விரதங்கள் பலவகை!

உத்திரப்பிரதேசத்தில் வசித்த சமயம். அங்கே, வாரத்தின் ஏழு நாட்களும் ஒவ்வொரு நிறத்தில் உடையணிவது; அந்தந்த தேவதையை வணங்கி வழிபாடு; ஆகாரம் முதலியன செய்வது என அனுஷ்டிப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை: வெண்ணிற அல்லது பச்சை நிற ஆடை அணிவது. வேக வைக்காத மிருதுவான ஆகாரம். சூரிய நமஸ்காரம் செய்வது.

திங்கட்கிழமை: வெண்ணிறத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியான பச்சைப் பூக்கள் அல்லது பச்சை பார்டர். பச்சை வளையல் அணிவது; இரவு சந்திரனைப் பார்த்து சாப்பிடுவது. சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது. மணமாகாத கன்னிப்பெண்கள் 16 திங்கட்கிழமை விரதமிருப்பது. ‘சோலா சோமவார விரதம்’ என்பார்கள். ஆரோக்கியம் குன்றிய, யாராவது குடும்பத்திலிருந்தால், அவர்களுக்காகவும் மனைவிமார்கள் 16 திங்கட் கிழமை விரதமிருப்பார்கள்.

16 வெண்ணிற பூக்கள், 16 வெற்றிலை, 16 பழம், 16 பூணூல்களை வீட்டிலேயே சிவன் படத்துக்கோ சிறிய சிவலிங்கத்துக்கு முன் வைத்து 16 முறை பூஜிப்பார்கள். இரவு சந்திரனை பார்த்ததும், 16 பேருக்கு கொடுத்துவிட்டு, உபவாசத்தை முடிப்பார்கள். இதேபோல 16 திங்கட்கிழமை செய்வார்கள்.

செவ்வாய்க்கிழமை: ஆஞ்சநேயருக்கான நாள் என்பார்கள். சிவந்த ஆடை, சிவப்பு மலர்கள், சிந்தூரம் விசேஷம்.

சிவப்பு புடைவை, சிவப்பு வளையல் அணிவார்கள். ஊறவைத்த கொண்டைக் கடலையை நிவேதனம் செய்வார்கள். எரு இலையில் சிந்தூரத்தால் ‘ராம் ராம்’ என எழுதி ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை கட்டி போடுவார்கள். ஒரு பிரம்மச்சாரிக்கு உடை வாங்கி கொடுத்து, அவரை விருந்துண்ணச் செய்து விரதத்தை முடிப்பார்கள்.

புதன்கிழமை: மஞ்சள் நிற உடையணிவர். அன்றைய தினம் ராமரை வழிபடுவர். அபிஷேகத்துக்கோ நிவேதனம் செய்வதற்காவது பால் எடுத்துச் சென்று கொடுப்பார்கள். முக்கியமான பயணமோ, காரியமோ எதுவும் செய்வதைத் தவிர்த்து, ராம ஜபம் செய்து கொண்டிருப்பார்கள். இரவு மட்டும் பால், பழம் உண்பார்கள்.

வியாழக்கிழமை: கடலைப் பருப்பு உணவு தயாரித்து நிவேதனம் செய்வது வழக்கம். குருபகவானை வணங்குவர். மாலையில் லஷ்மி பூஜை செய்வார்கள். வியாழனன்று விளக்கு வைக்கும் நேரத்தில் லஷ்மியை விளக்கேற்றி பூஜிப்பார்கள்.

வெள்ளிக்கிழமை: வெண்ணிறத்தில் மஞ்சள் பூ போட்ட உடையணிந்து பூஜிப்பார்கள். வெண்ணிறமான பால், சிற்றுண்டி பாயசம் செய்து நிவேதிப்பார்கள். வேறு யாரிடமிருந்து எந்த பொருளும் வாங்க மாட்டார்கள். உப்பு, புளி, காரம் இரண்டையும் (ஒரு சிலர் உப்பு) உணவில் சேர்ப்பதில்லை.

பயணம் செய்வதில்லை. வெள்ளிக்கிழமை உப்பை விலைக்கு வாங்குவார்கள். ஏனெனில் சமுத்திரத்திலிருந்து வந்த உப்பை லஷ்மியாக எண்ணுகிறார்கள்.

சனிக்கிழமை: கறுப்பு, நீல உடை உடுத்துவர். கண்டிப்பாக வாய்விட்டு பாடி கிருஷ்ண சரிதம், விட்டல நாமம், ராமசரிதம் பஜனை செய்வார்கள்; யாராவது ஒருவரே காலில் சலங்கை, டோல், மிருதங்கம் வாசித்தபடி ராமசரிதமானஸ், குரு சரிதம் கதை சொல்வதும் உண்டு

Comments