சித்தி அளிக்கும் சிந்தாமணி விநாயகர்!

கஜவக்தரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ணசாமரபூஷிதம்!

பாசாங்குசதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்

(யானையின் முகத்தை உடையவரும், தேவச்ரேஷ்டரும், காதுகளாகிய சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், பாசம், அங்குசம் இவற்றைத் தரித்திருப்பவரும், தேவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீ மஹாகணபதியை நமஸ்கரிக்கிறேன்).

பல்லாண்டுகளுக்கு முன் அபிஜித் என்ற அரசன் தன் நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். புத்திர பேறு இல்லையே என்பதுதான் அவனது ஒரே குறை! இதனால் மனம் வாடிய அவன், தனது ராஜ்ஜிய நிர்வாகத்தை மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு வனவாசம் சென்றான்.

காட்டினுள் நுழைந்த அவன், மகரிஷி வைசம்பாயனரின் ஆசிரமத்தை அடைந்தான்; அவரை வணங்கினான். அவனைக் கண்ணுற்ற முனிவர், ‘அவனுக்கு ஒப்பற்ற ஓர் மகன் பிறக்கட்டும்’ என்று ஆசிர்வதித்தார். இதைக்கேட்டு எழுந்த மன்னன் பேரானந்தத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

வைசம்பாயனர், அவனுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்தார். “நான்கு மாத காலம் இப்புனித மந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்துவா! அதன்பின் உரிய ஹோமம் செய். விடையவன் அருளால் விரைவில் ஓர் மகன் பிறப்பான். கவலையற்று இரு!” என்றும் சொல்லி ஆசிர்வதித்தார். முனிவர் சொன்னபடியே செய்தான் அபிஜித். அதன் விளைவாகப் பிறந்தவன் கணன்.

குழந்தை கணன் நாளுக்கு நாள் வளர்ச்சியைப் போன்றே, அவனது பராக்கிரமும் வளர்ந்தது. உயர்ந்த உருவமும், மேக நிறமும், அகண்ட விழிகளும், பரந்த தோள்களும் கொண்ட கணன், மன்மதனைப்போல் காட்சி அளித்தான். நற்குணங்களோடு சிறந்து விளங்கினான். சிவஞானம், சிவ பூஜை, ஒழுக்கம், தான தருமம், அறநெறி, விருந்தோம்பல் முதலிய உன்னத குணங்கள் அவனிடம் குடி கொண்டிருந்தன.

சிவனருள் பெற வேண்டும் என்று விழைந்த கணன், வனம் சென்றான்; தவத்தில் ஆழ்ந்துபோனான். ரிஷபா ரூடராக காட்சி தந்த சிவன், மூவுலகையும் ஆளத்தக்க ஆற்றலையும், பல அரிய வரங்களையும் தந்தருளினார். நாடு திரும்பிய கணன், பெற்றோரிடம் தானடைந்த அற்புத வரங்களைக் கூறி மகிழ்ந்தான். அவனுடைய தந்தை அபிஜித், அவனுக்கு திருமணம் செய்வித்து, தான் சிவ ஆராதனைகளில் முழுமனத்துடன் ஈடுபடலானான்.

ஆட்சி பொறுப்பேற்ற கணன் மனத்தில், ஏகாதிபத்திய வேட்கை எழுந்தது. பல திக்குகளிலும் படையெடுத்துச் சென்று, தன்னை எதிர்த்தவர்களை, தன்னடி பணிய வைத்தான். இறுதியில் தேவலோகத்தையே கைப்பற்றினான்!

ஒருமுறை வேடர்கள் சிலர் கணனை அணுகி, தங்களது பயிர்களை எல்லாம் துஷ்டமிருகங்கள் படையெடுத்து நாசம் செய்துவிடுவதாக முறையிட்டனர். அதனால், வேட்டைக்குக் கிளம்பிய கணன், துஷ்ட மிருகங்களை வேட்டையாடித் தீர்த்தான். அப்போது அவனுக்கு அடக்க முடியாத தாகம் ஏற்பட்டது. தெள்ளிய நீர் கொண்ட தடாகம் ஒன்று தென்படவே, யாவரும் தாகம் தீர தண்ணீர் அருந்தி, களைப்பைப் போக்க அங்கேயே அமர்ந்திருந்தனர். அந்த சமயத்தில் கபில முனிவரின் சீடர்களில் ஒருவன் அத்தடாகத்துக்கு நீராட வந்தான். அங்கு கணனும், அவனைச் சார்ந்தவர்களும் இருப்பதைக் கண்ட அச்சீடன், உடனே விரைந்து சென்று கபில முனிவரிடம் அவர்களைப் பற்றி விவரித்தான். அதைக் கேட்ட கபில முனிவர், அங்குள்ள யாவரையும் தம் இருப்பிடம் வருமாறு அழைத்தார். அதை ஏற்று வந்தவர்களை அன்புடன் வரவேற்ற முனிவர், க்ஷண நேரத்தில் அனைவருக்கும் அறுசுவை உண்டி தயார் செய்து அளித்தார். அதைக் கண்ட கணன் ஆச்சர்யமுற்றான்! இது எப்படி சாத்தியமானது என்று, முனிவரை கணன் வினவியபோது, தம் கழுத்தில் அணிந்திருந்த சிந்தாமணியின் அருளால் நிகழ்ந்தது என்றார் கபிலர். அந்த சிந்தாமணியால் எதையும் பெறலாம் என விவரித்தார். சிந்தாமணியை அடைய பேராசை கொண்டான் கணன். முனிவரிடம் அதை வேண்டினான். முனிவர் மறுக்கவே, பலவந்தமாகக் கைப்பற்றி, தன் நகர் திரும்பிவிட்டான்!

அதே சமயம், மகரிஷி கபிலர் துர்கா தேவியை சரணடைந்தார். “விநாயகர் பெருமான் ஒருவரால்தான், கணனிடமிருந்து சிந்தாமணியைப் பெற முடியும். எனவே அவரைச் சரணடைக!” என்றாள் மகாதுர்கை. அதன்படியே, விநாயகரைத் துதித்தார் கபிலர். சிம்ம வாகனத்தில் காட்சி அளித்த கணேசர், சிந்தாமணியை மீட்டுக் கொடுப்பதாக வாக்களித்தார்.

இதை அறிந்த கணன், கபிலரை தன் படைகளுடன் தாக்க முயன்றான். க்ஷண நேரத்தில் விநாயகர் தன் படைகளோடு அங்கு வந்தார். கணனுடன் போரிட்டார். இறுதியில் கணனை தன் மழுவாயுதத்தால் தாக்கி சிரச் சேதம் செய்தார் விநாயகர்.

கணராஜன் கொல்லப்பட்டதை வீரர்கள் ஓடிச்சென்று அவன் தந்தை அபிஜித் மகாராஜாவிடம் தெரித்தனர். அவன் புத்திர சோகத்தால் துடித்தான். யுத்த களம் அடைந்து, தன் மைந்தனுக்குரிய இறுதிச் சடங்குகளை செய்தான். சிந்தாமணியை எடுத்துக்கொண்டு கபில முனிவரை காணச் சென்றான். அங்கு அருள்பாலித்த விநாயகப் பெருமானை வணங்கி, சிந்தாமணியை சமரிப்பித்தான். மீண்டும் அந்தச் சிந்தாமணியை கபில முனிவரிடம் அளித்தார் விநாயகர்.

“தாங்களே இந்த சிந்தாமணியை அணிந்து, இங்கேயே எழுந்தருள வேண்டும்” என வேண்டினார் கபிலர். அதன்படியே, சிந்தாமணியை தம் கழுத்தில் அணிந்தார் விநாயகர். அன்று முதல் அவர் சிந்தாமணி விநாயகர் என்றும், கபில முனிவரின் ஆசிரமத்தில் வெளிப்பட்டதால், கபில விநாயகர் என்றும் பெயர்கொண்டார். பிறகு, அங்கிருந்த கடம்ப விருட்சத்தின் அருகே மறைந்துவிட்டார்.

அவர் மறைந்த இடத்தில் ஒரு சிறிய கோயிலை எழுப்பிய கபில முனிவர், அக்கோயிலில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அந்த கஜமுகன் சிந்தாமணி விநாயகர் என்ற பெயரில் பிரசித்தமடைந்துள்ளார். அப்புனித இடம்தான் இன்றைய தேவூர்.

சிந்தாமணி விநாயகர் கோயில் வளைவு வடக்கு நோக்கி இருந்தும், கருவறை கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலினுள்ளே காணப்படும் சபா மண்டபம் மரத்தாலானது. கோயில் பிராகாரத்தின் மூலையில் சிவன் சன்னிதி உள்ளது. இங்கு பெரிய ஆலயமணியைக் காணலாம். மூர்வா கோஸாவி குடும்பத்தில் தோன்றிய ‘தர நிகார் மகராஜ் தேவ்’ என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். பிறகு ‘மாதவராவ் பேஷ்வா’வினால் சபா மண்டபம் எழுந்தது. சுயம்புவாகத் தோன்றிய இடம்புரி சிந்தாமணி விநாயகரின் கண்களில் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. மேனி முழுவதும் கணக்கற்ற வருஷங்களாக செந்தூரம் பூசப்பட்டு வருவதால், விநாயகரின் மூல உருவம் மறைந்துள்ளது.

மாதவராவ் பேஷ்வாவின் குல தெய்வம் இவர்தான். அவரது அரண்மனை கோயிலை ஒட்டியே இருந்தது. இன்று அவ்விடம் நந்தவனமாகக் காட்சி அளிக்கிறது.

லம்போதரர்

அசுர குரு சுக்ராச்சாரியாரை அணுகினான் ‘க்ரோதாசுரன்.’ அவனுக்கு சகல சஸ்திர வித்தைகளையும் அவைகளின் பூர்வ பிரயோகப் பயிற்சியையும் அளித்தார் சுக்கிரர். சூரிய பகவானின் மந்திரத்தை உபதேசித்து, அவர் மூலம் அரிய செயல்களை எளிதில் முடிக்கலாம் என்றும் கூறினார்.

முறைப்படி, அந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான் க்ரோதாசுரன். அவனது ஆழ்ந்த பக்தியை மெச்சி சூரிய பகவான் அவன் முன் பிரத்யட்சமானார். அவன் விரும்பிய வரங்களையும் அளித்தார்.

அதை அறிந்த அசுர குரு, அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து அசுர பதியாக்கினார். அதையடுத்து, பெருஞ்சேனையோடு விஜய யாத்திரை மேற்கொண்டான். சென்ற இடமெல்லாம் அவன் வெற்றி பெற்றான். அரனும், அரியும்கூட, தங்கள் இடங்களை அவனுக்கு விட்டுக் கொடுத்தனர்.

இந்த நிலையில், அனைவரும் விநாயக மூர்த்தியை பிரார்த்தித்தனர். அவர்களது பக்தியை பாராட்டிய கணநாதர், லம்போதரர் எனும் நாமத்தில் வெளிப்பட்டார். க்ரோதாசுரனோடு போரில் இறங்கினார். முடிவில் அவரது நாகபாசத்தால் கட்டுண்டு, அமர்க்களத்திலேயே மூர்ச்சித்து வீழ்ந்துவிட்டான்!


சில நாட்களுக்குப் பின் மூர்ச்சை தெளிந்த க்ரோதாசூரன், படைகளின்றி, தான் தனித்திருப்பதைக் கண்டு வெட்கமடைந்தான். தன் தவறை உணர்ந்து, அவரை வணங்கி, தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினான். பிறகு, அவர் கட்டளைபடி பாதாளலோகம் சென்றுவிட்டான்.

மூவரும், தேவரும், யாவரும் மிக்க மகிழ்ச்சியுடன் லம்போதரரை வழிபட்டு வணங்கினர்.

முலா, முதா, பீமா நதிகள் சங்கமமா குமிடத்தில் உள்ள தேவூர் திருத்தலம், புனே நகரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. புனேவிலிருந்து தேவூர் செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

Comments