தசாவதாரக் கோயில்!

கர்வத்தோடு சீறி எழுந்த காளிங்க நாகத்தின் தலையில் - விரிந்த படத்தின் மேல், ஒற்றைக் காலை ஊன்றியவனாய் நர்த்தனக் கோலம் காட்டுகிறான் கண்ணன். குழந்தை கோபாலனின் சூட்சும எடை தாங்கமல் திணறும் காளிங்கனை, மன்னித்துக் காக்கும்படி வேண்டுகிறார்கள் அவன் தேவியர். யமுனை நதியின் மடுவை நினைவுபடுத்துவதுபோல் அமைந்த திருக்குளத்தின் நடுவே இந்தச் சிலாரூபம்! அதனழகை ரசித்துக் கொண்டிருக்கும்போதே நண்பர் சொன்னார்:

“கடவுளோட சூட்சுமம் புரிஞ்சுக்க முடியாதது. பக்தில கனிஞ்ச பிரகலாதன் தலைல, கையை வைச்சு ஆசி சொன்னான். கொத்த முயற்சி பண்ண காளிங்கன் தலைல, காலை வைச்சு தீட்சை கொடுத்தான். எது பெரிசுன்னே புரியலை?!”

இந்தக் கேள்வியை ஏற்படுத்தியது, வேப்பஞ்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் ஆலயம். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது.

லக்ஷ்மி நாராயணர் கோயில் என்று சொன்னாலும், பல்வேறு சன்னிதிகள், நட்சத்திரவனம் என்று அபூர்வங்களைக் கொண்டிருக்கிறது வேப்பஞ்சேரி. தமது இடது மடியில் பிராட்டியைக் கொண்டவராக, அபயகரம் விளங்க அருள்பாலிக்கிறார் பெருமாள். பெருமாளின் லக்ஷ்மி நாராயணர் கோலத்தை தரிசித்து வழிபடுவதால், கணவன் - மனைவிக்குள் இணக்கமும், புரிதலும் ஏற்படும். குடும்ப வாழ்க்கை இனிமை பெறும் என்று பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெருமாள் சன்னிதியை அடுத்து ஆதிலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, சந்தான லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி என்று அஷ்டலக்ஷ்மி தேவியரும் தனித் தனி சன்னிதி கொண்டிருக்கின்றனர். மனித வாழ்வின் மங்கலங்கள் அனைத்தையும் அருளும் இவர்களை வணங்கி, தசாவதார தீர்த்தக் குளத்தை எட்டுகிறோம். காளிங்க நர்த்தனக் கிருஷ்ணனைக் காண்பது இந்தக் குளத்தில்தான். இந்தக் குளத்தைச் சுற்றிலும் திருமாலின் பத்து அவதாரங்களையும் பெரிய வடிவில் தரிசிக்கிறோம். அதனாலேயே தசாவதாரத் திருக்குளம் என்று இதற்குப் பெயர்.

இந்தக் குளத்தில் நீராடி, ஸ்ரீலக்ஷ்மி நாராயணருக்கும் அஷ்ட லக்ஷ்மியர்க்கும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு, தினமும் வீட்டில் காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள், லக்ஷ்மி நாராயணப் பெருமாள் படத்துக்கு மஞ்சள் குங்குமம், பூ வைத்து, ஆலயத்தில் சொல்லித் தரும் சுதர்சன மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபட்டால், நாற்பத்தெட்டு நாட்களில் பிரார்த்தனை கைகூடுகிறது என்பது இங்கு காணும் வழிமுறை!

தவிர, தொழில் வளம்பெற, கல்வியில் மேன்மைபெற, திருமணம் கைகூட, குழந்தைப்பேறு அமைய, தடைகள் அகல... என்று ஒவ்வொரு லக்ஷ்மிக்கும் வெவ்வேறு பிரார்த்தனை முறைகளை பின்பற்றுகிறார்கள் பக்தர்கள்.

குளத்தை அடுத்து, 33 அடி நீளத்தில் மிகப்பெரும் உருவில் ஆதிசேஷன் மேல் சாய்ந்து அமர்ந்த திருமாலையும், அவர் திருவடிகளை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாரையும் காண்கிறோம். மிகப் பெரிய திருவடிவம் என்றாலும், அபூர்வமான அழகு! இவரையடுத்தே, தசாவதார மூர்த்தியை தரிசிக்கிறோம்.

பத்து கரங்களுடன், நான்கு திருமுகங்களைக் கொண்டவராக காட்சி தருகிறார் பெருமாள். மச்சாவதாரக் குறியீடாக மீனின் வால்பக்தி; அதற்கு மேல் ஆமை; மேலே வராக, சிம்ம முகங்கள், வாமனாவதார அடையாளமாக குடை, பரசுராமனுக்கான மழு, ஸ்ரீராமனுக்கான வில், பலராமனுக்கு கலப்பை, கிருஷ்ணனுக்கு மயில் பீலி, கல்கிக்கு குதிரை முகம் (பின்புற) மற்றும் கத்தி இவை தவிர, சங்கு சக்கரம் கதாயுதம் கொண்டவராக, வரத ஹஸ்தமும், ஊரு ஹஸ்தமும் விளங்க, நின்ற கோலக் காட்சி தருகிறார் தசாவதார மூர்த்தி. இவரின் வயிற்றுப் பகுதியில் பிரம்மனையும், அதற்குமேல் சிவபிரானின் லிங்க வடிவையும் காண்கிறோம். ஆச்சர்யமான படைப்பு!

தசாவதார மூர்த்தியை வணங்கி, தனிச் சன்னிதி கொண்டிருக்கும் சுதர்சன மூர்த்தியைக் காண்கிறோம். இவருக்குப் பின்புறம், யோக நரசிம்மரின் வடிவம் அமைந்துள்ளது. மந்திரங்களில், சுதர்சன மந்திரத்தை ‘ராஜ மந்திரம்’ என்பர். இதை ஜபம் செய்தவர்களை எந்தத் தீ வினையும் அணுகாது என்கிறது மந்திர சாஸ்திரம். இந்த மந்திரத்தை சொன்னபடி, 108 முறை வலம் வந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

இவரையடுத்து கல்பவல்லி உடனாய முனீஸ்வரர், பதினெட்டு படிகளுடன் கூடிய தனிச் சன்னிதியில் ஸ்ரீ ஐயப்பன், பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, வாராஹி, சாமுண்டி எனப்படும் சப்த மாதர்கள், தடைகளை முடக்குபவரான ஸ்ரீ விஜய விநாயகர், கூப்பிய கரத்துடன் காட்சி தரும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ வைகுண்ட நாதப் பெருமாள், ஆரோக்கியம் தரும் ஸ்ரீதன்வந்திரி, நவகிரக மூர்த்திகள் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

இங்கு நாம் காணும் இன்னொரு ஆச்சர்யம் நட்சத்திர வனம்! ஜோதிடப்படி சொல்லப்படும் 27 நட்சத்திரங்கள் மற்றும் அவற்றுக்குரிய அதி தேவதைகள் ஆகியோருக்கு உகந்த தாவரங்கள் இங்கே வளர்க்கப்பட்டுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் 9 கிரகங்களால் ஆளப்படுபவை. இந்த நவகிரகங்களுக்குரிய மரங்களும் இங்கே விளங்குகின்றன. இந்த நவகிரகங்களும் மும்மூர்த்திகளின் ஆளுகைக்கு உட்பட்டவை. அந்த மூர்த்திகள் மூவரும் தம் தேவியரோடு இங்கே தரிசனம் அளிக்கின்றனர். நட்சத்திர வனத்தின் தனிச்சிறப்பு; வேறு எங்கும் காண முடியாத அமைப்பு, இது!

சரஸ்வதி-பிரம்மா, லக்ஷ்மி-திருமால், சிவன்-பார்வதி என மூன்று இணையும் மேடையில் அமர்ந்த கோலத்தில் தரிசனம். அவர்களைச் சுற்றிலும் நவ நாயகர்கள் காட்சியளிக்கின்றனர். ஜாதகங்களில் காணப்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாக, விருட்சங்களுக்கு பரிகார பூஜை செய்வதும் ஒருமுறை. அதன்படி அந்தந்த கிரகங்களுக்கு, நட்சத்திர, ராசிரீதியான தோஷங்கள் விலக, இங்கே பரிகாரங்களைச் செய்கிறார்கள் பக்தர்கள்.

வெள்வேல மரம், நாக மரம், இலுப்பை, நீர்முள்ளி, தேவதாரு, மூங்கில், எட்டி, பலா, நாயுருவி, கருங்காலி, அத்தி... என்று அந்தந்த நட்சத்திரங்கள், கிரகங்களுக்கு உரிய மரங்கள், செடிகள் அடர்ந்திருக்கின்றன. பரிகாரங்களிலோ, பூஜைகளிலோ நம்பிக்கை இல்லை என்கிறீர்களா? பரவாயில்லை. இந்தப் பகுதியில் உலவினால் போதும். நாம் சுவாசிக்கும் காற்றிலேயே ததும்பும் இவற்றின் மருத்துவ குணம், நமக்கு ஆரோக்கியம் தரும் என்பது நிச்சயம்.

இருப்பிடம்:


ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து 15 கி.மீ.; தமிழகத்தில், சோளிங்கபுரத்திலிருந்து 30 கி.மீ; வேலூரிலிருந்து 45 கி.மீ;

சென்னையிலிருந்து இரண்டு வழிகள்: 1. சித்தூர், கங்காதர நல்லூர் வழி 171 கி.மீ;

2. திருத்தணி, ஆர்.கே.பேட், பலி ஜண்டிகா, தூங்குன்றம் வழி 140 கி.மீ.

தரிசன நேரம்: காலை 6 - 9 மணி; மாலை 6 - 9 மணி.




Comments