சின்னமஸ்தா தேவி!

அம்பிகையின் ஆவேசமான வடிவங்களில் ஒன்று சின்னமஸ்தா என்றும் சொல்லப்படும் சின்ன மஸ்திகா. அதாவது, ‘சிரம் இல்லாத அம்பிகை’ என்று பொருள். ஏன் இப்படி? தோழியரின் தாகம் தீர்க்க தன் சிரத்தை வெட்டி, தன் ரத்தத்தையே கொடுப்பவள். அவ்வளவு காருண்யம் மிக்கவள்! ‘தசமஹா வித்யா’ தேவிகளில் மிக மிக விசேஷமானவள் இந்த சின்னமஸ்தா.

ஆவேசம் மிக்க இந்த அம்பிகை, சாந்த வடிவமாக அருள்பாலிக்கும் தலம், சிந்தபூரணி.

இத்திருத்தலம் எப்படி ஏற்பட்டது?

இருபத்தாறு தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த ‘பண்டித மாய்தாஸ்,’ துர்காதேவியின் தீவிர பக்தன். இவனுக்கு தேவிதாஸ், துர்காதாஸ் என்று இரு சகோதரர்கள். அவர்கள் செய்த வியாபாரத்தில் பண்டித மாய்தாஸுக்கு சிறிதும் சந்தோஷம் கிடையாது. எப்பொழுதும் தன் தந்தையைப் போன்று, துர்காதேவியின் பக்தனாகவே இருந்தான். இதற்கிடையில் மாய்தாஸுக்கு மணம் செய்யப்பட்டது. அவரது தந்தையார் இறந்தவுடன் அவனது சகோதரர்கள் மாய்தாஸிடம், “உன்னையும் உன் குடும்பத்தையும் நீயே பார்த்துக்கொள்” என்று கூறி அவனைப் பிரித்துவிட்டனர். அப்போதும் அன்னை துர்காதேவியின் மீது மாய்தாஸுக்கு பக்தி குறையவில்லை.

ஒருநாள் தனது மனைவியின் உறவினர் வீட்டுக்குக் கிளம்பினான். வழியில் மிகவும் சோர்ந்து, ஓர் ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்தவன், அப்படியே தூங்கிவிட்டான்.

அவன் கனவில் தோன்றிய ஒளிமயமான தேவதை, “மாய்தாஸ், எழுந்திரு. இங்கு இருந்து எனக்கு வேண்டியதைச் செய்” என்று கூறினாள். கண்களைத் திறந்த மாய்தாஸ் மிகவும் ஆச்சர்யப்பட்டான். சுற்று முற்றும் பார்த்து, ‘எனக்குத்தான் பிரமையா?’ என்று நினைத்தபடியே, உறவினர் வீட்டுக்குச் சென்றான். தான் கண்ட கனவினைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.

திரும்பும்போது, அந்த ஆலமரத்தடியில் மீண்டும் உட் கார்ந்துவிட்டான். ‘தாயே பராசக்தி! துர்காதேவி! என் சிற்றறிவால் தங்களை அறிய முடியவில்லை. என் சந்தேகங்களை தீர்த்து வை தாயே!’ என வேண்டினான்.

அவனது வேண்டுகோளை ஏற்று, அன்னை துர்காதேவி அவன் முன் தோன்றிச் சொன்னாள்:

“மாய்தாஸ், நான் இந்த இடத்தில் நெடுங்காலமாக இருக்கிறேன். ஆலமரத்தினடியில் பிண்டி (ஒரு உருண்டையான கல்) உருவத்தில் காட்சி அளிப்பேன். அதை எடுத்துக்கொள். அதில் நான் குடியிருக்கிறேன். எனக்கு தினசரி பூஜை செய்” என்று கூறி மறைந்துவிட்டாள்.

இதைக்கேட்ட மாய்தாஸுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் காட்டில் வனவிலங்குகள் அதிகம். அது மலைமீது உள்ள இடம். குடிக்க ஒரு வாய் தண்ணீர் கிடைக்காது. என்ன செய்வது? எனக் கவலையுற்றான்.

“மாய்தாஸ்! இந்த மலையின் வடக்குப் பக்கமாக சரிவான பகுதியில் நிலத்தைச் சற்று தோண்டி கற்களை எடு! தண்ணீர் கிடைக்கும்” என, அசரீரி கேட்டது. மேலும், அவனுக்கு மூல மந்திரத்தை உபதேசித்தது. தொடர்ந்து, “நான் முற்காலத்தில் சின்ன மஸ்திகா என அழைக்கப்பட்டேன். இன்றுமுதல் என்னை கவலைகள்/துன்பங்கள் போக்கும் சிந்தபூரணியாக பக்தர்கள் வழிபடட்டும். பக்தர்கள் தரும் காணிக்கைகளைக் கொண்டு நீ வாழ்க்கை நடத்து. நீயும் உன் சந்ததியும் இந்தக் கோயிலைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றாள் தேவி.

அன்னை சொன்னபடியே அனைத்தும் நடந்தன. 26 தலைமுறைகளாக இன்றும் மாய்தாஸ் குடும்பத்தினர்தான், இந்த சிந்தபூரணி ஆலயத்தை நிர்வாகம் செய்கின்றனர். மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எல்லா நாளும் திருவிழா கோலம்தான்!


இத்திருக்கோயில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். இங்கு பக்தர்கள் தங்குவதற்கு தர்ம சாலைகள், சிற்றுண்டி விடுதிகள், ஹோட்டல் வசதிகள் உண்டு.

இமாசலப்பிரதேசத்தில், உனா (UNA) கோட்டத்தில் உள்ளது இந்தத் தலம். டில்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள ‘ஹோஷியாப்பூர்’ வந்து, அங்கிருந்து சிந்தபூரணியை அடையலாம். பேருந்து வசதிகள் நிரம்ப உண்டு.

Comments