காரியம் கைகூட... ரக்ஷை!

வித்யா ததாதி விநயம்’ என்று அறிவுக்கு இலக்கணம் சொல்வார்கள். என்ன அது? அடக்கம்தான் அறிவுக்கு இலக்கணம்! ‘நவ வியாகரண வேத்தா’ என்று வால்மீகி யிலும், ‘சொல்லின் செல்வன்’ என்று கம்பனிலும் கொண்டாடப்படும் ஹனுமன், எங்கு பார்த்தாலும் அஞ்சலி ஹஸ்தராக, கூப்பிய கரத்துடன் தரிசனம் அளிக்கிறார். என்ன காரணம்?
‘அடக்கம் அமரருள் உய்க்கும்;’ ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்று படித்தவை, பள்ளியில் தேர்ச்சிக்காக படித்த பாடமல்ல; வாழ்க்கையில் வளர்ச்சியடைய, சிறப்பைப் பெற என்பதைப் புரிந்துகொள் என்று சொல்லாமல் சொல்கிறார் ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர். இது நங்கநல்லூர்!
32 அடி உயரத் திருமேனி என்றபோதும் கைக்கூப்பித்தான் நிற்கிறார். ‘வளரவளர பணிவும் வளர வேண்டும்’ என்கிற உபதேசமாகத் தோன்றுகிறது இந்தக் காட்சி!
சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதை போல 32 லட்சணங்களைக் கொண்டவர் இந்த ஆஞ்சநேயர். இந்த இடத்துக்கு இவர் வந்ததிலிருந்து,மெய்சிலிர்க்க வைக்கும் பல அதிசயங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். இந்த திருமேனியை ஒரு கொட்டகையில் வைத்து செதுக்கி கொண்டிருந்த நேரத்தில், விடியற்காலையில், அதாவது 2.30-3.00 மணி அளவில் தினமும் மரக்கட்டை காலணி (பெரிய மகான்கள் அணிந்து கொள்வது) சப்தம் கேட்பதை சிற்பிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என பெரியவர்களை கேட்டபோது, பக்கத்தில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ ராகவேந்திரர்தான் தம் இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரை தரிசிக்க வருகிறார் என்று சொன்னார்கள்.
இதேபோல இன்னொரு சம்பவம்: ஆஞ்சநேயரின் சிலைக்கு உறுதி ஊட்டுவதற்காக, 40 அடி தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் சிலாரூபத்தை வைத்திருந்தோம். தீடீரென ஒருநாள், தொட்டி உடைந்து போய் விட்டது. மனம் சஞ்சலப்பட்டு பெரியோர்களிடம் கேட்டபோது, “தானாகவே தண்ணீர் தொட்டி உடைந்தது நல்ல சகுணம்தான்” என்று கூறினார்கள். இப்படி பலப்பல சம்பவங்களைச் சொல்லலாம்.
இக்கோயிலில் ஆறு கால பூஜைகள் வெகு சிரத்தையுடன் நடைபெறுகின்றன. உச்சிகால பூஜையின்போது, மடைப்பள்ளியில் அப்பம் தயார் செய்யப்பட்டு, ஸ்வாமிக்கு நிவேதனம் ஆகிறது. தினமும் காலை திருமஞ்சனம் ஆன உடன், ஈர வாடை தளிகை என்று தயிர் சாதம் நிவேதனம். தினமும், 300 பேர்களுக்கு அன்ன தானம். சனிக்கிழமைகளில் மட்டுமே 1,200 பேர் இந்த அன்னதானத்தில் கலந்து கொள்கிறார்கள். சீதா கல்யாணம் நடக்கும் நாட்களில், கல்யாண சாப்பாடே பரிமாறப்படுகிறது.
இக்கோயிலில் இருக்கும் கோசாலையில் உள்ள பசு மாடுகளிலிருந்து பால் கறக்கப்பட்டு, அதைக் கொண்டுதான் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் பக்தர்களுக்காக, அவரவரின் விருப்பத்துக்கு இணங்க இங்கே ஆயுஷ்ய ஹோமம் (ஒருவரின் ஆயுள் அபிவிருத்திக்காக செய்யப்படுவது) காலை வேளையில் நடைபெறுகிறது.

சனிக்கிழமைதோறும் மாலை வேளையில், நடைபெறும் ரக்ஷாபந்தனத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். ரக்ஷைகளை ஹோமம், மந்திரம் செய்து பூஜித்து ஆஞ்சநேயரின் திருவடியில் சமர்பித்து, பக்தர்களின் கையில் கட்டுகிறார்கள். இந்த ரக்ஷையை கட்டிக் கொண்டு 5 சனிக்கிழமைகள் இந்த கோயிலுக்கோ அல்லது தங்களுக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கோ சென்று ராம நாமத்தை ஜபித்து, ஐந்தாவது சனிக்கிழமை இக்கோயிலுக்கே வந்து ரக்ஷையை விசர்ஜனம் (களைந்து விடுதல்) செய்து, தங்களுக்கு காரிய சித்தி தந்த ஆஞ்சநேயரை நெக்குருகி தரிசிக்கிறார்கள் பக்தர்கள்.
தெளிந்த அறிவு, உடல் வலிமை, புகழ், துணிவு, பயமின்மை, சோர்வின்மை, சொல்லாற்றல், வீரம் என்று குணங்குன்றாக விளங்கும் ஹனுமனை, குன்றைப் போலவே பேருருவில் காணும் போது மனம் சிலிர்த்துதான் போகிறது.

Comments