வேள்வியில் ஈடுபட்டிருக்கும்போது, செல்ஃபோன் அழைக்க... அதன் காரணமாக சிந்தனை சிதறும் நிலையில், வேள்வியின் முழுப்பலன் கிடைக்குமா?

எந்த விஷயமாக இருந்தாலும் இடையூறு என்பது, குறிக்கோளை கேள்விக்குறியாக்கிவிடும். வேள்வி நடக்கும்போது சரீர உபாதைகளை வெளியேற்ற வேண்டியிருக்கும். அப்போது, அத்தனைபேருக்கும் சில நொடிகள் இடைவேளை அளித்து, அதன் பிறகு வேள்வி தொடரும். வேள்வியின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டால் அதை இணைக்க பரிகாரம் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

விஷ்ணு தேவதை மூன்றடியை தொடர்ச்சியாக வைத்து செயலில் வெற்றி அடைந்தார். ஒரு காலை முன்னால் வைத்து, அடுத்த காலை வைக்கும் வேளையில், ஒரு சிறு இடைவெளி தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. ஆனாலும் நடப்பதற்கான முயற்சி தொடர்வதால், அவரது செயலுக்கு இடையூறால் இழப்பு இல்லை. இந்தக் கருத்தை உடைய வேதப் பகுதியை ஓதுவார்கள். அதே நேரம் ப்ரணவத்தோடு வ்யாஹ்ருதியை உச்சரிப்பார்கள் (ஓம் பூர்புவஸ்ஸுவரோம்.). இந்தப் பரிஹாரமானது வேள்வியின் இடைவெளியை ஒட்டவைத்து விடும் (இதம் விஷ்ணுர்விசக்ரமேத்ரேதா...).

பலபேர் ஒன்றாக வேள்வியில் ஈடுபடும்போது, சிலபேர் பின்தங்கிவிட்டால், அவர்களையும் சேர்த்துக்கொண்டு போக வேண்டியிருக்கும். ஹோமத்துக்கு தேவையான பொருள் தீர்ந்து போனால், தொடர முடியாது போகும். புரோகிதருக்கு அவசரகால நிலையில் விளக்கம் அளிக்க வேண்டி வந்தால், வேள்வி நின்றுவிடும். இதுமாதிரியான தருணங்களில், பரிகாரத்தை முறைப்படுத்தி துண்டிப்பை இணைப்பது உண்டு.

எதிர்பாராத விதமாக செல்ஃபோன் அழைப்பு வந்து அதன் காரணமாக ஏற்படும் சிந்தனைச் சிதறல், வேள்வியின் தொடர்ச்சியை துண்டிக்கும் என்பது வேதம் ஓதுபவர்களுக்குத் தெரியும். அவர்கள் பரிகாரத்தையும் கையாண்டால் முழுப்பலனை எட்டலாம். அதேநேரம், நாமே செல்ஃபோன் தொடர்பை வரவழைத்துக்கொண்டு, அதாவது நாமே கால் செய்து பேசுவதன் காரணமாக வேள்வியின் தொடர்ச்சியை தடைப்படுத்தினால், பரிகாரம் இணையாது.

நாம் கடவுளைப் பார்த்ததில்லை. வேதம் ஓதுபவர்களையே கடவுளாக எண்ணுவோம். அவர்தான் நமக்கு நல்வழி காட்டுகிறார். நம்மை அறத்தில் இணையவைத்து நமது பிறப்பைப் பயனுள்ளதாகச் செய்கிறார். அவரது வாக்கை வேதவாக்காகவே ஏற்போம். அவரது செயல்கள் தவறாகப்பட்டாலும் அதை வெளியிடுவது பாபச் செயலாக மனம் எண்ணும். 'ஆசார்ய தேவோ பவ’ என்ற வேத வாக்குக்கு கௌரவம் அளிப்போம். 'வேலியே பயிரை மேய்கிறது’, 'ரக்ஷகன் பிக்ஷகனானன்’ என்றெல்லாம் நமது அல்பபுத்தியில் தோன்றினாலும், அவரது செயலில் முழு நம்பிக்கை வைத்து அதை ஏற்றுக்கொண்டால், நமக்கு முழுப்பலன் கிடைத்துவிடும். தவற்றுக்கு தண்டனை அளிக்கும் பொறுப்பு ஆண்டவனிடம் இருக்கும். நம் மனம் தவற்றை நினைக்கக் கூடாது. நம்மிடம் 'தர்ம ச்ரத்தை’ இருந்தால் இந்தத் தவறு தோன்றாது. இந்தக் கருத்து ஏற்கத் தக்கதல்ல.

ஒரு தவற்றை சுட்டிக்காட்டவோ, எடுத்து விளக்கவோ, திருந்தா விட்டால் தண்டனை அளிக்கவோ, வெளியேற்றவோ ஒரு சட்டம் அல்லது அதை நடைமுறைப்படுத்த ஓர் அதிகாரி நிச்சயமாக வேண்டும். உச்ச நீதிமன்றத்தை நாம் மதிப்பதற்குக் காரணம், அறப்பின்னணியில் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு, பக்ஷபாதமின்றி செயல்படும் திறமை அதன் மூச்சாக இருக்கும்.

ஆக, வேள்வியில் இறங்கியவர்களை மதித்தல் வேண்டும் எனும் நோக்கில் அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், நமது நம்பிக்கையை வலுப்படுத்தினால்போதும் என்று கருதி செயல்பட்டால், அது அவர்களது தவற்றை வளர்க்க உதவுமே தவிர, தவற்றை ஏற்று பச்சாதாபப்பட்டு திருந்த வழி இருக்காது.



அடுத்ததாக... 'நமது நம்பிக்கை நமக்கு பலன் அளித்துவிடும். அவர்கள் செய்த தவற்றுக்கான தண்டனை அளிக்கும் பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடலாம்’ என்ற கோட்பாட்டுக்கும் சான்று இல்லை. பிறகு... தவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்கக் காரணம்? அவர்களோடு மோதாமல் இருக்க, நாம் நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்றுதான் அதன் விளக்கம்!

கல்வியில் எல்லையை எட்டியவனானாலும் 'ஆததாயீ’ என்றால் விசாரணையின்றி அவனை அழித்துவிடு என்கிறது தர்மசாஸ்திரம் (ஆததாயினம் ஆயாந்தாம் ஹன்யாதே வாவிசாரயன்). ஆசார்யன் தனது விருப்பப்படி செயல்பட்டாலும், சீடன் சட்டப்படி தனது தகுதியைக் காப்பாற்றினால் போதும் என்பது சிந்தனைக்குப் பொருந்தாது.

இரண்டு வாதங்களும் எல்லோரும் ஏற்கும்படியான தகவலைத் தரவில்லை. ஆசார்யன்- வேள்வியில் ஈடுபட்டவர், அறப் பின்னணியில் இருந்தும் விலகி, இன்றைய தொழிலாளியாக மாறி தன்னைத் தானே தரம் தாழ்த்திக்கொண்டுவிட்டார். சிஷ்யனாக இருக்க வேண்டியவன், வினயத்தில் இருந்து நழுவி இன்றைய எஜமானனாக தன்னை உயர்த்திக்கொண்டிருக்கிறான். இத்தகையோர், தங்களின் பொருளாதாரத்தை இழக்காத வகையில் வேள்வியில் செயல்படுகிறார்கள். குறிக்கோளை மறந்து வேள்வியில் ஈடுபட்டவரைக் கண்காணிப்பதில் அக்கறையாக இருக்கிறார்கள்.

இப்படி இருவரும் அவரவர் கடமையை மறந்து பிறரது கடமையில் ஏற்படும் குறையைத் தேடுவதில் முனைந்திருக்கிறார்கள். இருவருமே தவறு செய்து, கிடைக்க வேண்டிய பலனை இழக்கிறார்கள்.

ஆசார்யரின் தவற்றைச் சுட்டிக்காட்டுவது பாபம். அது, உனது பொறுப்பு இல்லை. கடவுள் பார்த்துக்கொள்வார். நீ நல்லவனாக இருந்தால் போதும்; பலன் கிட்டிவிடும் என்ற முடிவை எவராலும் ஏற்க இயலாது. நாகஸ்வரம் வாசித்து முடித்த பிறகு, ஊதும் பகுதியை அதிலிருந்து கழற்றிவிடுவது உண்டு. வாசிக்கும்போது, இரண்டும் இணைய வேண்டும். அப்போதுதான் இசை கிடைக்கும். போர் இல்லாத வேளையில், தனுஸின் (வில்) நாண் கயிறு அவிழ்ந்து தொங்கும். போருக்கு ஆயத்தமாகும்போது கட்டப்படும். வீணையில் கையும் சேர்ந்து முயற்சியில் இணைய வேண்டும். மிருதங்கத்தில் இரண்டு பக்கமும் கைகள் செயல்படவேண்டும். வலப்புறமும் இடப்புறமுமாக இரண்டு கரங்கள் இணைந்தால்தான் வாசிக்க இயலும். புல்லாங் குழலை உதட்டுடன் இணைத்து, அதன் சுஷிரத்தில்

(துவாரத்தில்) நமது முயற்சியால் காற்றை நுழைத்தால் மட்டுமே வாசிக்க இயலும்.

அதுபோல், ஆசார்யனும் அறத்தோடு செயல்பட்டு சீடனும் வினயத்தோடு இணைந்தால் மட்டுமே வேள்வி பலனளிக்கும். இருவரில் ஒருவர் மட்டுமே சரியாகச் செயல்பட்டால் போதாது; பலன் கிடைக்காது. ஒருவரை மட்டும் சுதந்திரமாக செயல்பட சம்மதித்தால், கர்மத்தின் பலன் சூன்யமாகிவிடும்.

சாஸ்திரம் சொன்ன முறையில் அறப் பின்னணியில் செயல்படுபவனை ஏற்று வேள்வியில் இறங்க வேண்டும். ஆசார்யனை அறிவுறுத்த தைரியம் இல்லை என்றால், பலன் கானல் நீராகிவிடும். அதற்கு, தர்மசாஸ்திரக் கோட்பாட்டிலிருந்து... ஆசார்யரிடம் சிக்கித் தவிக்காமல் வெளிவருவது சிறப்பு!

ஏனென்றால், இருவரும் தாமரை இலைத் தண்ணீர் போன்று பட்டும் படாமலும் செயல் படுகிறார்கள். அறத்தைக் காப்பாற்ற அவர்கள் இருவரையும் அறச் செயல்களில் இருந்து வெளியேற்றுவதுதான் சிறந்த முறை. அல்லது மீண்டும் புரோகிதப் பயிற்சியில் இணைந்து உண்மையான புரோகிதனாக மாற சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். நற்சான்றோடு மீண்டும் அவரை ஏற்கலாம்.

அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை நட்சத்திர தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?

அமாவாசை முன்னோரை வழிபடும் நாள். பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திர நாளும் விரதம் இருக்கவேண்டிய நாட்கள். பஞ்சாங்கத்தில் பௌர்ணமி விரதம், கார்த்திகை விரதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். வருஷத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை தினங்களில் பலதரப்பட்ட விரதங்கள் தென்படும்.

அவற்றைச் செயல்படுத்தும் வேளையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். விரதத்தின் பலன் முழுமை பெற அது உதவும்.

ராசிக்கல் மோதிரம் பலன் தருமா?

விளம்பரம் சரியா, தவறா என்பது நீங்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். நீங்களோ நானோ விளம்பரங்களை விளாச முடியாது.

அணிகலன் என்பது அலங்காரத்துக்காக வந்தது. ஒவ்வோர் உறுப்பிலும் அதற்குத் தகுந்த தங்க அணிகலன்களை அணிந்து கொள்ளுங்கள். அதற்கு மேல் இந்தக் கற்களால் ஒரு புண்ணியமும் இல்லை. அணிகலனுக்கு எதையும் கொடுக்கும் சக்தி இல்லை. ராசி என்பது நட்சத்திரத்தை வைத்து வருவது. அதற்கும் மோதிரத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.


Comments