உடல்... உயிர்... கடவுள்!

காத்மா காந்தி சிறையில் இருந்த காலம். அவரது தேவைகளை கவனித்து உதவும் பொறுப்பை வல்லபாய் படேல் மேற்கொண்டிருந்தார். காந்திஜியின் காலை உணவு பத்து பேரிச்சம் பழங்கள் மட்டுமே! இந்த மனிதர் செய்யும் அசுர வேலைகளுக்கு இவை எப்படி போதும் என்று கவலைப் பட்ட படேல், 'காந்திஜி கவனிக்க மாட்டார்; ஐந்து பழங்கள் சேர்த்துக் கொடுக்கலாம்... கூடுதலாக சாப்பிடட்டும்!' என்று 15 பழங்களைக் கொடுத்தார். ஆனால், பழங்களை எண்ணிய காந்திஜி, ''ஐந்து பழங்கள் கூடுதலாக வைத்திருக்கிறாயே... கவனக் குறைவா?'' என்று கடிந்து கொண்டார்.

உடனே படேல், ''ஐந்து பழங்கள்தானே... கூடுதலாகச் சாப்பிட்டால் என்ன நஷ்டம்? பத்துக்கும் பதினைந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே'' என்றார் உரிமையுடன்.

''வல்லப்... இனி ஐந்து பழம் மட்டுமே சாப்பிடப் போகிறேன். எப்போது பத்துக் கும் பதினைந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று ஆகிவிட்டதோ, அப்போதே ஐந்துக்கும் பத்துக்கும் வித்தியாசம் இல்லை தானே'' என்று முரண்டு பண்ணி காலை உணவை இன்னும் குறைத்துக் கொண்டார் மகாத்மா என்று படித்திருக்கிறேன்.

குறைவாகச் சாப்பிடுவதன் மூலம் நிறைய நாள் வாழ முடியும் என்பது காந்தியவாதிகளின் கருத்து. இது உண்மையும் கூட! 

பஞ்ச காலத்திலும் உயிர் பிழைக்கும் ஆற்றலை இந்தியர்களின் உடலமைப்பு இயல்பாகவே பெற்றிருப்பதாகவும், இதனால் செழிப்பான உணவு வகைகள் இவர்களுக்கு சீக்கிரமே மரண வாசலைத் திறந்து விடும் என்றும் சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு விழாவில், மருத்துவர் ஒருவர் விவரித்தது நினைவுக்கு வருகிறது.

மகாத்மா காந்தி போல, வயிறை ஒட்ட ஒட்ட தண்டிக்கவும் வேண்டாம்; 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்' என்று 'மாயா பஜார்' படத்தில் வரும் கடோத்கஜன் போல் வெளுத்து வாங்கவும் வேண்டாம். நாம் மகாத்மாவும் அல்லர். மாயா பஜார் கடோத்கஜனும் அல்லர்... சராசரி மனிதர்கள்! எனவே சரிவிகித உணவு மற்றும் சமச்சீர் உணவு அவசியம்.
நம் முன்னோர் உப்பு, புளிப்பு, இனிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்று எல்லாச் சுவையுமே ப்பு... ப்பு... என்று முடியும்படி பெயரிட்டனர்!
ஆரோக்கிய உடலுக்கு அறுசுவையும் தேவை என்பதை அறிய வேண்டும். பொதுவாக உணவில் கசப்பு, துவர்ப்பு ஆகியவற்றைத் தவிர்க்கிறோம். வாழைப்பூ (துவர்ப்பு), பாகற்காய் (கசப்பு) கூட சமச்சீர் உணவின் ஓர் அங்கமே!

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுத வந்த வெள்ளைக்காரர், அவரது ஆசிரமத்தில் தங்கினார். அப்போது, தமது புகழ்பெற்ற வேப்பிலைச் சட்னியை அந்த வெள்ளைக்காரருக்கும் பரிமாறும்படி வலியுறுத்தினார் காந்தி. அதை வாயில் வைத்த வெள்ளைக்காரர், 'இது விஷமாக இருக்குமோ...' என்று பயந்து நடுங்கினார். காந்திஜி யின் ஆசிரம விதிகளில் ஒன்று... உணவை வீணாக்கிக் கீழே கொட்டக் கூடாது! இதை அறிந்த வெள்ளைக் காரர், விஷத்தை விழுங்கி விடுவோம் என முடிவுசெய்து, கண்ணை மூடிக் கொண்டு விழுங்கினார். இதைக் கண்ட காந்திஜி பெருமிதத்துடன், ''இவர் இதை விரும்ப மாட்டார் என்றீர்களே... அப்படியே விழுங்கி விட்டார் பார்த்தீர்களா? இவருக்கு வேப்பிலைச் சட்னியை மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் பரிமாறுங்கள்'' என்றாராம்!

வேப்பிலையை விழுங்கும் தீவிரம் நமக்கு இல்லாது போனாலும் முருங்கைக் கீரை, அகத்திக்கீரை, சுண்டக்காய், பாகற்காய் ஆகிய கசப்புக் கறி வகை களை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். பிடித் ததையே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடித்து, ஆஸ்பத்திரி அட்ரஸில் ஆயுள் வளர்க்கலாமா?கிராமங்களில், ஒருவரைத் திட்டும்போது, 'அவனுக்கு திங்கத்தான் தெரியும்' என்பார்கள். இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். உலகில் பலருக்கும் சரிவரத் தெரியாத விஷயமே இதுதான்! நமக்குச் சரியாகத் 'திங்கத் தெரியாது' என்பதை நெற்றியில் அடித்த மாதிரி எனக்குப் புரிய வைத்தது - 'வயிறு' எனும் தலைப்பில் டாக்டர் சு. செல்வராசன் எழுதியுள்ள நூல்!

சாப்பிடும் எண்ணம் வரும்போதெல்லாம் இவர் கொடுத்துள்ள பட்டியலைச் சரிபார்த்து விட்டுச் சாப்பிடுவது அவசியம் (பார்க்க பெட்டிச் செய்தி). படியுங்கள்; நடைமுறைப்படுத்துங்கள். சாப்பிடுவதற்கே இத்தனை கவனம் தேவையெனில் சமைப்பதற்கு எத்தனை அக்கறை தேவை? ஆயிரம் பேர் சமைத்தாலும் அம்மாவின் சமையலில் மட்டும் அப்படியென்ன அதிக ருசி? உப்பு, புளிப்பு தவிர, உணவில் அன்பு எனும் மசாலாவும் சேர்க்கிறாள் தாய்! சர்க்கரையை விடவும் அவளது அக்கறை சேர்வதால், பாயசம் கூடுதலாகவே இனிக்கிறது. இது உண்மை எனில் வெறுப்பு, பகை என்று சபித்தபடி சமைக்கிறார்களே சிலர்... இந்த உணவைச் சாப்பிடுகிறவர் எவ்வளவு துயரப்படுவர்? அளவற்ற அன்புடனும் அபரிமிதமான அக்கறையுடனும் சமைத்துக் கொடுத்தால்... சாப்பிடுபவர் பாக்கியவான்; தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்!

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித் தனி பைகளில் வெளியே வைக்கச் சொல்கிறது மாநகராட்சி. ஆனால், இப்படி பிரித்தறிய முடியாத ரெண்டுங்கெட்டான் குப்பைகளைப் போடுவதற்காக பல வீடுகளிலும் காஸ்ட்லி குப்பைத் தொட்டி உள்ளது. இதன் பெயர்... ஃபிரிஜ் (குளிர்சாதனப் பெட்டி). இந்த எலெக்ட்ரிக் பீரோவில் என்னென்ன குப்பைகள் குடியிருக்கும் தெரியுமா?

வாடிய பீன்ஸ் நான்கு; வதங்கிய காரட் மூன்று; பாதி அறுந்து சாயம் வெளுத்த எலுமிச்சை ஒன்று; தோல் சுருங்கிய மூளி குடமிளகாய் பாதி... என பட்டியல் நீளும். 'பச்சையாக உள்ள காய்கறியை நாளை சமைக்கலாம். இப்போது வாடியதை காலி செய்வோம்' என்று சொல்லி வாடி வதங்கியதை சமைப்பதும் சாப்பிடுவதும் முட்டாள்தனம் இல்லையா? இதுதான் தரித்திர புத்தி என்கிறேன். தரித்திரம் வேறு; தரித்திர புத்தி வேறு. பலருக்கு தரித்திரம் இல்லை எனினும் தரித்திர புத்தி இருக்கிறது. வறுமை இல்லாதபோதும் வறுமைக்கு உரிய வாழ்வையே காலத்துக்கும் நடத்துகின்றனர். வைட்டமின் 'சி' சத்து பெற பசுமையான காய்கறிகளை வாங்கி வந்து சமைக்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஃபிரிஜ்ஜில் வைத்திருந்தாலும் விரைவில் பயன்படுத்த வேண்டும்.
பெருவாரியான வைட்டமின்கள், காய்கறிகளின் தோலுக்கு அடியில் இருப்பதால், தோலுடன் சமைத்து உண்பதே நலம். தோலைச் சீவியே ஆக வேண்டும் என உள்ள காய்களை மேலோடு சீவலாம். கிழங்கு வகைகளை வேக வைத்த பிறகு தோலை உரிப்பதே புத்திசாலித்தனம். சமைப்பதற்கு சற்றே முன்பு, காய்கறிகளை நறுக்குவதால், சத்துகளின் அழிவு குறைவாகவே நிகழும். நறுக்கிய பரப்பில் காற்று படுவதை தவிர்க்க வேண்டும். நறுக்குவதற்கு முன்பே தூய நீரில் கழுவ வேண்டும். காய்கறிகளைக் கொதிக்கும் நீரில் இட்டு வேக வைக்கும் நேரத்தைக் குறைப்பதே விவேகம். இதனால் ருசி, மணம் ஆகியவை கிடைக்கும்.
குறுகிய வாய் கொண்ட பாத்திரத்தில் மூடியிட்டுச் சமைத்தால், சத்துகள் பாதுகாக்கப்படும். அடுத்தவர் வாயைக் கிளறுவது போல், அடிக்கடி பாத்திரத்தைத் திறந்து உணவைக் கிளறினால், உணவில் காற்று பட்டு வைட்டமின்கள் அழிந்து விடும்.

அலுமினிய- பித்தளைப் பாத்திரங்களை விட மண் சட்டிகள், கற்சட்டிகளே உத்தமம். சில உலோகங்கள் உடலுக்கு நச்சுத் தன்மையைத் தரும். இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் நெய்யில் அதிக நேரம் வதக்குவதும் வேக வைப்பதும் தவறு. புரதச் சத்துகள் அதிக நிலையில் கெட்டிப் படுவதால் மிதமான வெப்பத்தில்தான் வேக விட வேண்டும். தயாரான உணவை, மிதமான வெப்ப நிலையில் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து உண்பது நல்லது. சமைத்த உணவைத் திரும்பத் திரும்ப சூடாக்குவது உயிர்ச்சத்துகளை அழிக்கும்; சுவையையும் கெடுக்கும்.

_ 'வயிறு நம் உயிரு' எனும் தலைப்பில் மெட் இந்தியா மருத்துவமனை நடத்திய கண்காட்சியில் உரை நிகழ்த்துவதற்காக, டாக்டர் சு.செல்வராஜ் மற்றும் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் எனக்குத் திரட்டித் தந்த தகவல்கள் இவை!  சொர்க்கத்துக்குச் சென்று வந்த தவளை ஒன்று, அங்கு பெரிய விருந்து நடைபெறப் போவதாக தெரிவித்தது. அங்கு இருந்த உணவு, பானம், தங்க மேஜைகள், உணவு பரிமாறும் அழகிய பெண்கள்... என வர்ணித்தது. இதைக் கேட்ட மற்றொரு தவளை, 'ஹை... அப்படியா..' என கத்தியது. இதைக் கண்டு எரிச்சலுற்ற காகம், 'பெரிய வாயை உடைய எவருக் கும் சொர்க்கத்தில் அனுமதி கிடையாதாம்' என்றது. கொஞ்சமும் அசராத தவளை, 'அப்படியெனில் முதலைதான் பாவம்... அருமையான விருந்து இல்லாமல் ஏமாந்து போகுமே...' என தன் அகல வாய் திறந்து சொன்னதாம்!

'எனக்காக... எல்லாம் எனக்காக!' என்று வெறி பிடித்து அலையும் மனிதர்களே இங்கு அதிகம்! ஆனால், இவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங் களை எவரேனும் பட்டியல் போட்டுச் சொன்னால், உடனே 'இது எனக்கல்ல' என்று நழுவி விடுகின்றனர். சாப்பிட்டு விட்டு கை கழுவுவது போல, ஒவ்வாத உணவுகளையும் ஆராய்ந்து கைகழுவித்தான் பாருங்களேன்!
சாப்பிடாதீர்கள்... சாப்பிடாதீர்கள்!
பசி இல்லாத போது...
உணவுப் பொருள் அல்லாதவற்றை...
கவலையாக இருக்கும்போது...
துக்கம் மிகுந்திருக்கும் சூழ்நிலையில்...
தூக்க மயக்கத்தில்...
களைப்பாக இருக்கும்போது...
வேலை நிறைய இருக்கும்போது...
உணவுக்குப் பின் ஓய்வில்லை என்றால்...
கோபமாக இருக்கும்போது...
உடல் நலம் கெட்டு இருக்கும்போது...
மனக் குமுறல் அதிகமாக இருக்கும்போது...
அவசரச் சூழ்நிலையில்...
புளிப்புப் பண்டங்களை...
கெட்டுப் போன பழைய பண்டங்களை...
அவசியம் இல்லை என்றால்...
உணவு வீணாகி விடுமே என்பதற்காக...
அளவுக்கு மீறி...
நாவின் ருசிக்காக...
அடுத்தவரைத் திருப்திப்படுத்த...
கண்ட கண்ட நேரங்களில்...
கண்ட கண்ட இடங்களில் தயாரித்தவற்றை...
காய்கறி, கீரை பதார்த்தங்கள் இல்லாமல்...
மெல்லாமல் விழுங்கி...
மசாலா போட்ட உணவை...
உங்கள் உடலுக்குப் பொருந்தாத உணவை!

Comments