புதையும் வரலாறு!

இந்தியாவின் வரலாறு எங்கே ஒளிந்திருக்கிறது?

கொஞ்சம் வரலாறு தெரிந்தால், குழந்தைகள்கூட சொல்லும் ‘கோயில்களில்’ என்று. அந்தக் கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புதைந்துகொண்டிருக்கின்றன.

நாட்டின் புராதன கோயில் நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தில் நானூறு ஆண்டு பழைமையான ராமசாமி கோயிலுக்குச் சென்றால், நீங்கள் படிக்கட்டு ஏறிச் செல்ல முடியாது; சாலையிலிருந்து கீழே இறங்கித்தான் செல்ல வேண்டும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்களை உள்ளடக்கிய இக்கோயிலின் மும்மண்டபம் சிற்பக் கலைக்காகக் கொண்டாடப்படுவது (புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் சிற்பம் இங்குதான் இருக்கிறது). இன்று அந்தச் சிற்பங்களில் பலவும் - முக்கியமாகத் தூண் சிற்பங்கள் - மண்ணோடு மண்ணாகப் புதைந்துகொண்டிருக்கின்றன. கும்பகோணத்தின் அடையாளங்களில் ஒன்றாகச் சொல்லப்படும் சக்கரபாணி கோயிலின் வாசல் அடுத்த 20 ஆண்டுகளில் அடைபட்டுவிடலாம்.

இந்த இரு கோயில்களும் உதாரணங்கள்தான். பல கோயில்களின் நிலை இன்னும் மோசம் (மழைக்காலங்களில் பத்திரிகைகளில் வெளியாகும் தண்ணீர் சூழ்ந்த கோயில்களின் படங்கள் நினைவுக்கு வருகின்றனவா?)

அண்ணாந்து பார்த்து வணங்கிய நம் கோயில்கள் எல்லாம் இப்போது தலைகுனிந்து பார்க்க வேண்டிய நிலையை நோக்கிச் செல்ல என்ன காரணம்? எளிய பதில்: வளர்ச்சியின் பெயரால், அறியாமையால் நாம் ஆடும் ஆட்டம்!

நம்முடைய நவீன சாலைகள் ஒருபுறம் கோயில்களுக்கு வெளியே உயர்ந்துகொண்டே இருக்க, உயரும் சாலைகளுக்கு இணையாக இன்னொருபுறம் ‘திருப்பணியாளர்கள்’ கோயில்களின் உள் தளத்தை உயர்த்த... கொஞ்சம் கொஞ்சமாக நிலத்துக்குள் செல்கிறது வரலாறு.

‘‘இந்தியக் கோயில்கள் பல்வேறு ரூபங்களில் அழிவைச் சந்திக்கின்றன. அழிவின் சமீபத்திய ரூபம் இந்தப் புதைவு. 1400 ஆண்டுகள் பழைமையான புகழ்பெற்ற கோயில் திருச்சி, உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில். இன்றைக்கு அங்கு ஒரு கல்வெட்டு கிடையாது. 1000 ஆண்டுகள் பழைமையான கோயில் திருப்புலிவனம் கோயில். இன்றைக்கு அங்கே ஒரு சுவரோவியம்கூட கிடையாது. நாம் இழந்திருப்பது வெறும் கல்வெட்டுகளையும் சுவரோவியங்களையும் மட்டும் அல்ல. நம் முன்னோரின் வரலாற்றை.

கோயில்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் பார்க்கிறார்கள் மக்கள். அவற்றை வருமானத்தோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கிறது அரசு. தொல்லியல் துறையின் கவனத்துக்குத் தெரியப்படுத்தப்படாமல் அறநிலையத் துறைகூட கோயில்களில் திருப்பணிகள் செய்யக்கூடாது என்கிறது சட்டம். ஆனால், அது சட்டப் புத்தகத்துக்கு உள்ளேயே இருக்கிறது. இந்த அறியாமையின் விளைவே வரலாற்றைக் கொல்கிறது” என்கிறார் வரலாற்று ஆய்வாளரான இரா.கலைக்கோவன்.

“கோயில்கள் வரலாற்றை மட்டும் தாங்கிக்கொண்டிருக்கவில்லை. என்னைப் பொறுத்த அளவில் அவை உணர்வுகளின் குவியல்கள். ஓர் இனத்தின் அழகியல் மரபுகள் கோயில்களில் வியாபித்திருக்கின்றன. ஒரு கோயில் கட்டமைப்பின் ஒவ்வோர் அங்குலத்திலும் பிரம்மாண்டமான உழைப்பும் சொல்லப்படாத எத்தனையோ ரகசியங்களும் புதைந்திருக்கின்றன.

நம் கோயில்களில் அபிநய முத்திரைகளில் ஏதாவது ஒன்றை அலட்சியமாகப் பிடித்து நிற்கும் நாட்டியப் பெண் சிற்பங்களை ஏராளமாகக் காணலாம். பொதுவாகப் பார்ப்பவர்கள் இந்த மாதிரிச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு சிற்பியின் கைவண்ணத்தைப் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆனால், ஒரு நாட்டியக்காரியின் அபிநய முத்திரையை அப்படியே கல்லில் கொண்டுவருவதில் சிற்பியின் கைவண்ணம் மட்டும் இருக்கிறதா? நாட்டிய மேதைகளைக் கேளுங்கள். …. வகையான ஆடல் முத்திரைகளையும் அறிந்த ஒருவனால் மட்டுமே இப்படியொரு சிற்பத்தைப் படைக்க முடியும் என்ற ரகசியத்தை அவர்கள் கூறுவார்கள். ஒரு சிற்பத்தில் வெளிப்படும் நாட்டிய முத்திரையின் பின்னணியிலேயே இத்தனை கதைகள் இருக்கும் என்றால், சிற்பிகள் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கிலும் தேர்ந்தவர்கள் எனின், எத்தனை எத்தனை கதைகள் நம் சிற்பங்களின் பின்னணியிலும் கோயில்களின் பின்னணியிலும் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்பேர்ப்பட்ட அற்புதங்கள் நம் கண் முன்னே மண்ணுக்குள் போவது பெரும் வரலாற்றுத் துயரம்” என்கிறார் கலை விமர்சகர் தேனுகா.

மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொல்வார்: “இல்லாமைகூடப் பிரச்சினை இல்லை. அது இல்லை என்கிற பிரக்ஞைகூட இல்லை என்பதுதான் பெரிய பிரச்சினை” என்று. கோயில்களின் புதைவுக்கு இந்த வார்த்தைகள் கச்சிதமாகப் பொருந்தும். இந்தப் புதைவு ஒரே நாளிலோ, யாருக்கும் தெரியாமலோ நடக்கவில்லை; படிப்படியாக எல்லோர் கண் முன்னரும்தான் நடக்கிறது. எப்படி பிரக்ஞை இல்லாமல் சாலைகள் அமைக்கப்படுகின்றனவோ, எப்படி பிரக்ஞை இல்லாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அப்படியே நம் யாருடைய பிரக்ஞையும் இல்லாமல் மண்ணுக்குள் செல்கிறது வரலாறு!

Comments