பயம் போக்கும் பைரவபுரம்!

சிவாலயங்களின் காவலர் பைரவ மூர்த்திதான். நாயை வாகனமாகக் கொண்டவர். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம். பீரு என்றால் பயம். பயம் தரக்கூடியவர்; எதிரிகளை அஞ்ச வைப்பவர் இந்த பைரவர். காசியில் கால பைரவர், காரைக்குடி அருகில் உள்ள இலுப்பைக்குடியில் ஸ்வர்ணா கர்ஷண பைரவர், சீர்காழியில் சட்டைநாதர், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவர் என்று, பல பெயர்களைக் கொண்டு விளங்குகிறார் இவர். இவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த தலம் பைரவபுரம்! இதை ‘அழிபடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்வர்.

இங்கே பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கிறோம். அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்; மயில் வாகன கௌமாரியுடன் சண்ட பைரவர்; கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்; சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்; நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவ அணியை இங்கு காண்கிறோம்.

இந்த எட்டு மூர்த்தங்களையும் தம் விமானத்தின் அருகே கொண்டவராக மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீசொர்ணகால பைரவர். கொடிமரம், பலிபீடம், நதி என்று, ஆலயத்துக்குரிய முழு அமைப்புடன் அமைந்திருக்கிறது திருக்கோயில்.

ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து, நான் முகனாக ஆக்கினார் பைரவர். அந்த பிரம்மா வழிபட்ட தலம் இந்த ‘பைரவ புரம்’ என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஆகியவற்றை தரித்தவராக மூன்று கண்ணினராக தரிசனம் அளிக்கிறார் சொர்ணகாலபைரவர்!

பைரவரை வழிபடச் சிறந்த நாள் அஷ்டமி தினம். குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி, மிக விசேஷமானது. இந்த நாளில், பைரவரை வழிபடுவதால், ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி போன்றவற்றால் உண்டாகும் துன்பங்களிலிருந்து விடுபடலாம். சனிக்கிழமையன்று இந்த வழிபாட்டைச் செய்வது மிகச்சிறந்த பலனளிக்கும். அதைப்போன்றே, காணம் புரியாத பயம், காரியத்தடை, எதிர்ப்புகள் போன்றவற்றையும் படுதூளாக்கி, பலன் தருவார் பைரவர்.

தேய்பிறை அஷ்டமி நாளில், இந்த சொர்ணகால பைரவருக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. ஹனுமனுக்குப் போன்றே, இவருக்கும் வடை மாலை சாத்தி வழிபடுவது சிறப்பானது. பைரவ வழிபாட்டுக்கு உகந்தது இரவு நேரம். தேய்பிறை அஷ்டமி திதியில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால், நினைத்த யாவும் கைகூடும் என்பது பலரின் அனுபவம்.


காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள அழிபடைதாங்கி பைரவபுரத்தில் கோயில் கொண்டுள்ள பைரவரை, அஷ்டமி நாளில் வழிபட்டுப் பாருங்கள்; கஷ்டம் என்பது கனவிலும் வராது.
காஞ்சிபுரத்தில் இருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளது பைரவபுரம். செய்யாறு, வெம்பாக்கம் வழியாகவும் வரலாம். வெம்பாக்கத்திலிருந்து 2 கி.மீ.

Comments