இடுப்பில் ஒரு நாகம்!

எல்லாவற்றையும் துறந்த சித்தர்கள், அம்மாவின் நினைவுகளை மட்டும் துறக்கவியலாமல், அம்மாவின் இறப்பில் கதறிக் கதறி அழுத சாட்சியங்கள் உண்டு. உதாரணம் பட்டினத்தார். பூத்துக் குலுங்கும் நமது பசுமைக்கு அம்மா எனும் ஆணிவேர்தான் ஆதாரம். அம்மா என்பது இறைவனின் ஜெராக்ஸ்; இனிப்பின் அவதாரம். அந்த அம்மா என்ற சொல்லோடு சக்கரையும் சேர்த்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு பஞ்சமேது? ‘சக்கரை அம்மா’ என்ற வசிய வார்த்தைக்கு உரிய சித்தரை சமீபத்தில் தரிசிக்க வாய்த்தது.

“இந்த அம்மாவிடம் என்ன கேட்டீங்க? என்ன கொடுத்தாங்க?” என்று சிறு பிள்ளைத்தனமான கேள்வியை கேட்டேன் ஸ்ரீசக்கரை அம்மா சன்னிதியில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணியிடம். “ஸார்! கேட்காம கொடுக்கிறது அம்மா. நான் எதுவும் கேட்க வரலை. எனக்கு அம்மா ஞாபகம் வந்தது. பார்க்க வந்தேன். தாய்வீட்டுக்கு வர ரீசன் வேணுமா என்ன?” என்று அசத்தியவர், சக்கரை அம்மா பக்தை உமா பத்மநாபன். அவர் தாய்வீடு என்று சொன்ன இடம் திருவான்மியூரில் மருந்தீசர் ஆலயத்துக்கு இடப்புறம் செல்லும் சாலையில் கலாக்ஷேத்ரா ரோட்டில், எண்: 75ல் தன் ஜீவ சமாதியிலிருந்தபடியே அருள் பாலிக்கும் பெண் சித்தரான ‘பறவை சித்தர்’ ஸ்ரீசக்கரை அம்மாவின் ஆலயம் தான்.

ஆலயத்தில் நுழைந்து, “நான் தீபத்திலிருந்து வர்றேன்” என்றதுதான் தாமதம். இரட்டை ஒளியாய் ஓடிவந்தனர் வாட்ச்மேன் பாலகிருஷ்ணனும், தன்னார்வ சேவையாளரான இன்னொரு பால கிருஷ்ணனும். அம்மாவின் ஜீவசமாதி, பக்தர்களுக்கான தியான மண்டபம், இலவச இரவு பாடசாலை, இலவச மருத்துவ முகாம் என எல்லாவற்றையும் சுற்றிக் காண்பித்தனர். தியானம், கல்வி, உடல் நலம் என்ற வாழ்வின் முழுமையான மூன்றைப் பற்றி அருள்வாக்காக எழுதி வைக்காமல், அம்மாவின் ஆசியோடு செயலாக மாற்றி ஆலயத்துக்குள்ளே நடத்துவது அதிசயம்தான். அதை இங்கு நிகழ்த்தி கொண்டிருப்பவர் நிர்வாகி சுமனா சுரேஷ். “காஞ்சி மகா பெரியவர் 1948, ஜனவரி மாதத்தில் ஐந்து நாட்கள் சக்கரை அம்மா சன்னிதியில் உட்கார்ந்து தியானம் செய்ததாக குறிப்பு இருக்கிறது” என்ற தகவலையும் தந்தார்.

பறவை சித்தர் என்று அழைக்கப்பட்ட அம்மாவின் இயற்பெயர் அனந்தாம்பாள். 1854ல் வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள போளூரில் தேவிகாபுரத்தில் சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே தியானத்திலும் பக்தியிலும் பரவசப்பட்டவர், தனது 20வது வயதில் கணவரை இழக்கிறார். கணவர் இறந்த 11வது நாள், பலர் தடுத்தும் கேட்காமல் தன் கூந்தல் களைந்து, தண்ணீர் கூட அருந்தாமல் வீட்டின் மொட்டை மாடியில் வெட்டவெளியில் தவம் செய்யத் தொடங்கிவிட்டார். ஒரு மாதம் அல்ல; ஒரு வருடம் அல்ல; 10 வருடங்கள். பத்தாவது வருட இறுதியில் சூரிய சந்திரர்க்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச பரவொளியை கண்டு பரவசமடைகிறார். அந்த தரிசனம் கிடைத்தபின், அஷ்ட மஹா சித்திகளுள் ஒன்றான ‘லஹிமா’ என்ற சித்தியை அடைகிறார். இந்த சித்தி காற்றைவிட லேசாக உடலை மாற்றி ஆகாயத்தில் பறக்க வைக்கும். அனந்தாம்பாள் அப்படி பறந்ததை பார்த்த மக்கள் ‘பறவை சித்தர்’ என்று அழைக்கத் தொடங்கினர்.

யாரையும் குருவாகக் கொண்டிராத அம்மா, பிரபஞ்ச குருவான சிவனையும் ஸ்ரீசக்கரத்தையும் மட்டுமே வழிபட்டு வந்ததால், ஸ்ரீசக்கர அம்மா என்ற பெயர் தோன்றி, சக்கரை அம்மாவாக மனத்தின் இனிப்பு போல் மருவிவிட்டது.

மனிதன் பறக்கமுடியுமா? சாத்தியமா? பார்த்த சாட்சி உண்டா? என்று கேட்டால், ‘உண்டு’ என்பதே என் பதில். தமிழ்தென்றல் திரு.வி.க. தனது ‘உள்ளொளி’ என்ற நூலில் ‘சென்னை கோமளீஸ்வரன்-பேட்டையில் ஒரு அம்மா இருந்தார். அவர் டாக்டர் நஞ்சுண்ட ராவின் குரு. ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மாடியில் ஒரு பறவைபோல் பறந்துவந்து நின்றார். மானுடம் பறப்பது விந்தையல்லவா? யான் ‘தேசபக்தன்’ இதழின் ஆசிரியராக இருந்த போது ராவிடம் நெருங்கி பழகியபோதுதான்,

அவ்வம்மையார் சித்தர் இனத்தை சேர்ந்தவர் என அறிந்தேன்’ என்று எழுதியுள்ளார்.

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவதில்லை நமனுமங்கில்லை

இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை

படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே

என்று திருமூலர் (திருமந்திரம்: 1624) சொல்வதற்கு சாட்சியம் சக்கரை அம்மா தான். சக்கரை அம்மாவின் வளர்ப்பு மகன் இறந்தபோது, அம்மா அவர் உடலைப் பார்க்க வராமல் மாடியிலேயே சிரித்துகோண்டே இருந்தாராம். “மகன் இறந்து கிடக்க துக்கமற்று இப்படி சிரிக்கலாமா?” என்று ஒருவர் கேட்க, “சாவே ஒரு மகா பொய். அந்த பொய் என்னைத் துக்கப்பட வைக்குமா? உங்கள் சாவு எனக்கு சிரிப்பை மூட்டுகிறது” என்றாராம். இந்த மனோபாவத்தை ஸ்தித ப்ரக்ஞ நிலை என்பர். இன்பதுன்பத்தை ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கும் சமத்துவ ஞானம் இது.

இதே தாய்தான், தன் பக்தர்களை எல்லாம் மருந்தீசர் ஆலயத்தில் அழைத்துப் போய் கடவுளிடம் (மூல விக்ரகத்தைப் பார்த்து), “என்னோட வந்த இந்த குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்க. உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் முக்தி கொடுக்கணும் சரியா?” என்று அதிகாரத்தோடு உரக்கச் சொன்னாராம். அப்படி சொன்ன பத்தாவது நாளில்தான் 1901, பிப்ரவரி 28, பிற்பகல் 3.30 மணிக்கு பறவை சித்தரின் உடல்விட்டு ஆத்மா சிவனை நோக்கி பறந்தது.

தாய், தன் பிள்ளைக்காக தன்னையே தியாகம் செய்பவள். அந்தத் தாய் ஒரு துறவு நிலைக்கு வந்தால், தன் பிள்ளை என்ற வட்டம் உடைந்து உலக ஜீவராசியெல்லாம் தன் பிள்ளையாகி விடுகிறது அவருக்கு. இதற்கு உதாரணம், ஒரு சம்பவம். சக்கரை அம்மா இடுப்பில் ஒரு நாகம் எப்போதும் சுற்றி இருக்குமாம். பக்தர்கள் பயப்படும்போது, “செல்லம் இறங்கிப் போடா. பிள்ளைங்க பயப்படுறாங்க” என்றதும், அது நகர்ந்துவிடுமாம். பாம்பு-செல்லம்; பக்தர்கள்- பிள்ளைகள். இதுதான் அம்மாவின் தாய்மை.


இந்த ஆலயத்தில் (ஜீவ சமாதியில் )இங்குமங்கும் அவர் நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள். அவர் இன்னும் இங்கேயே வசிப்பதால், பிள்ளைகளின் குறையை காதுகொடுத்து கேட்டு, உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறாள் என்பதுதான் இவ்விடத்துக்கு கூடும் பக்தர்கள் சாட்சியம். ‘அம்மான்னா சும்மா இல்லடா; அவ இல்லேன்னா யாரும் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கிறது. திரும்பிப் பார்த்தால், அங்கு வந்திருந்த பக்தர் ஒருவரின் ரிங்டோன் அது.



கந்தப் பெருமானை சிந்தையில் இருத்தி வாழ்ந்த அடியார்களில் குறிப்பிடத்தக்கவர் குமரகுருதாச சுவாமிகள். ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பனில் பிறந்த இவர், சென்னை திருவான்மியூரில் சித்தியானார். சக்கரை அம்மாள் சமாதிக்குச் செல்லும் வழியில் இவருடைய அதிஷ்டானமும் அமைந்துள்ளது. அம்மாவைத் தரிசிக்கச் செல்பவர்கள், ஸ்ரீபாம்பன் சுவாமிகளையும் தரிசித்து, இருமடங்கு பேரானந்தம் பெறலாம்!

Comments