முக்திக்கான முன்பதிவு!

அட்வான்ஸ் புக்கிங் என்பது இந்தக் காலத்தில் மிக அவசியம்! ரயிலா, விமானமா, சினிமாவா, பத்திரிகையா, தீபாவளியா, தின்கிற பீட்ஸாவா... எதுவானாலும் முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டி இருக்கிறது. நல்ல சொற்பொழிவு, கச்சேரி என்கிற இலவச விஷயங்களிலும் ஸீட் கிடைப்பது கஷ்டம்தான். ஒரு நாற்காலி காலியாக இருக்கிறதே என்று தேடிப் பிடித்து உட்காரப் போனால், அழுக்கு கர்ச்சீப் ஒன்று அதன் மேல் உட்கார்ந்துகொண்டு நம்மைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறது. அந்த கர்ச்சீப் வேறொருவரின் வருகைக்கான முன்பதிவாம்! பஸ்ஸில் துண்டுபோட்டு இடம் பிடித்திருந்தார் ஒருவர். அலட்சியமாக அதை நகர்த்திவிட்டு உட்கார்ந்தார் மற்றொருவர். துண்டின் உரிமையாளர் வந்து, ''யோவ்.. இங்கே துண்டு போட்டு ரிசர்வ் செய்திருந்தேனே... இந்த ஸீட் என்னுது. எந்திரிய்யா!'' என்று கூச்சலிட்டார். உட்கார்ந்தவர் அமைதியா ''அப்ப பஸ்ஸுமேல வேட்டியைப் போட்டா பஸ்ஸே என்னுது ஆயிடுமா?'' என்றார்.

பக்தி உலகமும் முக்தி பெறுவதற்கு ஒரு முன்பதிவுத் திட்டம் வைத்திருக்கிறது. 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்கிற ஆழ்வார் வாக்குதான் அதற்கான விளக்கம். 'மரணத் தறுவாயில் கடவுள் பெயரை உச்சரித்தால்... இறைவன் நினைவுடன் இறந்துவிட்டால் மறுபிறவி இல்லை’ என்கிறது பக்தி உலகம்.

மரணத்தின்போது எந்த நினைவுடன் சாகிறோமோ, அதற்கேற்ப மறுபிறவி என்றொரு கொள்கை உண்டு. ஜடபரதர் என்பவர் தாம் வளர்த்த மான் மீது பற்றுகொண்டு அதன் நினைவில் உயிர் விட்டதால் மறுபிறப்பில் மானாகவே வந்து பிறந்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். எனவே, மரணகாலத்தில் இறைவன் நினைப்புடன் இறந்துவிட்டால் நாமும் இறைவனாகவே ஆக வேண்டியதுதான்! மீண்டும் பிறக்க வேண்டியதில்லை.

சாகிறபோது மட்டும் சட்டென்று கடவுள் ஞாபகம் வந்து 'முருகா’ என்றோ 'நாராயணா’ என்றோ சொல்ல நம்மால் முடியுமோ? முடியாது. எப்போதும் நினைத்தும் சொல்லியும் வந்தால்தான் மரணத்தின் போதும் சொல்ல வரும். திருநாவுக்கரசர் மதம் மாறி சமணத்தில் சேர்ந்தபோதும் 'சலம் பூவொடு தீபம் மறந்தறியேன். உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்’ என்று பாடுகிறார்.

எப்போதும் இறைநாமம் சொல்லி வந்தாலும், சாகிறபோது சொல்ல முடியுமா என்பது கொஞ்சம் சிக்கலான கேள்வி.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை சொல்கிறேன். ஒரு பக்தர் கிளி வளர்த்தார். கிளியையும் மிகுந்த பக்தியுடன் வளர்த்தார். அதன் நெற்றியில் திருமண் இட்டு பரம பாகவதர் போல ஆக்கிவிட்டார். அந்தக் கிளியோ சும்மா இருக்கும்போதும், ''ராமா...ராமா'' என்று கத்தும். ''கிருஷ்ணா... கிருஷ்ணா'' என்று நீட்டி முழக்கும். அந்தக் கிளியைப் 'பக்த கிளி’, 'பாகவத கிளி’, 'பரம பாகவத கிளி’ என்று ஊரே போற்றிக் கொண்டாடியது. ஒரு நாள் கூண்டு திறந்திருந்தபோது வெளியே வந்து உட்கார்ந்து வழக்கமான ஸ்டைலில் ''ராமா..ராமா’ என்று தலையை ஆட்டிப் பாடிக் கொண்டிருந்தது.



எங்கிருந்தோ இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பூனை எமனாகப் பாய்ந்து வந்து கிளியின் கழுத்தைக் கவ்வியது. அவ்வளவுதான்! 'ராமா...ராமா’ என்று மரணத் தறுவாயில் பக்தி மழை பொழியாமல் 'கீச்...கீச்’ என்று கத்திச் செத்தது அந்த பக்த-பாகவத-பரம பாகவத கிளி. இந்தக் கிளி மாதிரிதான் பலரும். மேலுக்கு 'ராமா, கிருஷ்ணா, முருகா’ என்று பக்தி கோஷம் போட்டாலும் சாகிறபோது சொல்வார்களா என்பது சதேகமே!

பணக்காரர் ஒருவர், உபன்யாசம் கேட்கப் போனார். சொற்பொழிவாளர், ''எல்லோரும் கடவுள் நாமத்தை எப்போதும் சொல்வது நல்லது. முடியாவிட்டால் சாகிறபோதாவது சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். பணக்காரர் இதை மனதில் இருத்திக் கொண்டார்.

வீடு வந்ததும் மனைவியை அழைத்து, “நான் சாகிறபோது ‘முருகா’ என்று சொல்லவேண்டும் மறந்துவிட்டாலும் நீ ஞாபகப்படுத்து'' என்றார்.

மனைவி ரொம்ப அமைதியா ''எப்ப சாகப் போறீங்க?'' என்று கேட்டாள்.

''யாருக்குத் தெரியும்?'' - பணக்காரர்

''எதற்கும் பிள்ளைகளிடமும் கணக்குப்பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள்'' என்று யோசனை சொன்னாள் அந்த அம்மணி.

பணக்காரர் சாகிற சந்தர்ப்பமும் வந்தது. ‘முருகா’ என்று சொல்லவேண்டுமே என்பது அவர் நினைவுக்கு வந்தது. ஆனால், அந்தோ... நாக்கு இழுத்துக் கொண்டது. ஒரு வார்த்தைக்கூடப் பேச முடியவில்லை. மனைவியைப் பரிதாபமாகப் பார்த்து 'முருகா என்று நீயாவது சொல்லு, கேட்போம்’ என்பதாக ஜாடை காட்டினார். ஆனால் அந்த அம்மாள் உறுதியாக மறுத்துவிட்டார். கணக்குப்பிள்ளையைக் கைகாட்டினார். அவரோ, 'நான் புள்ளைக்குட்டிக்காரன், மாட்டேன்'' என்று மறுத்துவிட்டு, பணக்காரரின் பிள்ளைகளைக் கை காட்டினார். அவர்களோ 'முடியவே முடியாது’ என்று மறுத்தார்கள். என்ன காரணம்? எல்லோருக்கும் ஒரு விசித்திர பயம். அதாவது 'முருகா’ என்று நாம் சொல்லி, அந்த நேரம் பார்த்து அடையாளம் தெரியாமல் எமன் நம்மைக் கொண்டுபோய் விட்டால்?

கடைசிவரை பணக்காரரும் சொல்லவில்லை. பக்கத்தில் இருந்தவர்களும் சொல்லவில்லை. வாயிருந்தபோதே, வாய்ப்பிருந்தபோதே 'முருகா முருகா’ என்று சொல்லி முன்பதிவுத் திட்டத்தில் இணைந்திருக்கலாமே..! அதைவிட்டுவிட்டு கடைசி நிமிட கலாட்டா எதற்கு?

இறைநாமத்தை எப்போதும் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய நா நம்மோடு எப்போதும் இருக்கிறதாம். 'கையெழுத்து போடுங்கள்’ என்றால் 'ஆஹா பேனாவை எங்கேயோ வைத்து விட்டேன்’ என்று தப்பிக்கலாம். 'இறைநாமம் சொல்லுங்கள்’ என்றால் 'ஆஹா, நாவை எங்கோ கழற்றி வைத்துவிட்டேன்’ என்று தப்பிக்க முடியுமா?

'புத்தகம் படியுங்கள்’ என்று அலுப்பேற்படுத்துகிற புத்தகம் கொடுத்தால் 'கண்ணாடியைக் காணோமே’ என்று டபாய்க்கலாம். ஆனால் இறைநாமத்தைச் சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டுக்கொள்ளும்போது 'என் நாவு எங்கே?’ என்று ஏய்க்க முடியாது. அதனால்தான் 'நாவுண்டு நமோ நாராயணா என்ன’ என்கிறார் ஆழ்வார்.

எப்போதும் 'ராம்... ராம்’ என்றதால்தான் இறுதி நேரத்திலும் 'ஹே ராம்’ என்றார் மகாத்மா காந்தி! முக்திக்கான முன்பதிவு நாம ஜபம்! முயற்சி செய்யலாமே!


Comments