‘பகவானை நெருங்கும் யுக்தி’

‘‘நீங்கள் ஒரே ஒரு கோடு வரைந்து இதுதான் ஆஞ்சநேயர் என்றால், நான் குற்றம் சொல்லாமல் வணங்குவேன். இதெல்லாம் ஒரு ஓவியமா? வெறும் கிறுக்கல் என்றெல்லாம் வாதிக்க மாட்டேன். உன் உள்ளத்து ஆஞ்சநேயர் உன் மூலம் அப்படி வெளிப்படுத்திக் கொண்டால் அதை விமர்சிக்க நான் யார்?’’ - என்று கேள்வி எழுப்பும் ஓவியர் ராமச்சந்திரனின் வயது 81.

இந்து மதத்தின் சாராம்சங்களை ஓவிய வடிவில் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அரிய கலைஞர்களுள் ராமச்சந்திரனும் ஒருவர். முறையாக ஓவியம் கற்காவிட்டாலும், தனது இரண்டாவது வயதிலிருந்து சித்திரம் தீட்டத் தொடங்கிய இவரது கரங்கள் இன்னமும் கடவுள் காட்சிகளை வண்ணத்தில் வார்த்தபடியே இருக்கிறது. இரண்டு வருடத்துக்கு முன் ஒருநாள் தொலைபேசியில், ஜி! சிவனின் ஓவியம் ஒன்று தீபாவளி மலருக்கு வேணும். வரைந்து தர முடியுமா? ப்ளீஸ்" என்று கேட்டேன். இருங்க, கேட்டுச் சொல்றேன்" என்று தொடர்பைத் துண்டித்தார்.

மறுநாள் மாலை, தம்பி நேத்து தியானத்திலே பெருமான்கிட்ட பர்மிஷன் கேட்டேன். ‘வரைஞ்சு கொடு’ன்னு சொல்லிட்டாரு. இன்னிக்குப் படத்தை வரைஞ்சிட்டேன். வந்து வாங்கிட்டுப் போங்க" என்றார். ஒரு பக்கம் மகிழ்ச்சி; ஒரு பக்கம் வருத்தம். காரணம், அன்னத்தின் மீது சிவன் அமர்ந்தபடி ஓவியம் வேணும். குறிப்பைக் கேட்காமல் அவர் இஷ்டத்துக்கு வரைந்து தரும் படத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான். அவரின் வீட்டுக்குப் போனேன். ஆச்சரியம்! நான் விரும்பிய படியே இருந்தது ஓவியம். என்ன ஜி! எல்லார் கிட்டேயும் இப்படித்தான் இருப்பீங்களா!

நீங்க டிமாண்ட் பண்ணா எவ்வளவு பணமும் புகழும் சம்பாதிக்கலாம்?" என்றேன் ஆதங்கத்தோடு. ஆனால் அவர் சிரித்தபடி, பணம்தான் நமக்கு சத்ரு. நான் பணத்துக்கு ஆசைப்பட்டு வரையறது இல்ல. நான் எந்தப் பத்திரிகை ஆபீசுக்கும் சான்ஸ் கேட்டு போனது இல்ல. அதைவிட கர்மாவுக்குத் தகுந்தபடிதான் ஒருத்தனுக்கு உணவு, உடை, இருப்பிடம் கிடைக்கும். அதை நம்பறேன்" என்றார்.

இவர் ஓவியங்கள் கண்கவரும் வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல. தனக்குள் ஒரு தத்துவார்த்தத்தை வைத்திருக்கும்; நம்மோடு தர்க்கம் பண்ணும். அவர் வரைந்த ஆஞ்சநேயரின் யுத்த காட்சி ஒன்று போதும்! பார்த்தால், அது ஆஞ்சநேயரின் பலத்தைச் சொல்லுவதாக இருக்கும். ஆனால், அர்த்தம் வேறு. ‘ஓவியத்தில் ஆஞ்சநேயர் தனது வாலினால் மூன்று பேரைச் சுருட்டி அடிப்பார். அது மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. பின்புறத்தில் ஐந்து பேரை உதைப்பார். அது ஐம்புலன்களின் குறியீடு. மேலே கதாயுதத்தால் இருவரைத் தூக்கி வீசுவார். அது பணம், புகழைக் குறிக்கும். எனக்கு ராமன் மட்டுமே இலக்கு!

நீங்களும் இப்படி யுத்தம் செய்யுங்கள் ராமனை நெருங்க...!’ - இதுதான் அவரின் ஓவிய பாஷை.

ராமச்சந்திரனின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து பர்மா போனவர்கள். பர்மாவில் பிறந்து மீண்டும் தமிழகம் வந்த இவர், படித்தது எல்லாம் சமஸ்கிருதத்தில்தான். வேதாந்தத்தின் ரகசியங்கள் வேதத்தில் இருக்கிறது. ரகசியம் அறிய குருவைத் தேடு" என்று சொல்லும் ராமச்சந்திரன் இன்னமும் பிராணாயாமம், யோகா செய்து வருபவர். இன்றுவரை மருந்து, மாத்திரை என டாக்டரிடம் போனதில்லையாம். ரொம்ப கஷ்டம் வந்தா என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டால், ராமனிடம் அழுவேன். உன்னை விட்டா எனக்கு யாருன்னு கேட்பேன். உடனே போயிடும்! ஆனா 100 சதவிகிதம் நம்பணும்" என்கிறார்.

உங்கள் ஓவியம் எதைச் சாதித்தது?" என்று கேட்டால், அது சாதனை செய்வதற்கான வஸ்து அல்ல. பகவானிடம் நெருங்குவதற்கான யுக்தி. ஒரு முறை ஒரு நண்பர் கடனில் மாட்டி வறுமையில் சிக்கித் தவிப்பதாக என்னிடம் அழுதார். நான் பஞ்சமுக விநாயகர் - ராசி கணபதி வரைஞ்சேன் அவருக்காக. ‘இதுல நவகிரகங்களும் இருக்கு. வீட்டுல வெச்சு பூஜை பண்ணு. எந்த தோஷமும் நெருங்காது’ன்னு சொல்லிக் கொடுத்தேன். அவர் அந்தப் படத்தில் மயங்கி ஆயிரக்கணக்கில் பிரின்ட் போட்டு ஊர் ஊராக விற்றார். நல்ல லாபம்! கடனை அடைத்து மகிழ்ச்சியோடு என்னை மீண்டும் சந்தித்து காணிக்கை தந்தார். ஒரு சித்திரம் குடும்பத்தையே சிரிக்க வைத்தது. இதை நீங்க சாதனைன்னு சொல்லுவீங்களா? நான் இது பகவானின் உத்தரவு என்பேன்" என்று அசத்தினார். ஒருமுறை அவரைச் சந்திக்கப் போன போது, யாருமற்ற அவரின் அறையில் பீரோவுக்குப் பின்னால் எட்டிப் பார்த்தபடி, ‘அட... ம்... நல்லாயிருக்கு, ரொம்ப சந்தோஷம்’னு சொல்லிக் கொண்டிருந்தார். தானாக பேசுறாரேன்னு ஒரு பதற்றத்துடன் நுழைந்து, ‘யாரிடம் பேசுறீங்க ஜி?’ என்றதும், எனக்கு ஒரு பல்லி ஃப்ரெண்ட். பசி எடுக்கும் போது வரும்; குச்சியில சாதத்தைச் சொருகி நீட்டுனா சாப்பிடும். கொஞ்சநாள் காணோம். இப்பப் பார்த்தா அதோட குட்டியைக் கூட்டிட்டு வந்து காட்டிச்சு. அதான் சபாஷ்னு சொன்னேன். எல்லா ஜீவனுக்குள்ளும் கடவுள் இருக்கார். என் கடவுளும் அதனுள் இருக்கும் கடவுளும் சந்திக்கிறது தான் ஒரிஜனல் சந்தோஷம்" என்றார். யாருமற்ற அந்த அறையில், கடவுள் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது.



Comments