வரம் அருளும் வரத விநாயகர்!

சித்ரரத்ன விசித்ராங்கம்

சித்ரமாலா விபூஷிதம்!

சித்ரரூபதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்!!

(பலவித ரத்னங்களால் அழகிய அங்கங்களை உடையவரும், பலவித மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், பலவித ரூபத்தைத் தரித்தவரும், தேவர் பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமகா கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.)

விதர்ப்ப தேசத்து அரசன் வீமராஜன். அவனது பட்டமகிஷியாக விளங்கியவள் சாருகாசினி. நல்லாட்சி, நன்மக்கள், அடி பணியும் அண்டை நாட்டு சிற்றரசர்கள் என்று இவ்வளவு வசதி பெற்றும், வம்சம் விருத்தியடைய வீமராஜன் தம்பதியருக்கு புத்ரபாக்கியம் கிட்டவில்லை. மகரிஷி விஸ்வாமித்திரர், அவர்களுக்கு விநாயகரின் ஏகாட்சர மந்திரோபதேசம் செய்து வைத்தார். மன்னன், முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிள்ளையார் கோயிலுக்குச் சென்றான். அக்கோயில் வளாகத்திலேயே தன் ராணியுடன் தங்கி, ஏகாட்சர மந்திரத்தை ஜெபித்து வந்தான்.

அதனால் மகிழ்ந்த ஆனைமுகன், அவர்கள் முன் தோன்றினார். அவரைப் பலவாறு துதித்து, “என் குலம் தழைத்தோங்க, புத்ர ப்ராப்தியையும், இறுதியில் முக்தியையும் தந்தருள்க” என்று பிரார்த்தனை செய்தனர். அவ்வரங்களை ஈந்த ஆனைமுகத்தோன், அங்கிருந்த சிலை உருவத்தில் மறைந்துவிட்டார். அதன் விளைவாகப் பிறந்த மகன் ருக்மாங்கதன்.

பாலபருவம் அடைந்ததும், அவனை கல்வி பயில கபில முனிவரின் ஆசிரமத்துக்கு வீமராஜன் அனுப்பி வைத்தான். ருக்மாங்கதன் வெகு விரைவில் சகல கலைகளிலும் தேர்ந்து வல்லவனாக விளங்கினான். அவனுக்கு கணபதியின் ஏகாட்சர மந்திரத்தை உபதேசித்தான் வீமராஜன். ருக்மாங்கதனும் தனது தந்தையைக் காட்டிலும் கணேசரிடம் அதிகம் பக்தி செலுத்தி எந்நேரமும் அவரது நினைவாகவே இருந்து வந்தான். ருக்மாங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்து, ராஜ்ய பரிபாலனத்தை அவனிடம் ஒப்படைத்தான் வீமசேனன். வெகுவிரைவிலேயே தன் சத்ருக்களையெல்லாம் ருக்மாங்கதன் தோற்கடித்து வெற்றிவாகை சூடினான். செங்கோலாட்சியால் தன் குடிமக்களுக்கு பலவித நன்மைகளைச் செய்தான். இதனால் அவனுடைய கீர்த்தி எட்டு திக்குகளிலும் பரவியது.

ஒருமுறை நாட்டு மக்களில் சிலர் அவனிடம் வந்து, தங்கள் பயிர்களையெல்லாம் துஷ்ட மிருகங்கள் நாசம் செய்வதாக முறையிட்டனர். அதைக் கேட்ட ருக்மாங்கதன், படைவீரர்கள் புடைசூழ வனத்தை நோக்கிச் சென்றான். எல்லோரும் சேர்ந்து கொடிய மிருகங்களைக் கொன்று குவித்தனர். அப்போது, ருக்மாங்கதன் பிரிந்து தனித்துச் சென்று விட்டான். அதனால் அவனுக்கு களைப்பும், அடக்க முடியாத தாகமும் ஏற்பட்டன. நல்ல தண்ணீரை தேடி அலைந்த போது, ஓர் ஆசிரமம் தென்பட்டது.

அந்த கவிமகா முனிவரின் ஆசிரமம். தன் பத்தினி முகுந்தை என்பவளுடன் அவர் வசித்து வந்தார். ரிஷிபத்தினி முகுந்தையைக் கண்டு, தண்ணீர் தருமாறு பணிவுடன் கேட்டான் ருக்மாங்கதன். அவனது பேரழகும், திடந்தோளும், ஆண்மை பொலிவும் முகுந்தையின் மனத்தைக் கவர்ந்தன. இதனால் மதிமயங்கினாள். தன்னை ஏற்க வேண்டினாள்.

“ரிஷிபத்தினியே! தாங்கள் எனது தாய்க்குச் சமமானவர். நானோ விநாயக மூர்த்தியை சதா சர்வகாலமும் வணங்கி வழிபட்டு வரும் பக்தன். எனவே உன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள். உன் இச்சையை மனத்திலிருந்து நீக்கிவிடு” என்று கூறினான். மீறி கட்டியணைக்க வந்தவளை உதறித் தள்ளினான். இதனால் வெகுண்ட ரிஷிபத்தினி முகுந்தை, ஆத்திரத்துடனும் கோபத்துடனும் ‘உன் சரீரமெங்கும் குஷ்டரோகம் பீடிக்கட்டும்’ என சாபமிட்டாள்! அந்த சாபம் உடனே பலித்தது. அவனது உடல் வெண் குஷ்டத்தால் தாக்குண்டு அதிவிகாரமாகிவிட்டது.

வேட்டைக்கு வந்திருந்த படை வீரர்கள், தங்கள் மன்னனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் நகரத்துக்கு திரும்பிவிட்டனர். காட்டில் தனியாக விடப்பட்டான் ருக்மாங்கதன். அங்கு வந்த நாரதரை வணங்கி, தனக்கு விமோசனம் வேண்டினான். அவரது சொன்னபடி, விதர்ப தேசத்திலுள்ள கதம்பம் என்னும் நகரடைந்து, அங்குள்ள கணேசகுண்டம் எனும் புனித தாடகத்தில் நீராடியவுடன் அவனைப் பீடித்திருந்த நோய் க்ஷண நேரத்தில் நீங்கிவிட்டது. அக்குண்டத்தை அடுத்துள்ள கோயிலை அடைந்து அங்குள்ள சிந்தாமணி விநாயகரை மனமாற தொழுது அங்கேயே தங்கிவிட்டான். அவரை அனுதினமும் வழிபட்டு, அப்பெருமான் அருளால் ஸாயுஜ்ய பதவி அடைந்தான்.

அதே சமயம், ரிஷிபத்தினியான முகுந்தைக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே கிருச்சமேதர். அவர் வழிபாட்டுக்கு இணங்க, வெளிப்பட்ட கோலம்தான் இந்த வரத விநாயகர். தமக்குக் காட்சி கிடைத்த இடத்திலேயே, கோயிலை எழுப்பி, அதில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தார் அவர். அப்பிள்ளையார் வரத விநாயகர் எனும் திருநாமம் பெற்றார். கிருச்சமேதர் அக்கோயிலுக்கு அருகில் கணேச தீர்த்தம் என்ற குளத்தையும் ஏற்படுத்தினார்.

திருபோண்டு பௌட்கர் எனும் பக்தரால் கி.பி.1690ல் ஓர் ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வரத விநாயகர் சுயம்பு மூர்த்தமாகும். இச்சிலை அந்த ஏரியை அடுத்துள்ள தேவி கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. கி.பி.1725ல் பேஷ்வா சர்தார் ராம்ஜி மகாதேவ் பிவாக்கர் இக்கோயிலை கட்டி சித்திபுத்தி தேவிகளோடு இச்சிலையை பிரதிஷ்டை செய்தார். இதன் மேற்கே தென்படும் ஏரியின் நீரே கோயில் கைங்கரியங்களுக்கு உபயோகிக்கப்படுகிறது. எட்டு அடி நீளமும், எட்டு அடி அகலமும் இருபத்தைந்து அடி உயரமும் கொண்ட இக்கோயிலின் கருவறை நாயகன் கிழக்கு பார்த்து அமர்ந்துள்ளார். சிறிய கோயிலாகத் தென்பட்டாலும் விமானத்தின் உச்சியில் தென்படும் தங்கக் கலசம் வெகு தூரத்திலிருந்தே பளீரெனத் தென்படுகிறது. கோயிலின் பிரகாரத்தில் இரு மூலைகளிலும் தென்படும் இரு விநாயகர் சிலைகள் தென்படுகின்றன. இடது மூலையிலுள்ள சிலை முழுவதும் செந்தூரம் பூசப்பட்டுள்ளது. வலது மூலைப் பிள்ளையார் பளிங்கினாலான வலம்புரி விநாயகர்.

கர்பகிரகத்தின் புறச்சுவர்களில் யானை சிற்பங்கள் தென்படுகின்றன. பிரகாரத்தை வலம் வரும்போது சனி, ராகு, கேது மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். சன்னிதிக்கு கிழக்கே மங்கலேஷ்வர் சன்னிதி உள்ளது. இவரை வணங்கிய பிறகே வரத விநாயகரை வழிபட வேண்டும் என்பது நியதி. பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி, இங்கு நடைபெறும் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். வருடம் முழுவதும் தொடர்ந்து எரியும் நந்தா விளக்கு நம் கவனத்தைக் கவர்கிறது.

நமது அபிலாஷைகள், ஆவல்கள் இவற்றைப் பூர்த்தி செய்யவும், வரையின்றி வரங்களை நமக்கு வழங்கவும்,வரத விநாயகர் ‘மகத்’ தலத்தில் குடிகொண்டுள்ளதை நாம் நிதர்சனமாகக் காணலாம்.

*
கஜானனர்

பிரும்மதேவனின் கொட்டாவியிலிருந்து செந்நிற அரக்கன் தோன்றினான். மேனி நிறத்தால், அவன் சிந்தூரன் எனப்பட்டான். பிரம்மனின் வர பலத்தால், அவன் மூன்று உலகங்களையும் வென்று வாகை சூடினான். ‘யாரை அவன் அணைத்தாலும் அவர்கள் உடனே சாம்பலாகிவிடுவார்கள்.’

ஒருமுறை சிந்தூரன் யுத்த வெறியுடன் கயிலைக்குச் சென்றான் சிந்தூரன். அவனைக் கண்டதும் அனைவரும் ஓடிப் பதுங்கினர். அன்னை உமாதேவியை சிறையெடுத்துச் செல்ல அன்னை முன் சிந்தூரன் முனைந்த போது, நிஷ்டை கலைந்த சிவனார் தன் சூலாயுதத்தோடு அவன் எதிரில் நின்றார். அவரைக் கட்டித்தழுவ சிந்தூரன் நெருங்கினான். க்ஷண நேரத்தில் அவர்களிடையே ஓர் அந்தண ரூபத்தில் வந்து நின்றார் விநாயகர்.

சிவனின் சூலாயுதத்தின் வலிமையை அவனுக்கு எடுத்துரைத்தார். அதனால் அவனுக்கு மரணம்கூட சம்பவிக்கலாம் என்று விவரித்தார்.

சிந்தூரன் உடனே கைலாயத்தைவிட்டு பூலோகம் சென்றுவிட்டான். அந்தணர் வேடத்தை நீக்கிய விநாயகர், தன் சுயரூபத்துடன், ‘சிந்தூரனை சங்கரிப்பதற்கு, தானே அவளது வயிற்றில் மகனாகப் பிறக்கப் போவ’தாக வாக்களித்து மறைந்தார். அதன்படியே, பார்வதி தேவியின் கர்ப்பத்தில் கருவாக உருவானார் விநாயகர்.

முன்னொரு காலத்தில் , அக்காட்டில் திரிந்து வந்த கஜமுகாசூரனை வீழ்த்திய பரமேஸ்வரன், அவனது யானை முகத் தலையை எடுத்து பத்திரமாக வைத்திருந்தார். இந்நிலையில், செந்தூரனை அழிக்க தேவி வயிற்றில் விநாயகர் கருவாக வளர்கிறார் என்று அறிந்த அந்த அசுரன், உமாதேவியின் வயிற்றினுள் இருந்த கருவின் சிரத்தை கிள்ளியெடுத்து நர்மதை நதியில் வீசியெறிந்து விட்டான்.

ஜகஜ்ஜனனிக்கு உரிய காலத்தில் தலை இல்லாத ஆண் குழந்தை பிறந்தது. இதைக் கண்ணுற்ற அனைவரும் மனம் கலங்கினார்கள். சிவனார் பாதுகாத்து வந்த கஜமுகாசுரனின் யானைத் தலை குழந்தையின் கழுத்தில் பொருத்தப்பட்டது. யானை முகக் குழந்தையான விநாயக மூர்த்தி மகர குண்டலம், கிரீடம், முத்து மாலை, பொற்கொடி முதலிய ஆபரணங்களோடு, சதுர்புஜங்களும், மூன்று விழிகளும் விளங்கும்படி, சித்தி புத்தி சகிதராக தரிசனம் அளித்து கஜானனர் என்ற திருநாமம் பெற்றார். அவர் எவ்வாறு சிந்தூரனைக் கொன்றார் என்பது வேறு கதை.


வரத விநாயகர் கோயில், மகாராஷ்டிர மாநிலம், ராய்கர்ஹ் மாவட்டத்தில் காலாப்பூர் தாலுக்காவில் உள்ள ‘மகத்’ எனும் கிராமத்தில் உள்ளது. மும்பையிலிருந்து 63 கி.மீ. மும்பை-பூனா ரயில் தடத்தில் வரும் ‘கர்ஜட்’ நிலையத்திலிருந்து 24 கி.மீ. ‘கபோலி’ ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. கபோலி, கர்ஜட் ஆகிய இடங்களிருந்து இத்தலத்தை அடைய பேருந்து வசதிகள் உண்டு.

Comments