அர்த்த ராத்திரியில் சப்தம்?

சந்திரனுக்கு ஐந்திலோ ஒன்பதிலோ சூரியன் இருந்தாலும், அல்லது சூரியனுக்கு ஐந்திலோ ஒன்பதிலோ சந்திரன் இருந்தாலும், அந்த ஜாதகருடைய பலன் பற்றி, புலிப் பாணியின் ஜோதிட நூல் சொல்கிறது:

‘அவனுக்குக் கட்டாயம் திருமணம் உண்டாம். பேய், பிசாசு, பில்லி, சூனியம் எதுவும் அவனிடம் வராதாம். அவன் அர்த்த ராத்திரியில் சப்தம் கேட்பானாம்.

‘குமரனுக்கு வேட்டல் உண்டு

அமடுபயம் இல்லை

அர்த்தராத்திரியில் சப்தம் கேட்பான்’

என்பது அப்பாடல்.

ஆந்தையைத் தவிர வேறு ஓசையே கேட்காத அந்தக் காலத்தில், ‘நடு ராத்திரி சப்தம்’ என்பதற்கு என்ன பொருள்?

‘பேசும் மனிதர்கள் பேசாமல் பேசாத தெய்வங்கள் பேசும்’ என்பது தான் அதன் விளக்கம்.

என் தந்தையாருக்கு அப்படித்தான் ஜாதகம் இருந்தது. அதைப் பார்த்த நந்தீஸ்வரி என்னும் வள்ளுவ சாதிப் பெண் ‘இவர் அம்பாளிடம் நேரில் பேசுவாரே’ என்றாள்.

வள்ளுவ சாதியில் பிறந்தவர்களுக்கு ஜோதிடம் தானாகவே வரும் வாக்கும் பலிதமாகும்.

என் தந்தையார், எங்கள் குல தெய்வத்திடம் பேசியதாகப் பலமுறை கூறி இருக்கிறார். இளமைத் துடிப்பில் நான் அப்போது நம்பவில்லை. நந்தீஸ்வரி ஜாதகப்பலன் சொன்னதும், எனக்குத் தலையில் யாரோ குட்டியது போலிருந்தது.

நாகைக்கு அருகில் சிக்கல். அதிலிருந்து வடக்கே 3 கி.மீ. தூரத்தில் சங்கமங்கலம் என்ற ஊர்.

அங்குள்ள ‘சடைச்சி முத்துக் காளி’ என்பவள் எங்கள் குல தெய்வம். மிகுந்த அருள் தரும் அம்மை. அவள் முன் தப்பு செய்தவர்கள் பயப்படுவார்கள். மீன், மாமிசம் வாங்கிப் போகும் அவ்வூர் மக்கள், காளி சன்னிதிக்கு வராமல் கோயிலைச் சுற்றிப் போவார்கள்.

சன்னிதி வழியாகப் போனால் கறியில் ருசி இருக்காதாம் மாதவிலக்கு ஆனவர்கள் காளியின் முன் வரவேமாட்டார்கள்.

அவள் மரத்தால் செய்யப்பட்டவள் மூலவர் ஒரு சூலம்தான். அந்த மரத்தால் செய்த காளியை கட்டிக்கொண்டு மூன்று நாள் விழா இன்றும் நடக்கிறது. வெளியூர் கூட்டம் மிகுதியாக வரும். மேளக்காரர்கள், காசு வாங்காமல் வாசித்தால் நிறைய வாய்ப்புக் கிடைக்கும் என்பார்கள்.

அந்தக் காளியைக் கட்டிவிடுவதில் என் தந்தையார் கைதேர்ந்தவர். அவசரத்தில் அவிழ்க்க வேண்டும் என்றால், பின்னால் உள்ள ஒரு கயிற்றை இழுத்தால் போதும். சாமியின் தலை தனியாகக் கழலும். அவர்தான் முதலில் ஆடுபவருக்கு உதவியாக நிற்பார். அவருக்கு 85 வயதாகிவிட்டது. முதுமை தவிர நோய் எதுவுமில்லை.

மருத்துவர்கள் வருவார்கள். மருந்து கொடுப்பார்கள் ஊசி போடுவார்கள் வாயால் எதுவும் சொல்லமாட்டார்கள். ‘கடவுள்தான் காப்பாற்றணும்’ என்று கையை மேல்நோக்கிக் காட்டுவார்கள்.

இன்றைக்கோ நாளைக்கோ தெரியவில்லை. படுத்துக் கிடப்பவர் பேசுவதில்லை. எப்போதாவது விழித்துப் பார்ப்பதோடு சரி. விழிப்புணர்வோடு கூடிய ‘கோமா’ என்று சொல்வார்கள்.

கடைசி கட்டத்தில் யாரும் பொறுக்க முடியாத நிலை வந்தது. எங்கள் வீடு இரண்டு கட்டு வீடு எனப்படும் பெரிய வீடு பழங்கால வீடு. வாசலில் உள்ள ஹாலில், கட்டிலில் அவர் படுத்திருந்தார்.

கர்மம் கழிபவருக்கு வரும் நிலை அவருக்கு வந்தது. அதாவது சாப்பாடு நீர் ஆகாரம்தான். ஆனாலும் வயிற்றுப் போக்காக நீராக வடிந்தது. பொறுக்கவில்லை. எத்தனை வாசனை கொட்டினாலும் முடியவில்லை.

பத்து நாளாக துணி மாற்றும் பெண்கள் நெருங்க முடியாமல் ஆனால், கடமையை விடாமல் செய்தார்கள்.

குடும்ப டாக்டர் சொன்னார். “இனி அவர் பிழைக்கமாட்டார். பிழைத்தும் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதனால் தூக்க மாத்திரை 12 போதும். அதைப் பொடி செய்து பாலில் கரைத்துக் கொடுத்துவிடுங்கள். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரியும்” என்றார்.

“நீங்களே செய்யலாமே டாக்டர்!”

“இல்லை. என் தொழில் தர்மத்துக்கு அது சரியாக வராது” (அப்படி ஒரு தர்மம் இருந்தது).

குடும்பத்தில் என்னைவிட மூத்தவர் யாரும் முன் வரவில்லை. நான் செய்வதாகத் துணிந்துவிட்டேன். மாத்திரைகளைப் பொடித்துப் போட்டலம் கட்டி, பையில் போட்டு காளி கோயிலுக்குப் போனேன்.

‘அம்மா! நீயாக அவரை அழைத்துக்கொண்டால் எங்கள் யாவருக்கும் நிம்மதி. நான் மாத்திரை தரத் துணிந்து விட்டேன். உன் உத்தரவுக்காக வந்துள்ளேன். என் செயலால் அப்பா இறந்தால், அவரைக் கொன்றதாக என் மனம் வருத்துமே நீயே துணை’ என்று வீடு வந்தேன்.

“அப்பா காளியம்மன் குங்குமம் நெற்றியில் வைக்கவா?” என்றேன்.


அதுவரை பேசாத அவர், “வைத்து விடு” என்று சொல்லி, தலையையும் சம்மதம் என்று ஆட்டினார். வைக்கும் போதே அவர் முகம் பிரகாசமாக இருந்தது. சிரித்தார்; எல்லோரும் மகிழ்ந்தனர்.

அன்றிலிருந்து மூன்று நாள் அவர் உயிரோடு இருந்தார். ஆனால், துர்நாற்றம் சிறிது கூட வெளிப்படவில்லை.

விலகிப் போன குடும்பத்தவர்கள் அருகில் வந்தனர். எல்லோரையும் உற்றுப் பார்த்தார். மூன்று நாளும் எங்களை ஆசிர்வதித்தார். பிறகு அமைதியாகிவிட்டார்.

காளியம்மன் அருளை யாவரும் உணர்ந்தோம். தெய்வத்தின் இச்செய்கை அறிந்தவர்க்கே விளங்கும். எங்களுக்கு விளங்கியது.

Comments