பிடாரி ஏகவீரி!

தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் அடையாளம் காட்டும் இறைவடிவங்கள் பல. அவற்றுள் காலந்தோறும் கோயில்களில் இடம்பெற்ற பெண் தெய்வங்கள் எண்ணற்றவை. தோற்றம் ஒன்றுபோல் இருந்தாலும், பெயரளவில் வேறுபட்டு விளங்கும் தெய்வங்கள் ஒருபுறம் என்றால், முற்றிலும் மாறுபட்ட தோற்றங்களில் பல கோயில்களில் ஒரே பெயருடன் விளங்கும் இறைவடிவங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த இரண்டாம் வகை இறைச் சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கன பிடாரிகள்.

கல்வெட்டுகளில் பிடாரி என்றும் படாரி என்றும் பட்டாரி என்றும் வழங்கும் இச்சொல், பெண் தெய்வத்தைக் குறிக்கும் பொதுச் சொல்லாகவே வழங்கியுள்ளது. மாயா படாரி, மாகாளத்துப் பிடாரி, துர்க்கா படாரியார், உமா பிடாரி எனும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கன.

ஆலம்பாக்கம் கல்வெட்டில் அன்னையர் எழுவர் கோயில், படாரி கோயில் என்றே சுட்டப்படுகிறது. இக் காலகட்டத் தமிழ் இலக்கியங்களிலோ, இவற்றுக்குக் காலத்தால் முற்பட்ட தேவாரப் பதிகங்களிலோ வழக்குப் பெறாத இச்சொல், கல்வெட்டுகளில் பெருவழக்குப் பெற்றிப்பது எளிய மக்களிடையே இச்சொல்லுக்கு இருந்த செல்வாக்கை உணர்த்துவதாய் அமைகிறது. இச்சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல்லாக ‘படாரர்’ எனும் சொல் கல்வெட்டுகளில் ஆண் தெய்வங்களைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது. இவையே பின்னாளில் பட்டா ரகர், பட்டாரகி என்று மாற்றம் பெற்றன.

கல்வெட்டுகள் சுட்டும் பிடாரிக் கோயில்களுள் சில எத்தகு பெண் தெய்வத்தைக் கொண்டிருந்தன என்பதை அறியக்கூடவில்லை. மிக அரிதாகவே கல்வெட்டும் அது சுட்டும் பிடாரியின் இறைத்திருமேனியும் கோயில்களில் காணப்படுகின்றன. அவற்றில், ஒன்று தான் ஏகவீரி. தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில், சுவாமிமலைக்குப் பிரியும் குறுக்குச் சாலையின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது திருவலஞ்சுழி சடைநாதர் திருக்கோயில். இதன் மூன்றாம் சுற்றுக்கும் வெளிக்கோபுரத்துக்கும் இடைப் பட்ட நிலப்பகுதியில் உள்ள சேத்ரபாலர் கோயிலில், பிடாரி ஏகவீரியை முன்னிலைப்படுத்தும் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.

இவை இரண்டுமே முதலாம் இராஜேந்திரர் காலத்தவை. அவற்றுள், மன்னருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, ‘இத்திரு வலஞ்சுழி உடையார் கோயிலின் தென் பக்கத்து எழுந்தருளியிருக்கும் பிடாரியார் ஏகவீரிக்கு’ என்று தெளிவாகப் பிடாரி கோயில் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. இக்கல்வெட்டு குறிப்பிடும் இடத்திலோ இன்றும் அத்திருமுன் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இடிந்து, சிதைந்து, கற்கள் சிதறிக் காட்சியளிக்கும் இத்திரு முன்னின் கீழ்த்தளச் சுவர்களிலோ, தாங்குதளப் பகுதியிலோ கல்வெட்டுகள் ஏதுமில்லை.

கோயில் சிதைவுற்ற காரணத்தால், இங்கு இடம்பெற்றிருந்த பிடாரி ஏக வீரியை, அம்மன் கோயில் திருச்சுற்றின் தென்கிழக்கு மூலை அறையில் குடிய மர்த்தியுள்ளனர். ‘அஷ்டபுஜ மகாகாளி’ என்ற புதிய பெயரில் விளங்கும் இத் தேவி, உத்குடியாசனத்தில் இருந்த போதும், அதிலும் ஒரு புதுமையாக வலப்பாதத்தால் இருக்கையில் உதைத்துச் சுழலும் திருக்கோலம். அம்மையின் இதழ்களுக்கு இடையே காட்டப்பட்டிருக்கும் இடைவெளி அவரது சிரிப்பை உன்னதப்படுத்துகிறது. சடைமண்டலமாய் விரியும் தலையலங்காரத்தின் உச்சியில் இரண்டு பாம்புகள் தழுவிய மண்டை யோடு.

நெற்றிப்பட்டம்; வலச்செவியில் ஆந்தைக் குண்டலம்; இடச்செவியில் மனிதக் குண்டலம்; கைகளில் தோள், கை வளைகள், திருவடிகளில் தாள் செறிகள் என அழகு பொலிய காட்சி தருகிறாள் ஏகவீரி. சுருக்கப்பட்டிருக்கும் இடையாடையை இருத்தும் இடைக்கச் சின் முடிச்சுப்பட்டி ஒன்று இருக்கையில் படர்ந்துள்ளது.

தேவியின் மார்பைப் பாம்பொன்று சுற்றிப் பிணைத்துள்ளது. மண்டையோடு களாலான முப்புரிநூல், உடலின் இயக்கத்துக்கேற்ப இடையின் வலப்புறத்தே முழுச் சுழற்சி பெற்று உபவீதமாய் முதுகுக்கு நகர்கிறது. கழுத்தைச் சரப்பளியும் சவடியும் அலங்கரிக்க, தேவியின் திரு முகம் இலேசான இடச்சாய்வில் உள்ளது. வலக்கைகளுள் முன்கை முழங்கையள வில் மடிந்து மேலுயர்ந்துள்ளது. இரண் டாம் கையில் குறுவாள். மூன்றாம் கை நீளமான வாள் கொள்ள, நான்காம் கையில் மழு. இடப்புறக் கைகளுள் முன்கையில் தலையோடு. இது வழக்கமான அமைப்பில் ஏந்தலாக இல்லாமல், ‘இதோ பார், உனக்கு முன் எதிர்த்தவனின் நிலையை! தவறு செய்தால் இந்நிலைதான் உனக்கும்’ எனுமாறு, எச்சரிக்கையூட்டும் மெய்ப்பாட்டில் உள்ளது. இரண்டாம் கையில் சுட்டு முத்திரை; பக்கவாட்டில் நெகிழ்ந்து சுட்டுவது மரபு விலக்கமாய்ப் பதிவாகியுள்ளது. மூன்றாம் கையில் மணி. நான்காம் கை வியப்பில் விரிந்துள்ளது.

ஏகவீரியின் இடச்செவியிலுள்ள மனிதக் குண்டலம் தனித் தன்மையது. முற்பாண்டியர், முற்சோழர் காலச் சாமுண்டிச் சிற்பங்களில் ஏதேனும் ஒரு செவியில் அல்லது இரு செவிகளிலும் பிணக்குண்டலம் காட்டப்பெறுவதுண்டு. இக்குண்டலம் செவித்துளையின் இரு புறத்தும் தொங்கியமையும். ஏகவீரியின் இடச்செவிக் குண்டலம் இந்த அமைப்பிலிருந்து மாறுபட்டு, உயிருள்ள மனிதனையே செவித்துளையில் நுழைத்திருப்பது போல் அமைந்துள்ளது.

இத்தேவியைச் சுட்டும் கல்வெட்டுகளுள் ஒன்று: ‘முதல் இராஜராஜரின் மாமியார் - அதாவது, இராஜராஜரின் பட்டத்தரசியான தந்திசத்தி விடங்கியாரின் அன்னையார் குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக வலஞ்சுழிக் கோயில் சிவ அந்தணர்களாய் இருந்த தலைசேனன் வலஞ்சுழியன், எழுவன் தலைசேனன், சாத்தன் பட்டசோமாசி, பட்ட சோமாசி செல்வன், ஆராமுது திருவிக்கிரமன், நக்கன் பண்டிதன் எனும் அறுவரிடம் நாற்பது காசு தந்தார்!’ என்கிறது.


காசு பெற்ற கோயில் சிவ அந்தணர்கள் அதை முதலாகக் கொண்டு, அதன் ஆண்டு வட்டியான முப்பது கலம் நெல்லில் பிடாரிக்கு நாள்தோறும், சிறப்பு வழிபாடு இயற்ற ஒப்பினர். அப்போது அம்மைக்கு வெற்றிலைப் பாக்குடன் உணவுப் படையல் வழங்கப்பட்டது. விளக்கொன்றும் ஏற்றப்பட்டது. முதல் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில், சேத்ரபாலர் கோயில் நிவந்தங்கள் திருத்தி அமைக்கப்பட்டபோது, பிடாரி ஏகவீரியின் சாந்திக்குப் பதினைந்து கலம் நெல் ஒதுக்கப்பட்டதென்று மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றில் பிடாரியைக் குறிக்கும் கல்வெட்டுகள் இருந்தபோதும், அக்காலப் பிடாரிகளின் சிற்பங்களைக் காணமுடிவதில்லை. கல்வெட்டுச் சுட்டலும் அச்சுட்டலுக்குரிய பிடாரிச் சிற்பமும் அதன் கோயிலும் ஒருங்கே காணக்கிடைப்பது வலஞ்சுழியில்தான் என்பதால், ஏகவீரி தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பிடாரியாக அடையாளப்படுகிறார்.

Comments