பிள்ளை வரம் தரும் எலுமிச்சை வழிபாடு!

காசுக்கும் பணத்துக்கும் குறைவில்லாமல், வீடும் வாசலுமாக வசதிகளோடு இருந்தாலும், அள்ளிக் கொஞ்சவும், வளர்த்து ஆளாக்கவும் ஒரு குழந்தை இல்லை என்றால், அந்த வீட்டில் வேறு எத்தனைச் செல்வம் இருந்து என்ன... அங்கே மகிழ்ச்சி என்பது அறவே இருக்காது. இந்த ஏக்கத்துடனும் துக்கத்துடனும் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் பிள்ளை வரம் தந்தருள்கிறாள் ஸ்ரீவிளையாட்டு கருமாரியம்மன்.

சென்னை- மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகில், மேற்கு மாம்பலம் பகுதியில், அழகுற அமைந்துள்ளது ஸ்ரீ விளையாட்டு கருமாரியம்மன் ஆலயம். மிகச் சிறிய கோயில்தான் என்றாலும், கீர்த்தி பெரிதான தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆரம்ப காலத்தில், இங்கே வினைகளைத் தீர்த்தருளும் ஸ்ரீவலம்புரி விநாயகர் சந்நிதி இருந்ததாகவும், பக்தர் ஒருவரின் கனவில் வந்து, 'எனக்குக் கோயில் கட்டு. இந்தப் பகுதி இன்னும் செழிக்கும்’ என்று ஒரு பெண் குழந்தை விளையாடிக்கொண்டே சொன்னதாகவும், அதன்படி ஸ்ரீ கருமாரியம்மனுக்குத் திருவுருவம் பிரதிஷ்டை செய்து, விளையாட்டு கருமாரியம்மன் எனத் திருநாமம் சூட்டி வழிபட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒருகாலத்தில், ஓலைக் குடிசையில் இருந்தபடி அருள்பாலித்து வந்தாள் அம்மன். இவளின் பேரருளால் வரமும் பலனும் பெற்றவர்கள், குடிசையில் இருந்த அம்மனுக்கு அழகுறக் கோயில் அமைத்து, கும்பாபிஷேகமும் நடத்தினார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கே வந்து, ஒன்பது எலுமிச்சைப் பழங்களைச் சமர்ப்பித்து, பிள்ளை வரம் கேட்டு வேண்டிக்கொள்கின்றனர். அவற்றில், மூன்று எலுமிச்சைப் பழங்களை அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூலத்தில் வைக்கிறார்கள். இன்னும் மூன்று பழங்களை, அம்மன் அணிந்திருக்கும் புடவையில் வைக்கிறார்கள். மீதம் உள்ள மூன்று பழங்களை, அம்மனின் திருப்பாதத்திலும் மடியிலும் வைத்துப் பிரார்த்தித்து, பிள்ளை வரம் கேட்கும் பெண்ணுக்கு வழங்குகிறார்கள்.



அந்த எலுமிச்சைப் பழங்களை வீட்டுப் பூஜை மேடையில் வைத்து நமஸ்கரித்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்தப் பழத்தைச் சாறாக்கி அருந்தவேண்டும். இதேபோல், அடுத்த இரண்டு நாட்களும் எலுமிச்சம்பழச் சாற்றை அருந்தி பிரார்த்தித்துக்கொள்ள, விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்று பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையுடன் இங்கு வந்து தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர், பெண்கள். அம்மனின் சந்நிதியில் குழந்தையைக் கிடத்தி, அவரவர் வசதிக்குத் தக்கபடி அபிஷேகம் செய்து, காணிக்கை செலுத்துகின்றனர்.

மாம்பலம், ஸ்ரீவிளையாட்டு கருமாரியம்மனை வேண்டுங்கள். மங்காத செல்வமான குழந்தைச் செல்வத்துடன் சந்தோஷமும் பூரிப்பும் பொங்க வாழ்வீர்கள்.

Comments