சீர்ப்பட்டது.

பிறரது பசிக்கு தீர்வு வழங்கக்கூடிய அன்னையின் மகிமை ஒரு புறம்; தமது பசிப் பிரச்னையை தெய்வத்தின் சங்கல்பத்துக்கே விட்டுவிட்ட அவரது அருமை மறுபுறம். அன்னை நினைத்திருந்தால், தமது வறுமையை பகவானிடம் பிரார்த்தித்து நீக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை, ஏன்?

ஸ்ரீராமகிருஷ்ணர் தொண்டைப் புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தபோது, தமது யோக சக்தியால் அந்த நோயை அவரே நீக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 'எல்லாம் தெய்வ சங்கல் பத்தின்படி நடக்கட்டும்' என்று சரணாகதி நிலையில் இருந்தார் அல்லவா? அதுபோலத்தான் அன்னையும்! சீதையின் அம்சம் அல்லவா, அன்னை சாரதை!

அன்னை ஸ்ரீசாரதாதேவியைப் பற்றிக் குறிப்பிடும் போது, ''சக்தி இல்லாமல் உலகுக்கு முன்னேற்றம் கிடையாது. நம் நாடு எல்லா நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி (பெண்கள்) அவமதிக்கப்படுவதுதான் காரணம். சக்தியின் அருளின்றி என்ன சாதிக்க முடியும்? இந்தியாவில், அந்த மகா சக்தியை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்யவே அன்னை தோன்றினார்; அவரை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் கார்கி, மைத்ரேயி போன்ற வேதகாலப் பெண்கள் உலகில் தோன்றுவர்...'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

எல்லா சக்திகளும் இருந்தும், ஒருவர் இறைவ னிடமே தன்னை முழுவதுமாக ஒப்படைப்பது- எந்த சக்தியும் இல்லாதவராக சரணாகதி செய்து வாழ்வது... எவ்வளவு பெரிய வீரம்!


Comments