மகாலக்ஷ்மி மகிமை!

நாராயண பட்டத்ரி குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் குருவாயூரப்பனைப் பார்த்து, ‘ஹே குருவாயூரப்பா, பிராட்டி கண்களை உருட்டி உருட்டி உன்னை மட்டுமா பார்க்கிறாள்? உன்னுடைய கல்யாண குணங்களைக் கேட்பவர்கள் மற்றும் ரசிப்பவர்களின் இல்லங்களில் அவள் நிரந்தரமாக குடிகொள்கிறாள்’ என்றார் ‘மகாலக்ஷ்மியின் மகிமை’ என்ற தமது சொற்பொழிவில் நாவல்பாக்கம் நரசிம்ஹன் ஸ்வாமி.

ஒரு முனிவர் காட்டில் கடுமையாக தவம் புரிந்து கொண்டிருந்தார். ‘ஹே முனிவரே. உன்னோடு நான் சில காலம் வாசம் செய்கிறேன். அப்பொழுது உனக்கு ராஜமரியாதை கிடைக்கும்’ என்றாள் மகாலட்சுமி.

‘நானோ ஒரு சன்யாசி. எனக்கு எதற்கு ராஜ மரியாதை எல்லாம்? எனக்கு அது தேவையே இல்லையே’ என்றார் அந்த முனிவர். ‘நீ வேண்டாம் என்று சொன்னாலும் உன்னோடு சிலகாலம் நான் வாசம் செய்யத்தான் போகிறேன்’ என்றாள் தாயார்.

தாயார் சென்ற பிறகு, முனிவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு மூட்டையைப் பார்த்தார். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டவர், ‘சரி; நம்மோடு லக்ஷ்மி வாசம் செய்கிறேன் என்று சொன்னாளே, அதை நாம் பரீட்சை செய்து பார்ப்போம்’ என்று எண்ணிக்கொண்டு, அந்த ஊர் அரசரிடம் சென்றார். நேராகச் சென்று அரசரின் கிரீடத்தை எட்டி உதைத்தார். ‘ராஜாவின் கிரீடத்தை எட்டி உதைத்திருக்கிறோம். இப்பொழுதும் நமக்கு ராஜ மரியாதை கிடைக்கிறதா என்று பார்ப்போம்’ என்று நினைத்த முனிவருக்கு, நிஜமாகவே ராஜமரியாதைதான் கிடைத்தது. ஆம்! கிரீடத்திலிருந்து ஒரு பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. ராஜா உள்ளம் மகிழ்ந்து, ‘முக்காலமும் உணர்ந்த முனிவரே, என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்’ என அம்முனிவரைக் கொண்டாடி அவருக்கு ராஜமரியாதை அளித்தார். இதைப் போலவே இன்னொரு சந்தர்ப்பத்திலும் முனிவர் ஏதோ செய்ய, அதுவும் அவருக்கு சாதகமாகவே ஆனது.

ஒருநாள் மகாலட்சுமி முனிவரின் கனவில் தோன்றி, ‘முனிவரே! இன்றுடன் உங்களை விட்டு பிரியப் போகிறேன்’ என்று கூறி மறைந்தாள். அடுத்த நாள் முனிவர் ராஜாவுக்குக் கொடுத்த ஒரு பழம், ஒரு நாகம் தீண்டிய பழமாக மாற, அன்றோடு ராஜ மரியாதை என்பது மறைந்து அவர் மீண்டும் காட்டுக்கே திரும்பிவிட்டார். லட்சுமி கடாட்சம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவ்வளவு முக்கியமான ஒன்று. அது இருந்துவிட்டால், எல்லாம் கிடைத்துவிடும்.

ஆதிசங்கரரின் சரிதத்திலேயே இப்படி ஒரு விஷயம் உண்டு. அவர் சிறு பிள்ளையாக - இளம் பிராயத்தினராக இருந்தபோது, ஒரு வீட்டின் வாசலில் நின்று ‘பவதி பிட்சாந்தேஹி’ என்று பிட்சை கேட்கிறார்.

அன்று துவாதசி. அந்த ஏழைக் குடும்பத்தில் இருந்த பெண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தம் கணவர் துவாதசி பாரணம் செய்வதற்காக வைத்திருந்த ஓரே ஒரு நெல்லிக்காய் மட்டும்தான் அவள் இல்லத்தில் அப்பொழுது இருந்தது. வந்திருக்கும் பாலகனுக்கு அதையாவது கொடுப்போம் என்று நினைத்தவள், நெல்லிக்காயை ஆதிசங்கரருக்கு அளிக்க, அவளது குடும்ப நிலைமை சங்கரருக்குப் புரிந்துவிட்டது. உடனே மகாலட்சுமியை நோக்கி மனதால் தவம் புரிகிறார். ‘கணவனும், மனைவியும் மிகவும் பாவம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஏழ்மையை அனுபவிக்கிறார்கள்’ என்று அசரீரி கேட்டது. ஆனாலும் ஆதிசங்கரர் மகாலட்சுமியிடம் மனம் இரங்கி அக்குடும்பத்துக்கு அருள்பாலிக்குமாறு ஸ்தோத்ரம் செய்ய, அங்கே தங்க நெல்லிக்காகளே மழையா பொழிந்தது. அந்த ஸ்லோகம்தான் ‘கனகதாரா ஸ்தோத்ரம்’. இதேபோல்தான் ஸ்வாமி தேசிகன் விஷயமும். காஞ்சிபுரத்தில், ஒரு ஏழை பிரம்மச்சாரிக்கு திருமணம் என்பது கைகூடவில்லை. காரணம், அவர் ஏழை. எப்படி அவரால் பெண்ணை வைத்து காப்பாற்ற முடியும்? அந்தச் சூழலில் அவருக்காக ஸ்ரீஸ்துதி என்கிற ஸ்தோத்திரத்தை அருளினார் ஸ்வாமி தேசிகன். அதையடுத்து பொன்மழை பொழிந்தாள் என்பது ஸ்வாமி தேசிகன் வரலாறு.

ஸ்ரீவித்யாரண்யர் சரிதத்திலும் இதுபோன்ற சம்பவம் உண்டு. வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம், நல்ல குணம், நல்ல மக்கள், உறவுகளோடு நல்ல இணக்கமான சூழல் என அனைத்தையும் அருளக் கூடியவள் மகாலட்சுமியே. அவளைப் போற்றி அவள் பாதத்தில் நம் சிந்தையைச் செலுத்தி நாமும் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறுவோமாக!"



Comments