எழுமின்;விழிமின்!

‘சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, எனக்கு என் தாய் நாட்டின் மீதிருந்த தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று’

- மகாத்மா காந்திஜி

‘எழுமின், விழிமின், குறிசாரும்வரை நில்லாது செல்மின்!’ பலரும் அறிந்த - சுவாமி விவேகானந்தரின், முழக்கம் இது.

முதலில் வங்க இளைஞர்களிடத்தில் கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் இப்படி முழக்கமிட்ட சுவாமிஜி, தமிழ்நாட்டுக்கு வந்தபோது, கும்பகோணத்தில் நிகழ்த்திய சொற்பொழிவிலும் இதை முழங்கினார். பல சந்தர்ப்பங்களிலும் தனது கூட்டங்களில் இதனைத் தெரிவித்தார். இந்த மகா மந்திரம் கடோப நிஷதத்தில் உள்ளது: ‘உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதத’ - அதாவது, ‘எழுந்துகொள்ளுங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; சிறந்த குருவைப் பெற்று ஞானத்தை அடையுங்கள்’ என்பதாகும்.

நம்மால் சாதிக்க இயலாத காரியம் ஒன்றுமில்லை. எல்லாத் தேவைகளையும், துன்பங்களையும் நீக்கும் பேராற்றல் நம் அனைவருக்குள்ளும் உள்ளது. நம்மை வீறுகொண்டு எழச் செய்யவே, ‘எழுமின்!’ என அவர் அறைகூவல் விட்டார். நமக்குள் குடிகொண்டுள்ள அந்த ஆற்றல்மிக்க தெய்விக சக்தியை, எல்லா உயிர்களிடத்தும் வெளிப்படுத்தி, கடவுளுக்குத் தொண்டு செய்வதையே லட்சியமாகக் கொள்ள வேண்டும். ‘கடவுள் தொண்டு’ என்பது சுயநலமற்று, மனம், இதயம், ஆன்மா முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்படுவது.


வாழ்க்கை என்பது உயர்ந்த லட்சியத்தை அடைவதாக இருக்க வேண்டும். எவ்வித துன்பம் நேரிட்டாலும் மனம் தளராது, அயராது உழைத்து முன்னேறிச் செல்ல வேண்டும். நமது லட்சியம் என்ற முடிவான இடத்தை அடையும் வரை, நின்றுவிடாமல் சென்றுகொண்டே இருக்க வேண்டும். நிச்சயமாக ஒருநாள் வெற்றி பெறுவது உறுதி என்கிற நம்பிக்கையுடன் இயங்க வேண்டும். இதுதான், வங்கத்துச் சிங்கமான விவேகானந்தரின் லட்சியம்!

இந்த லட்சிய புருஷரின் நினைவு, நமக்குள்ளும் தூய லட்சிய உணர்வை சிருஷ்டிக்கட்டும்.

Comments