தட்சிணமேரு தரிசனம்!

விவசாயம், கலை, வணிகம், ஆன்மிகம், நிர்வாகம் என அனைத்திலும் மக்களை முன்வைத்து எவனொருவன் ஆட்சி செய்கிறானோ... அவனே மிகச் சிறந்த மன்னன்; அவனது ஆட்சிக் காலமே பொற்காலம்! இப்படி சகலத்துக்கும் உதாரணபுருஜனாக வாழ்ந்து காட்டியவன்... ராஷராஷ சோழன்.

தஞ்சைத் தரணியில், கோயிலும் அதன் கட்டுமானமும் இறையுருவங்களும் அளவற்ற பக்தியுடன் சோழர்களால் கட்டப்பட்டவை. இத்தனை ஆலயங்களிலும் நேர்த்தி மிக்க, பிரமாண்டமான ஆலயம்... தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். 1010ஆம் ஆண்டு கட்டப்பட்டு, இதோ... இந்த வருடம் 1000வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பெருவுடையார் கோயில்.

சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் உதித்த வானவன்மாதேவிக்கும் 2வது மகனாகப் பிறந்தவன் ராஷராஷன். இயற்பெயர் அருண்மொழி தேவன். இது தவிர இன்னும் ஏராளமான பெயர்களைக் கொண்டிருந்தாலும் ராஷராஷனுக்கு இஷ்டமான பெயர் சிவபாதசேகரன். அண்ணன் ஆதித்தகரிகாலன் கொலை செய்யப்பட... இந்த நேரத்தில் சித்தப்பா மதுராந்தக உத்தமசோழன் அரியணைக்கு ஆசைப்பட... விட்டுக் கொடுத்தான் ராஷராஷன். அக்கா குந்தவையின் அரவணைப்பில் வளர்ந்தான்; நிதானம், ஆன்மிகம், யுத்தம், கருணை ஆகிய அனைத்தையும் அவரிடம் கற்றறிந்தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு (985 1014) அரியணை ஏறினான்; ராஷராஷன் என பெயர் பெற்றான்.

வாராஹிதான் இஷ்ட தெய்வம். இவளை வணங்கிவிட்டே, போர் தொடுக்கச் செல்வான். வெற்றியுடன் வந்ததும் வாராஹிக்கு நன்றி தெரிவிப்பான் (தஞ்சை பெரிய கோயிலில், ஸ்ரீவாராஹிக்கு தனிச்சந்நிதியே உள்ளது. இவளை வணங்கி வழிபட, எதிரிகள் தொல்லை ஒழியும்; அனைத்திலும் வெற்றி கிட்டும் என்பர்).

விவசாயப் பகுதி நிறைந்திருந்தால் ஊர் என்றும்; அந்தணர்கள் வாழும் பகுதியை சபை என்றும்; வணிகர்கள் வாழ்ந்த இடத்தை நகரம் என்றும் மாற்றினான். தஞ்சை தரணி என்று இன்றைக்கும் பெருமைப்பட பேசுவதற்கு அப்போது அச்சாரம் போட்டதே ராஜராஜன்தான் என்பர்.



மாமல்லபுரம் துவங்கி கேரளம் வரை, தான் கையகப்படுத்திய ஊர்களில் இருந்தெல்லாம் பெரிய கோயிலுக்கு நிதி தந்திருக்கிறான். கோயிலில் வழிபாடுகள் குறைவின்றி நடக்க, தொண்டை தேசம் துவங்கி ஈழம் வரையுள்ள பல கிராமங்களை, தேவதானம் எனக் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு ஊரும் 1,44,500 கலம் நெல்மணிகளும் 2,800 கழஞ்சு தங்கமும் பெருவுடையார் கோயிலுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறான்.

பெருவுடையார், ஸ்ரீபிரஹன்நாயகி மற்றும் உள்ள தெய்வங்களுக்கு, 39925 (179 கிலோ) கழஞ்சு பொன் ஆபரணங்கள், 155-க்கும் மேற்பட்ட வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கொடையாக அளித்தானாம்!

குந்தவை நாச்சியார், 8993 (40.46 கிலோ) கழஞ்சு பூஜை பாத்திரங்களையும் 2343 கழஞ்சு நகை ஆபரணங்களையும் ஆலயத்துக்கு வழங்கினாராம்!

காஞ்சியம்பதியில், ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் மனதைப் பறிகொடுத்தான் ராஜராஜன்; 'கச்சிப்பேட்டு பெரிய தளி' எனப் போற்றி மகிழ்ந்தான். இந்த ஆலயத்தின் தாக்கத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை பெரியகோயில்!

இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியை 'ராஜராஜீச்சரம்' எனக் குறிப்பிட்டுள்ளான் ராஜராஜன். அடுத்து வந்த ராஜேந்திர சோழன், 'ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்' எனக் குறிப்பிடுகிறான்.

நவீன உலகின் கட்டுமான முன்னேற்றங் களும் மாற்றங்களும் வந்தாலும்கூட, ஆயிரம் வருடங்களைக் கடந்தும் பிரமாண்டம் குறையாமல் அப்படியே இருக்கிறது பெரிய கோயில். வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவன் இந்தக் கோயிலைக் கட்டிய கலைஞன்! இவனுக்கு பக்கபலமாக, மதுராந்தகனான நித்திவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இருவரும் இருந்தனராம்!

கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து 3 அடுக்குகளுடன் ராஜராஜன் திருவாயிலும் அமைந்துள்ளது. இவை தவிர, தென்புறம் இரண்டும் வடபுறம் இரண்டுமாக 4 வாசல்கள் உள்ளன.

ஸ்வாமி கருவறையின் விமானத்தை பெரிதாகவும், கோயில் கோபுரத்தை சிறி தாகவும் அமைத்தான் ராஜ ராஜன். பெரியகோயில் கோபுரத்தைவிட பெருவுடை யாரின் விமானம் பிரமாண்ட மானது! சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம்!

சிவனார் சந்நிதி கொண்டிருக்கும் அந்த விமானம், தட்சிணமேரு எனப்படும். பீடம் துவங்கி கலசம் வரை முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டது.

'ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட விமானம்; இதன் நிழல் தரையில் விழாது' என்பர். இரண்டுமே தவறு. பல கற்கள்கொண்டு கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட விமானம் இது; இதன் நிழல் தரையில் விழுகிறது!

தட்சிணமேருவாக அமைக்க எண்ணியதாலும் சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டிருந்த தாலும் பிரமாண்டமாக லிங்கத் திருமேனியை வடிவமைத்தான் ராஜராஜன். 13 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார் பெருவுடையார். ஒரே கல்லால் ஆன லிங்கம் இது.

வழிபாடு இங்கே, மகுடாகம அடிப்படையில் அமைந்துள்ளது. சிவலிங்க வழிபாட்டை நவதத்துவம் என்கிறது மகுடாகமம். 'லிங்கத் திருமேனியின் நடுவில் தூண்போலத் திகழும் பாணமானது, மூன்று வகை அமைப்புகள் கொண்டிருக்கும்! இது அடியில் நான்கு பட்டை யாகவும் இடையே எட்டுப்பட்டையாகவும் மேல் பகுதியில் வட்டமாகவும் இருக்கும்! சதுரத் தூண் வடிவம் பிரம்மா; எட்டுப்பட்டை வடிவம் ஸ்ரீவிஷ்ணு; வட்டத்தூண் ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி என வணங்கிவிட்டு, உச்சிக்கு வரும்போது பரசிவ நிலையை தரிசிக்கலாம்' என்கிறது மகுடாகமம். அதாவது, 'உருவமெனத் திகழும் லிங்கமானது மறைந்து, பரவெளியான இந்தப் பிரபஞ்சமே லிங்கமெனத் திகழும்' என்று சிலிர்க்கிறது இந்த ஆகமம். இவற்றையெல்லாம் அறிந்து அதனை மீறாமல் கோயில் எழுப்பியிருக்கிறான், ராஜராஜன்!

சுமார் 216 அடி உயரம் கொண்ட விமானமே பெரும் சாதனை; அதிலும் பொன்வேய்ந்து அழகு பார்த்திருக்கிறான். இதை தெரிவிக்கும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சிவபெருமான் குடிகொண்டிருக்கும் மேரு பர்வதம் எப்படி பொன்மலையாக தகதகக்குமோ... அதேபோல் தட்சிணமேருவாம் தஞ்சைக் கோயிலும் பொன்மலையாகவே விளங்கியுள்ளது. ஒட்டக்கூத்தன் இதுகுறித்துப் பாடியுள்ளான்; கருவூர்ப்புராணமும் 'பொற்கிரி' என்றே போற்றுகிறது.

இந்தக் கோயில் சிறப்புற விளங்க, 196 பணியாளர்களை நியமித்தான் மன்னன். நிலம் மற்றும் தொழில் நிமித்தமாக அதிகாரி களையும், கருவூலதாரர்களாக இரண்டு அந்தணர் களையும், ஏழு கணக்கர்களையும், எட்டு துணை கணக்கர்களையும் நியமித்தவன், 178 பிரம்மச்சாரிகளை மாணியக்காரர்களாக அமர்த்தியிருக்கிறான். தவிர, 400 ஆடல் மகளிரையும் உடுக்கை, வீணை, மத்தளம் முதலான வாத்தியங்களை வாசிக்க 258 இசைக் கலைஞர்களையும் நியமித்தான்.

ஆலயத்தை தூய்மைப்படுத்துவது, இறைவ னுக்கு பூமாலை தொடுப்பது என ஒவ்வொன்றுக்கும் ஆட்களை நியமித்து, அவர்களுக்கு வீடு, நெல், சம்பளம் என சகல வசதிகளையும் தந்து குடியமர்த்தியிருக்கிறான் ராஜராஜன்.

மேலும்... குடை தாங்கிகள், தண்ணீர் தெளிப்பவர்கள், விளக்கேற்றுவோர், மடப்பள்ளியில் உணவு சமைப்பவர்கள், உணவு சமைப்பதற்கான பானையைச் செய்பவர்கள், நாவிதர்கள்... முக்கிய மாக திருப்பதிகம் பாடுவதற்கு 50 ஓதுவார்கள் என ஆலயத்தை பிரமாண்டமாக நிர்வகித்துள்ளான்.

வணிகர்கள் வியாபாரம் செய்து வளர வேண்டும் எனும் நோக்கத்தில், பெரியகோயிலுக்கு குறிப்பிட்ட தொகையை அளித்து, அதை வணிகர் களுக்கு வட்டிக்கு விட்டிருக்கிறான். வட்டியாக... கோயிலில் உள்ள விநாயகருக்கு தினமும் 150 வாழைப்பழங்கள் தரவேண்டுமாம்!

கோயில் திருப்பணிக்கு புதுக்கோட்டை- நார்த்தாமலையில் இருந்து கல் எடுத்து வந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டுகள் ஏதுமில்லை. அதே போல், தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பெரிய மலை இருந்திருக்கலாம்; அந்த மலையையே அழித்து கோயில் எழுப்பப் பயன் படுத்தியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களது கருத்து. நர்மதை நதிக்கரைப் பகுதியில் இருந்து கல் கொண்டு வந்ததாகச் சொல்பவர்களும் உண்டு.

ராஜராஜன் வைத்த பிரமாண்ட நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட... (வாராஹிசந்நிதிக்கு அருகில் உள்ளது இது), பின்னர் வந்த நாயக்கர்கள் நந்தி அமைத்து, மண்டபம் எழுப்பினர்.

அசைவப் பிரியரான ராஜராஜன், கோயில் கட்டப்பட்ட ஆறு வருடங்களும் முழு சைவத்துக்கு மாறினானாம். திருப்பணிக்கு, நிதியுதவி செய்த அனைவரது பெயரையும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளான்.

சுமார் 37,000 பேர் இழுத்தால் நகரக் கூடிய பிரமாண்டமான தேரினை அமைத்தான். அந்நியர் படையெடுப்பில் தேர் முழுவதும் அழிந்து விட்டதாம். தேர் இருந்ததற்கான சாட்சியாக, தேரடி... இப்போது மாட்டுத் தொழுவமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது!

இன்று பெருவுடையார் கோயில் வியந்து போற்றப்பட்டாலும், கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இதைக் கட்டியது யார் என்றே கண்டறியப்படவில்லை. இது, வெட்கித் தலை குனிய வேண்டிய உண்மை... 'இந்த ஆலயத்தைக் கட்டியது ராஜராஜசோழனே' என்று ஆதாரங்களை சேகரித்து பறைசாற்றியது வெளிநாட்டவரே! இன்னொரு சோகம்... கோயிலுக்கு வெளியேதான் அமைந்துள்ளது ராஜராஜன் சிலை!

கோயில் கட்டும் முன், அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டி, சுமார் ஒரு வருடம்வரை விட்டு வைத்தனர்! இதனால் குழியில் உள்ள மண் சூரிய ஒளி பட்டு, பாறைக்கு நிகராக மாறிவிடுமாம். பிறகு அஸ்திவாரம் அமைத்தால், ஆண்டாண்டு காலத்துக்கும் நிமிர்ந்து நிற்குமாம் கட்டடம்.

கட்டட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, இப்பேர்ப்பட்ட ஆலயத்தை தவமாய் தவமிருந்து கட்டியுள்ளான் மாமன்னன் ராஜராஜன்.

தஞ்சை பெரியகோயில்... பல்லாண்டு வாழ்கவே!
தரணியில் தமிழ் போல் நிலை நின்று வாழ்கவே!

Comments