துணியில் இல்லை துறவு

காவி கட்டுவதால் மட்டுமே ஒருவர் சந்நியாசி ஆகி விடுவதில்லை. காவித் துணி மீது அதிகப் பற்று வைத்துக் கொண்டு, நாலு பேரிடம் சண்டை போட்டால்... அவர்கள் என்ன துறவிகளா! இதுவும் நடந்தது.

புரட்சித் துறவியாக வாழ்ந்த ஸ்ரீராமானுஜர் திருமடத்தில் சீடராக வந்த பலர் பக்குவமானவர்கள். சிலர் அரைகுறைகள். ஸ்ரீராமானுஜர், சீடர்களிடம் காட்டும் பரிவில் பாரபட்சம் இருப்பதாக அவர்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள். துறவு பெற்று ஸ்ரீராமானுஜர் பக்கத்திலேயே இருக்கும் தங்களிடம் காட்டும் பரிவை விடவும், இல்லறத்தில் இருக்கிற உறங்காவில்லியிடம் (தனுர்தாஸர்) அதிக அன்பு காட்டுவதாக அவர்களுக்கு ஆதங்கம். ராமானுஜர் இந்தக் குற்றச்சாட்டைக் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில் சந்நியாசச் சீடர்களுக்கு மத்தியில் ஒரு நாள் லேசான சண்டை வேறு வந்துவிட்டது. சாயம் போட்டிருந்த அவர்களது காவித் துணியில் சின்னச் சின்னக் கிழிசல்கள் இருந்தன. பொறாமையில் கிழித்துவிட்டதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். இந்த விவகாரம் ஸ்ரீராமானுஜர் வரை வந்துவிட்டது. துறவு அமையாத அந்தத் துறவிகள் காவித் துணிக்குச் சண்டையிடுவதைக் கண்டு ராமானுஜர் நகைத்தார். ஒரு நாடகம் நடத்தினார்.

பன்னிரண்டு திருமண் அணிந்த பாகவத உத்தமர்கள் சிலரை அழைத்தார். உறங்காவில்லி என்ற தம் சீடரின் இல்லம் சென்று அங்குள்ள நகைகளைக் கொண்டு வருமாறு பணித்தார் (திருடச் சொன்னார் என்று சொல்லக் கூடாது!). உறங்காவில்லி, அவர் மனைவி மற்றும் அவர்களின் சொத்தும் நகைகளும், எப்போதோ ராமானுஜர் சொத்துகளாக ஒப்படைக்கப்பட்ட விஷயங்கள். அவர் ஸ்வாமி. உடையவர். எனவே, உரிமையோடு நகைகளைக் கொண்டுவரச் சொன்னார்.

பாகவத உத்தமர்கள், உறங்காவில்லியின் இல்லம் போனபோது அவர் மனைவி பொன்னாயி நிறைய நகைகளோடு ஊஞ்சலில், ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்தாள். தூங்கவில்லை. ஸ்ரீராமானுஜர் அனுப்பிய பரம பாகவதர்கள் வந்து ஒரு பக்கத்துக் காது, மூக்கு, கையில் இருந்த தங்க - வைர நகைகளைக் கழற்றிக் கொண்டனர். பக்திமிக்க பொன்னாயி, அடியார்கள் ஏது செய்தாலும் அதற்குத் தக்க காரணம் இருக்கும் என்று தூங்குகிற மாதிரி பாசாங்கு செய்தாள். 'ஒரு பக்கத்து நகையைக் கொண்டு சென்று என்ன பயன்? மறுபக்கத்து நகைகளையும் கொடுப்பதே கடமை’ என்று எதேச்சையாகப் புரள்பவள் போல் புரண்டாள். 'அவள் விழித்துக் கொண்டுதான் விட்டாளோ?’ என்று அஞ்சிய பாகவதர்கள் ஒரு பக்கத்து நகையுடன் ஓட்டமாக ஓடி வந்தனர்.

ஸ்ரீரங்கம் கோயில் பணிகளை முடித்துக் கொண்டு உறங்காவில்லி அப்போதுதான் வீடு திரும்பினார். ஒரு பக்கம் மட்டும் நகைகளோடு காட்சி அளித்த தம் மனைவியைக் கண்டதும் அவருக்கு 'நகைச்சுவை’ உணர்வு தோன்றி நகைத்தார். பொன்னாயி நடந்ததை விவரித்தாள். அவ்வளவுதான். உறங்காவில்லி பயங்கரக் கோபம் அடைந்தார். பரம பாகவதர்கள் எல்லா நகைகளும் கழற்றும்படி பொறுமையாக இல்லாத பொன்னாயி தமக்கேற்ற மனைவி அல்ல என்று சீறினார்.

பாகவதர்கள் மறுபக்கத்து நகைகளையும் கழற்றிக் கொள்ள வசதியாக இருக்கட்டும் என்று கருதியே தாம் திரும்பிப் படுத்ததாகக் கூறினார் பொன்னாயி. ''அவர்களே புரட்டிப் போட்டு எடுக்கட்டுமே... அதுவரை நீ ஜடம் போல கிடக்கலாமே. 'நானே உங்களுக்குத் தருவேன்’ என்கிற அகங்காரம் அல்லவா உன்னைப் புரட்டியது'' என்று திட்டினார். 'அகங்காரம், பாகவத தர்மம் அல்ல’ என்று தன் மனைவியை விலக்கி வைத்தார் உறங்காவில்லி.

வழக்கு ராமானுஜர் முன் போனது. காவித் துணிக்குச் சண்டை போட்டுக் கொண்ட சீடர்கள் முன்னால், நகைகளை எப்படி விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்ற இல்லறத்தார் வழக்கு விசாரணைக்கு வந்தது. நகைகளைப் பாகவதர்கள் கழற்றும் பொருட்டு புரண்டு படுத்ததாகக் கூறும் மனைவியையும், அதனால் அல்லவா பாகவதர்கள் நகைகளைப் பெறாமல் புறப்பட்டனர் என்று குற்றம் சாட்டும் கணவனையும் விசித்திரமாகப் பார்த்தார்கள் ஏனைய சீடர்கள். உறங்காவில்லி மற்றும் அவர் மனைவியின் தூய துறவுள்ளத்தைக் கண்டு ராமானுஜரின் சீடர்கள் வெட்கப்பட்டனர்.

உறங்காவில்லியின் வேண்டுகோள்படி 'பொன்னாயி, தன் மனைவி இல்லை’ என்று தீர்மானம் ஆனது. அப்படி ஆனதால், அவளைத் தாம் பெற்றுக் கொள்ளலாமா என்று ராமானுஜர் கேட்க ''அவள் எப்போதும் உமக்கு உரியவளே!'' என்றார் உறங்காவில்லி. ''கிடைத்தற்கரிய பரிசு கிடைத்தால் அதை நம் அதிகமான அன்புக்குரியவருக்கு வழங்குவதே வழக்கம். நம் அன்புக்கு எல்லோரும் உரியவர் என்றாலும் அதிகமான அன்புக்கு உரியவன் உறங்காவில்லி என்பதால் அவனுக்கே அளிக்கிறோம். இனி இவள் நாம் அளித்த பரிசு என்றே போற்றிப் பாதுகாக்க வேண்டும்'' என்று பொன்னாயியை உறங்காவில்லியிடம் ஒப்படைத்தார் ஸ்ரீராமானுஜர்.

துறவு என்பது துணியைப் பொறுத்ததல்ல. தூய தியாகத்தைப் பொறுத்தது!



துறவியும் கேளிக்கையும்!

விவேகானந்த சுவாமிகள் ஜெய்ப்பூருக்குச் சென்றபோது, மகாராஜா அவரைத் தமது அரண்மனையில் தங்கச் சொன்னார். ஆனால், சுவாமிகள் அதை ஏற்கவில்லை. அரண்மனையை ஒட்டிய எளிய அறையில் தங்கினார். விவேகானந்தரின் சீடரான கேத்ரி மகாராஜாவும் அப்போது அங்கு வந்திருந்தார்.

மகாராஜா இரவு விருந்துக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி சுவாமிகளை மகாராஜா கேட்டுக்கொண்டார்.

''நான் ஒரு துறவி. இது போன்ற கேளிக்கைகளில் எனக்கு விருப்பமில்லை!'' என்று அனுப்பி விட்டார்.

இசை நிகழ்ச்சி தொடங்கியது. பாட வந்த பெண்மணிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. 'சுவாமிகள் வருவார்’ என்று எதிர்பார்த்திருந்த அவள் மனம் நொந்து போயிற்று. உருக்கமான குரலில் சூர்தாஸின் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினாள்.

அந்தப் பாடலின் பொருள்: 'பரமனே... சமபாவம் என்பதை இயல்பாகக் கொண்ட நீ, பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கி விடலாமா? இறைவனின் பதுமையில் இரும்புத் துண்டு ஒன்று பஞ்சலோகங்களில் ஒன்றாக அமைகிறது. மற்றொரு இரும்புத் துண்டோ, கசாப்புக் கடைக்காரரின் கத்தியாகி விடுகிறது. ஆனால், இரண்டையுமே பொன்னாக்க வல்லவர்கள் அல்லவோ மகான்கள்! ஒரு மழைத்துளி சாலையில் விழுந்து சாக்கடையாகிறது. மற்றொன்று, யமுனையில் விழுந்து புனிதமாகிறது. ஆனால், இரண்டுமே கங்கையில் கலந்துவிட்டால் புண்ணிய நதி ஆகிவிடவில்லையா? இறைவா, என்னை இழிவாக நினைக்காதீர்கள். தங்கள் முன்னால் எல்லோரும் சமமானவர்கள் அல்லவா?’ என்பதே அந்தப் பாடலின் பொருள்.

தனது அறையில் இருந்த சுவாமிகளின் காதில் இது விழுந்தது. அந்தப் பெண்மணி பாடிய பொருள் பொருந்திய கீதம் அவரை உருக்கியது. ஏழையானாலும், செல்வந்தரானாலும், பத்தினியானாலும் ஆண்டவன் அருளுக்கு அனைவருமே உரியவர் என்பதை அவள் சுட்டிக்காட்டியதைப் புரிந்து கொண்டார் சுவாமிஜி. பின்னர் எழுந்து வந்து, இசை நிகழ்ச்சியின் முன்வரிசையில் அமர்ந்து கேட்டு, அந்தப் பாடகியை ஆசீர்வதித்துவிட்டுப் போனார்.

Comments