புகலூர் பாடுமின்!

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்குஇவனென்று

கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினுங்கொடுப்பாரிலை

பொடிக்கொள் மேனிஎம் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்

அடுக்குமேல்அமர் உலகாள்வதற்(கு)யாதும்ஐயுறவில்லையே

(சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருமுறை 7 - பதிகம் 34 -- கொல்லி)

‘புகழ்ந்து பாடினால் மகிழ்வார்கள் என்பதற்காக, வீரமும் வலிமையும் இல்லாதவர்களைப் பார்த்து, மல்யுத்தத்தில் வீமன் இவன், வில்திறனுக்கு விஜயனான அர்ஜுனன் இவன் என்றும், கொடைத்தன்மை இல்லாதவர்களைப் பார்த்து கொடைக்குப் பாரி இவன் என்றும் பாடினாலும், வேண்டியவற்றைக் கொடுப்பவர்கள் இவ்வுலகில் எவருமில்லை. ஆனால், மேனியெல்லாம் திருநீறு பூசியவரான சிவபெருமானுறை புகலூரைப் பாடுங்கள் புலவர்களே! பாடினால், அடுக்கு மேல் அடுக்கு அமைந்த அமரலோகத்தை ஆள்வதற்கும் கூடும்; எவ்வித ஐயமும் இல்லை’ - கோணப்பிரான் என்னும் திருநாமத்தோடு சற்றே சாய்ந்த சிவலிங்கமாக எம்மான் காட்சிதரும் திருப்புகலூர் திருத்தலத்தைப் பற்றி சுந்தரர் பாடியருளிய திருப்பாட்டு இது.

ஒருவருக்கு இல்லாத தன்மைகளை ஏற்றிப் போற்றி, அவரிடமிருந்து ஆதாயம் தேடுதல் உலகியல் மரபு. வீரமில்லாதவர்களைக்கூட, மகாபாரதக் காப்பியத்தின் மிகப்பெரும் வீரர்களான வீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகராக்கிப் பேசுவார்கள். இவ்வாறு பேசுதற்கும் பாடுதற்கும், ‘இல்லது கூறல்’ எனப் பெயர். இல்லது கூறலைப் பற்றிக் கூறுமிடத்து, மகாபாரத நாயகரை எடுத்துக்காட்டாக்குகிற சுந்தரருக்கு, வீரத்துக்கு வீமனும் அர்ஜுனனும் தெரிகிறார்கள்! அதே நிலையில், கொடைத்தன்மைக்குக் கர்ணன் தானே தெரிந்திருக்க வேண்டும்? ஆனால், முல்லைக்குத் தேரீந்த பாரியை அல்லவா குறிப்பிடுகிறார்! அள்ளி அள்ளிக் கொடுத்த அங்க நாட்டரசனைக் காட்டிலும் சின்னஞ்சிறு பறம்பு நாட்டின் பாரி, உயர்ந்து தோன்றுவதற்குக் காரணங்கள் உள்ளன.

கேட்டார்க்குக் கொடுத்தவன் கர்ணன்; வாய் திறந்து கேட்க முடியாமல் வாடிய முல்லைக் கொடிக்குக் கொடுத்தவன் பாரி. காற்றில் அலைந்தாடிய கொடிக்கு, அரசன் கொழுகொம்பு நட்டிருந்தால் போதாதா? தன்னுடைய தேரைத் தரவேண்டுமா என்று வினா எழுப்பலாம். ஆனால், தவிக்கும் உயிரின் துடிப்பைத்தனதாக எண்ணி, இடம்- பொருள்-ஏவல் என்றெல்லாம் சட்டதிட்டங்களைச் சிந்திக்காமல், உடனடியாக அவ்வுயிர்க்கு உதவ விழைவதுதானே உண்மையான கொடைத்தன்மை! கர்ணனுக்கு, ‘கொடுக்கிறோம்’ என்கிற எண்ணம் மிகுதியாகவே இருந்தது. ஆயின், கொடுக்கிறோம் என்றெண்ணாமல், எதைக் கொடுக்கிறோம் என்றும் நினையாமல், கொடுத்த கொடைமடம் பாரியின் பெருந்தன்மை.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருப்புகலூர் இறை வனாரைப் பாடும்போது கேளாமல் கொடுத்த பாரியைக் குறிப்பிடுவதற்கு நுட்பமான காரணமும் உண்டு. பங்குனி உத்திரத் திருநாளுக்கு முன்னோடு இத்தலத்துக்குச் சென்றார் சுந்தரர். உத்திர நாள் விழாச் செலவுகளுக்குப் பொன் வேண்டுமென்று சுந்தரரின் மனைவியான பரவை நாச்சியார் கேட்டிருந்தார். புகலூரில் தரிசனம் முடித்துவிட்டு, இதையே நினைத்துக் கொண்டு மண்டபமொன்றில் தலைக்கு உயரமாகச் செங்கற்களை வைத்துக் கொண்டு சுந்தரர் படுத்துறங்கினார். காலையில் துயில் விழித்தபோது கண்ட காட்சி... செங்கற்களெல்லாம் பொன் கற்களாகியிருந்தன!

கேட்டால் கொடுப்பது மனிதத் தன்மை; கேட்காமலேயே கொடுப்பது தெய்வீகத் தன்மை!

புகலூர் பிரதான கோயிலில், அருள்மிகு அக்னிபுரீச்வரர் எழுந்தருளியிருக்கிறார். அக்னிதேவன் இங்கு வழிபட்டதால் இப்பெயர். ஸ்வயம்பு லிங்கமான இவர், சற்றே சாய்ந்த வண்ணம் காணப் பெறுகிறார். பாணாசுரன் என்பவனுடைய தாயார் சிறந்த சிவபக்தை. தாயின் பூஜைக்காக ஸ்வயம்பு கே்ஷத்திரங்களின் நூற்றெட்டு சிவ லிங்கங்களையும் கொண்டுவந்து சேர்க்க முயன்றான் மகன். புகலூர் சிவலிங்கத்தை அவனால் பெயர்த்தெடுக்க முடியாமல் போக, பிராணத்தியாகம் செய்வதற்கு அவன் முயல, அசரீரியாக ‘உன் தாயின் பூஜையில் யாமிருப்போம்’ என்று வாக்களித்தார் எம்பெருமான். அவனா விடுவான்? அத்தாட்சி கேட்டான். ’நூற்றெட்டு மிருத்திக லிங்கம் பிடித்து வைத்து வழிபடச் சொல்; நூற்றெட்டாவது லிங்கம் சாய்ந்திருக்கும்; புன்னை மாலையணிந்திருக்கும்; அதுவே இது என உணர்வா’ என்று இறைவனார் அடையாளம் கூறினார். பாணாசுரன் எடுக்க முயன்றபோது சாந்தவர், அப்பர் பெருமானால் ‘கோணப்பிரானே’ என்றழைக்கப்பட்டு, இன்றும் சாய்ந்தவாறே உள்ளார். இங்குள்ள அக்னிதேவனின் மூர்த்தம் வெகு அரிதானது. வேதத்தில் குறிப்பிடப் பெறுவதுபோல், ஏழு ஜ்வாலைகள், ஏழு கைகள், நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள், இரண்டு முகங்கள் என்னும் திருக்கோலம். வேறெங்கும் இத்தகைய வடிவத்தைக் காண்பதரிது.

பிரதான கோயிலுக்குள்ளேயே, வர்த்தமானீச்வரம் என்றழைக்கப்படுகிற வர்த்தமானீச்வரர் சன்னிதி, சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்றது. ஆகவே, பாடல் பெற்ற தலங்களில் மற்றொன்றாகக் கணக்கிடப்படுகிறது. இந்தச் சன்னிதியில், முருக நாயனார் சிலையும் உள்ளது.

இறைவனாரின் திருவடிகளை உயிர்கள் புகலாக அடைவதால், இது புகலூர். இத்தலத்திலிருந்த முருக நாயனார் திருமடத்தில், ஞானசம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், நீலநக்கர் ஆகிய நாயன்மார்கள் கூடியிருந்து களித்துக் குளிர்ந்ததாக வரலாறு. புன்னையைத் தலமரமாகக் கொண்ட இத்தலத்தில் அவதரித்து வாழ்ந்தவர் அறுபத்து மூவரில் ஒருவரான முருக நாயனார். பொழுது புலருமுன் பொகையில் மூழ்கி, நந்தவனம் சென்று, நிலப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ, தோட்டுப்பூ என வகைவகையான மலர்களைக் கொய்து அவற்றின் தன்மைக்கேற்பக் கோத்துக் கோவை மாலைகளாக்குவார். அவர் கட்டிய மாலைகள்தாம் எத்தனையெத்தனை வகையானவை!

மலர்கள் தொடுக்கப்படுவது தொடையல், அவையே பிணைக்கப்படுவது பிணையல், கோக்கப்படுவது கோவை, பற்பல வகை மலர்களைக் கொண்டது மாலை, கொண்டையில் அணிய வளைத்தும் குறைவான நீளத்திலும் கட்டப்படுவது கண்ணி, தலையில் அணிவது இண்டை, நெடு நீளமாக வளைவின்றிக் கட்டப்படுவது தாமம், மெலிதாக இழுக்கப்படுவது சரம் - மலர்களால் வர்த்தாமானீச்வர மகாதேவரை வழிபட்ட முருக நாயனாரின் மடத்தில் அப்பர் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த சம்பந்தர், திருவாரூர்த் தலத்தின் பெருமைகளைப் பற்றி வினவ, அவற்றை அப்பர் வர்ணிக்க, தாமும் ஆரூருக்கு தரிசிக்கச் சென்றார் சம்பந்தர்.

சிலநாட்கள் இங்கு தங்கி பின்னர் வேறு பல தலங்களுக்குச் சென்ற அப்பர் பெருமான், நிறைவாக மீண்டும் இங்கு வந்தார். புகலூரிலே தங்கி உழவாரப் பணி செய்தார். அப்பெருமானாரின் பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பி சிவனார், திருவிளையாடல் புரிந்தார். உழவாரப் பணிக்காக மாடவீதிகளில் அப்பர் பெருமான் நடக்கும்போது, அங்கு நவமணிகளும் பொன்னும் வெள்ளியும் கொட்டிக் கிடக்கும். ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்கும் அப்பர் பெருமானா, அவற்றை ரத்தினம் என்றும் வைரம் என்றும் தங்கம் என்றும் தரம் காண்பார்! வருவோரின் காலில் குத்திவிடுமே என்று வாரியெடுத்து குளத்தில் போடுவார்.

இறைவன் விளையாட்டையே விளையாடிப் பார்த்த பெருமானார், ஒரு சித்திரை மாத சதயத் திருநாளில், நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி, அண்ணலார் சேவடி சேர்ந்தார். சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக் கொண்டு இவ்வூரில் நடைபெறுகிற பெருவிழாவில், அப்பரைக் ‘குளித்தெழுந்த நாயனார்’ என்றும், முருக நாயனாரை ‘நம்பி நாயனார்’ என்றும், நீலகண்ட யாழ்ப்பாணரை ‘யாழ்மூரி நாயனார்’ என்றும் மக்கள் வழங்குகிறார்கள். பாரத்வாஜ முனிவர் வழிபட்ட புகலூரில், நளச் சக்ரவர்த்தியும் வழிபாடு செய்ததாகத் தெரிகிறது. இங்குதான், நளனை விட்டு விடுவதாக சனி வாக்குக் கொடுத்தானாம்; அதன்படி, திருநள்ளாற்றில் விட்டானாம்!

திருப்புகலூர் பெரிய கோயிலான அக்னீச்வரர் கோயிலைச் சுற்றி, தெற்குப் புறத்தைத் தவிர மீதமுள்ள மூன்று பக்கங்களிலும் அகழி வடிவில் குளம் அமைந்துள்ளது. பாணாசுரன் வெட்டிய குளமே இவ்வாறு அகழியாகி விட்டதாகச் சொல்கிறார்கள்.

அம்பாளுக்கு, கருந்தார்க் குழலம்மை என்றும், சூளிகாம்பாள் என்றும் திருநாமங்கள். அடியார்கள் பலரும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்ததைப் போன்று இம்மை வாழ்வில் மேன்மக்கள் நட்பும், சேவடி இணக்கமும் தந்து இறைவனார் அருளியதைப் போன்று மறுமையில்லா முக்திப் பேரின்பமும் தருகிற திருப்புகலூரைப் புகலடைந்தால் அமருலகம் என்ன, ஆண்டவனார் அருளுலகமே கிட்டிவிடும்!

Comments