விழி எழு உழை

ழை விவசாயி ஒருவன், தனது ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டினான். ஜாதகத்தைப் பார்த்ததும் ஜோதிடர் அதிர்ந்தார். 'அன்று இரவுக்குள் இவனுக்கு மரணம் நேரப் போகிறது! இதை எப்படிச் சொல்வது?' என்று கருதி, ''நாளை காலை வந்து என்னைப் பார்'' என்று கூறினார்.
விவசாயியும் கிளம்பினான். வழியில் கடும் மழை! இருட்டு வேறு. பாழடைந்த மண்டபம் ஒன்றில் ஒதுங் கினான் விவசாயி. உள்ளே சென்றதும்தான் அது... பராமரிப்பற்றுக் கிடக்கும் சிவாலயம் என்பதை அறிந்தான். 'அடடா! நம்மிடம் பணம் இருந்தால், இந்தக் கோயிலை நன்றாகக் கட்டி சீர்படுத்தலாமே' என எண்ணினான். மழை மேலும் வலுக்கவே... கற்பனையில் மூழ்கினான்.

மனதுள் கோயில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டான். இடிந்துள்ளவற்றை அகற்றினான்; கர்ப்பகிருஹத்தை சீரமைத்தான்; அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய வற்றை எழுப்பினான்; ராஜகோபுரம் கட்டினான்; தங்க விமானம் செய்தான்; யாக சாலை அமைத்தான்; வேத பண்டிதர்கள் மற்றும் சிவாச்சார்யர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்து வைத்தான். மெள்ள கண் திறந்து பார்த்தான். மண்டபத்தின் மேல்பகுதியில் கருநாகம் ஒன்று இவனைப் பார்த்து சீறியது. பதறியடித்து மண்டபத் துக்கு எதிர்பக்கமாக ஓடினான். மறு நொடி... அந்த மண்டபம் இடிந்து விழுந்தது.

மறுநாள், ஜோதிடரைப் பார்க்கச் சென்றான் விவசாயி. இவனைக் கண்டதும் ஜோதிடரின் அதிர்ச்சி அதிகமானது. 'இப்படிப்பட்ட கண்டத்தில் இருந்து ஒரு வன் தப்பிக்க வேண்டும் எனில், அவன் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்திருக்க வேண்டும்' என்று ஜோதிட நூல்கள் கூறியுள்ளதை நினைவு கூர்ந்தார் அவர். 'இதெப்படி சாத்தியம்?' என சிந்தித்தார் ஜோதிடர். இந்த விவசாயி, பூசலார் நாயனார் போல் மனக்கோயில் எழுப்பியதை ஜோதிடர் எப்படி அறிவார்?!

எண்ணங்கள், மிகுந்த ஆற்றல் கொண்டவை. இந்த ஆற்றல் குறித்த விழிப்பு உணர்வு நமக்கு இல்லை.

விஞ்ஞான உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளைக் கண்டு ஆச்சரியப்படுகிறது உலகம். ஆனால், இவை அனைத்துக்கும் காரணமான, கோடிக் கணக்கான எண்ணங்களை புதைத்து வைத்திருக்கும் மனித மனம், அவற்றை விட ஆச்சரியம் நிறைந்தது! உலகம், உயிர்கள்- இவை இரண்டும் கடவுளின் எண்ணத்தில் இருந்து உதித்தவை! உலகில் மனிதனது படைப்பாக நாம் கண்டு பிரமிக்கும் அனைத்துமே, அடிப்படையில் ஓர் எண்ணத்தில் இருந்து தோன்றியவைதான்! ஆலமரத்தின் பிரமாண்டத்தைத் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கும் சின்னஞ்சிறு விதை போல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளப்பரிய ஆற்றல் புதைந்து கிடக்கிறது.
மனிதனது வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனது எண்ணங்களே காரணம்.
மகாகவி பாரதியின் பிரார்த்தனை ஒன்றை, சொற்பொழிவின் இறுதியில் நான் கூறுவது வழக்கம்.

'எண்ணிய முடிதல் வேண்டும்' என்று துவங்கும் அழகிய பாடலின் 2-வது வரி... 'நல்லவே எண்ணல் வேண்டும்' என்பதே அது. நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் மிக முக்கியமானவை. இவற்றில் மிகுந்த கவனம் தேவை.
என்னை சந்திக்க வருபவர்களில் சிலர், 'என் ஜாதகமே அப்படித்தான் சுவாமிஜி. நான் எவ்வளவு முயற்சி செஞ்சாலும் என்னால முன்னேற முடியாது', 'என் மனைவி/கணவர் அப்படித்தான்!', 'என் மகன் திருந்தவே மாட்டான்'... இப்படி தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும் முத்திரை குத்திக் கொண்டு அவதிப்படுகிறார்கள். அவர்களிடம் நான் சொல்வது இதுதான்: 'நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்!'

அருவருக்கத்தக்க புழுதான் ஒரு நாள் அழகிய பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கிறது! பளீரென்று சூரிய ஒளியில் மரங்கள் தம் பழைய இலைகளை எல்லாம் உதறிவிட்டு, புதுத் தளிர்களுடன் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன. இயற்கை முழுவதும் இடையறாது தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியிருக்க... சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதன் ஏன் தன் மனதை சீரமைத்துக் கொள்ளக் கூடாது?
தனது கடந்த காலம் குறித்த துயரத்திலும் வருங் காலம் பற்றிய பயத்திலும், நிகழ்காலத்தைக் கோட்டைவிடும் மக்கள் எத்தனையோ பேர்!
கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒலித்த எச்சரிக்கை மணிகளை, அபாய சங்காக எண்ணி அல்லல் படுபவர்கள்தான் இங்கு அதிகம்!

'எனக்கு மாரடைப்பு வரப் போகிறது' என்று நினைத்துக் கொண்டே இருப்பவர்கள், தாங்களே மாரடைப்புக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார்கள். 'மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் உறவுக்காரர் இறந்து விடுவாரோ...' என வெளியில் காத்திருக்கும் பத்து பேர் பயந்தபடியே சிந்தித்தால், அவர் பிழைப்பது கடினம். எதிர்மறை எண்ணம் எனும் நீரை ஊற்றி, பயத்தை பாய்ச்சி, கவலையை அறுவடை செய்கிறோம். சிந்தனைகளை சீராக வைத்துக் கொள்ளாததால், உள்ளத்தை கவலைக்கு இரையாக்குகிறோம்; உடலை நோய்க்கு உணவாக்குகிறோம்!
கடவுள் நமக்கு அருளியிருக்கும் வரங்களை என்றேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத உடல், உள்ளம், உயிர், உறவுகள், உலகம் அனைத்தையும் கொடுத்திருக்கிறார் கடவுள். இவற்றை மனம் போன போக்கில் கையாண்டதால்தான் துன்பம். எப்போதும் எதிர்மறை எண்ணங்களையே சிந்திப்பவர்கள், தனக்கும் சமுதாயத்துக்கும் பெரிய தீங்கை விளைவிக்கிறார்கள்.
உடலை உறுதியாக வைத்திருக்க அளவான, தரமான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம். உடலை மட்டும் உறுதியாக வைத்திருந்து விட்டு, மனதுக்கு அவ நம்பிக்கை புழுக்கள் நெளியும் அசுத்த எண்ணங்களை உணவாகக் கொடுக்கலாமா? உள்ளத்துக்கு சரியான உணவிட தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும், தண்ணீர் அருந்துவதற்கு முன், சுத்தமான நீர்தானா என்று உறுதி செய்து கொள் கிறோம். எண்ணங்கள், உள்ளத்துக்கு நீர் போன்றவை! இவற்றில் மிகுந்த கவனம் தேவை. எண்ணத் தூய்மையைப் பொறுத்தே மனிதன் தெய்வமாகிறான்! 'தெய்வம் நீ என்று உணர்' என்றார் மகாகவி பாரதியார்.

'வாய்ஸ் ரிகார்டர்', ஒலியை மட்டுமே பதிவு செய்யும். ஆனால் மனம் என்ற மந்திர ரிகார்டர், ஐம்பொறிகள் மூலம் நாம் அனுபவிக்கும் அனைத் தையும் பதிவு செய்து கொள்ளும். எனவேதான், மனதில் எண்ணங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பர் பெரியோர்!  நல்ல எண்ணங்கள் நிறைந்துள்ள இடத்தில், நம் மனம் அமைதியாக இருக்கிறது. கோயில், மகான்களது அதிஷ்டானம், ஆசிரமங்கள் ஆகியவற்றுக்குச் சென்றதும் மனதில் இனம் புரியாத அமைதி சூழ்வதை உணர்கிறோம்.
ஆனால், 'வீட்டில் இப்படி ஓர் அமைதி இருப்பது இல்லையே... ஏன்?' என்று கேட்பார்கள் சிலர். வீட்டாரது எண்ண அலைகளே இவற்றுக்குக் காரணம்! வீட்டை, அமைதி தவழும் ஆலயமாக மாற்றுவதும் நிம்மதியின்றி தவிக்கும் நரகமாக மாற்றுவதும் நம் கையில்தான் இருக்கிறது.
மனதில் அளவான எண்ணங்கள், ஆரோக்கிய மான எண்ணங்கள், தரமான எண்ணங்கள் ஆகியவை சரியான திசையில் பயணிக்க வேண்டும்.
'ஒரு பொருளைப் பற்றிய எண்ணத்தில் இருந்து பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை தோன்றுகிறது. ஆசையே கோபமாக வடிவெடுக் கிறது. கோபம் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. குழப்பத்தால், படித்தவை மறந்து போகின்றன. இதனால் சிந்திக்கும் ஆற்றலை இழந்து, பிறகு குறிக்கோளை அடையும் வழியையும் இழந்து விடுகிறான்' என்று கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். எண்ணம்தான் அனைத்துக்கும் மூலம்!
'என் உறவுக்காரர் ஒருவருக்குக் கொடிய நோய் வந்திருக்கிறது' என்று ஒருவர் சொன்னால், உடனே மற்றவர், 'எனக்குத் தெரிந்த ஒருவர்கூட, இந்த வியாதி வந்து போன மாதம் தான் இறந்தார்' என்று முகத்துக்கு நேரே சொல்வது அநாகரிகத்தின் உச்சம். உண்மை விளம்பிகள் எனும் பெயரில் பயத்தைப் பரப்புகிறார்கள்!

மாறாக, 'அவர் நலம் பெறட்டும்' என ஆழமாக எண்ணலாமே?! பூஜை அறையில் அவருக்காக பிரார்த்தனை செய்யலாமே! பரீட்சைக்குச் செல்லும் பிள்ளை, வேலை தேடும் இளைஞர், திருமணமாகப் போகும் நபர் என எவரைச் சந்தித்தாலும் 'நன்றாக நடக்கும்' எனும் நல்ல எண்ணத்துடன் நல்ல வார்த்தைகள் கூறலாமே! 'நல்லதை எண்ணி, நல்லதைச் சொல்ல வேண்டும் எனில், வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே நடந்திருக்க வேண்டும். ஹ§ம்... நமக்கு அப்படியா?' என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை... 'தெய்வம் நமக்குத் துணை பாப்பா- ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா' என்று பாடிய பாரதியின் வாழ்க்கையை விடவா, நமது வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக இருக்கிறது?

நல்லதையே எண்ணி, நல்ல சொற்களையே பேசி, நல்ல செயல்களையே செய்பவர்கள் தெய்வத்தன்மை நிறைந்தவர்கள். பிறருக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருபவர்கள். துன்பம் வரும்போது துவளாமல் நின்று, துன்பத்துக்கே துன்பம் கொடுத்து விடுபவர்கள்!  நமக்குள் புதைந்திருக்கும் தெய்வீகத்தை, அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, இந்த வாழ்க்கையை மாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

                                                                           சுவாமி ஓங்காராநந்தர்

Comments