சூரியனுக்கு சூரிய பூஜை!

பிரத்யட்ச பகவான் சூரியன். ஜோதிட சாஸ்திரத்தில் ஆத்மகாரகன், பித்ருகாரகன் என்றெல்லாம் சூரியனைச் சொல்வார்கள். கண்களில் வலது கண், அரசு தொடர்பான விஷயங்கள் போன்றவை சூரியனைக் கொண்டே கணிக்கப்படும். ‘உச்சிகிழான் கோட்டம்’ என்ற பெயரில் சூரியனுக்கான கோயில் இருந்ததையும், சூரிய வழிபாடு நடந்ததையும் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

சூரியனுக்கு என்று, தமிழ்நாட்டில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில், ஒரிசாவில் உள்ள கோனார்க், மத்தியபிரதேசத்தில் உள்ள மொதேரா, சென்னைக்கு அருகிலுள்ள ஞாயிறு போன்றவை புகழ்பெற்றவை. அதேபோன்று ஆந்திரப்பிரதேசத்தில், அரசவல்லியில் அமைந்துள்ளது சூரிய நாராயணன் திருக்கோயில்.

கி.பி.7ஆம் நூற்றாண்டில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன், கலிங்க அரசர்கள் இதனை கட்டியுள்ளனர். இங்குள்ள பல்வேறு கல்வெட்டுகள் இதை உணர்த்துகின்றன.

ஆண்டுக்கு இருமுறை மார்ச் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் அதிகாலையில் கோயிலின் ஐந்து நுழைவு வாசல் கதவுகள் மூடியிருந்தாலும், சூரியக் கதிர்கள் சூரிய பெருமானின் பொற்பாதங்களை முத்தமிடுகின்றன.

வீதியிலிருந்து பார்த்தால், கோயில் கோபுரம் தெரியாது. சாதாரண மண்டபம் போன்று வாசல். உள்ளே கருட பகவானுடன் கொடிக்கம்பம் விளங்குகிறது. வாசல் மேற்புறத்தில் சுதை வடிவில் சூரியனை குதிரைகள் பூட்டிய ரதத்தில் காண்கிறோம். இதேபோன்று முகப்பு வளைவிலும் சுதைச் சிற்பம் உண்டு.

ஆலயத்தினுள்ளும் கருவறையில் சூரிய பெருமான் தேரில் நின்ற கோலத்தில் கைகளில் தாமரை மலரைப் பற்றியவாறு நிற்கிறார். தலைப் பகுதியில் ஆதிசேஷன் அழகாக குடைபிடிக்கிறார்.

இக்கோயிலின் கோபுரம், வட இந்தியப் பகுதிகளில் காணப்படும் கோபுரங்களைப் போன்று அமைந்திருக்கிறது. மூலஸ்தானம் பெரிய தேராகவும் இரு பக்கங்களிலும் சக்ரங்களுடனும் அமைந்திருக்கிறது. அதைச் சற்று உற்றுப் பார்த்தால், தேர்ச்சக்கரம் சுழல்கிறதோ என்ற பிரமை ஏற்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. நிறைய பக்தர்கள் சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். சில பக்தர்கள் வயதில் பெரியவர்கள், தங்கள் சூரிய நமஸ்கார நேர்த்திக்கடனை இங்குள்ள குருக்கள், அவரது உதவியாளர் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இத்திருக்கோயிலின் வளாகத்தினுள் சிவபிரான், விநாயகர், ஆஞ்சநேயர், காலபைரவர், சுப்ரமணியர், துர்காதேவி, மகாலட்சுமி என்று பல்வேறு சன்னிதிகள் அமைந்துள்ளன.

தங்குவதற்குப் போதுமான இருப்பிட வசதிகளும், சிற்றுண்டி விடுதிகளும் இங்கு உண்டு.

தலபுராணத் தகவல்!

இரவு நேரம். சிறிய சப்தம். சிவ சன்னிதியின் துவாரபாலகரான நந்தீஸ்வரர் திரும்ப, எதிரே தேவேந்திரன் நின்றுகொண்டிருந்தான். “சிவபெருமானைக் காண வேண்டும்” என்றான்.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் உள்ளே போக முடியாது” என்றார் நந்தீஸ்வரர். அவன் கேட்கவில்லை. கோபத்துடன் விவாதம் செய்தான். கோபமடைந்த நந்தீஸ்வரர், தம் காலை உயர்த்தி உதைத்தார். மார்பில் அடிவாங்கி கீழே விழுந்தவன் மயக்கமானான். அந்த வலி தீரவேயில்லை.


ஒருநாள், அவனது கனவில், “மார்பின் வலி தீர, சூரிய பகவானுக்கு கோயில் கட்டி வழிபடு” என்று யாரோ கூறியது போன்றிருந்தது. விழித்தவுடன் கோயில் கட்ட ஏற்பாடு செய்தான். முதல் கட்டமாக ஓரிடத்திலிருந்து, தன் இரு கைகளால் மூன்று முறை மண் எடுத்துப் போட்டான். மண் எடுத்த இடத்தில் அவனுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

ஆம்! அங்கே சூரிய பகவானின் அழகிய சிலை, உஷா, சாயாதேவி ஆகிய தேவியருடன் தென்பட்டது. சிலையின் பீடத்தில் மாதாரா, பிங்களா ஆகிய துவாரபாலகர்கள் இருந்தனர்; மற்றும் இரண்டு முனிவர்கள் குடை பிடிக்கின்றனர். இந்தச் சிலை தேர் ஓட்டுவதாக அமைந்துள்ளது. ரதத்தின் சாரதி அருணன். அரசவல்லியின் தலபுராணச் செய்தி இது!

Comments