செல்லப்பிராட்டி லலித செல்வாம்பிகை!

லலிதா என்பது, பராசக்தியைக் குறிக்கும் சொல். பிரம்மா, விஷ்ணு, சிவன், ருத்திரன் ஆகிய நால்வரையும் கால்களாகவும், சதாசிவனை பலகையாகவும் கொண்ட ஆசனத்தில் வீற்றிருப்பாள், ஸ்ரீலலிதை! பாசாங்குசமும், கரும்பு வில்லும், மலர்க்கணையும் தாங்கியவள் என்று இந்த தேவியின் சிறப்பை விவரிக்கின்றன மந்திர சாஸ்திரங்கள். லலிதா சஹஸ்ர நாமம், லலிதா திரிசதி போன்ற துதி நூல்கள் இந்த தேவியைத்தான் ஆராதிக்கின்றன. ‘ஸ்ரீமாதா’ என்றும், ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகா’ என்றும் கொண்டாடப்படும் அம்பிகை, லலித செல்வாம்பிகையாக காட்சி தரும் திருத்தலம், செல்லப்பிராட்டி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். மிகப்பழமையான சோழர்கால கட்டடக் கலையை நினைவூட்டுகிறது ஆலய அமைப்பு. ஐந்து நிலைகளோடு கூடிய ராஜகோபுரம் முகப்பை அலங்கரிக்கிறது. அதில் நுட்பமான சுதை வடிவங்களையும் காண்கிறோம்.
வினையகற்றும் வேழமுகன், வல்லமை கூட்டும் வேலவன் சன்னிதிகளைத் தரிசிக்கிறோம். அவர்களோடு சிவசக்தி, விஷ்ணுசக்தி, பிரம்மசக்தி அம்பிகை வடிவங்களையும் பிராகாரத்தில் காண்கிறோம். இந்த முப்பெருஞ் சக்திகளின் ஒட்டுமொத்த வடிவாகவே, மூலஸ்தானத்தில் அம்பிகை எழுந்தருளியிருக்கிறாள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
மூலஸ்தானத்தில், இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில், அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறாள் ஸ்ரீலலித செல்வாம்பிகை. அழகு பொலியும் திருக்கோலம்! நெற்றியில் பளீரிடும் திலகம். சிரசில் சந்திரசலை தரித்திருக்கிறாள். எட்டு கரங்கள்!
திசைகள் எட்டு; ஐஸ்வர்யங்கள் எட்டு; தவத்தால் பெறும் சித்திகள் எட்டு; சிவபிரான் வீரம் விளைவித்த தலங்கள் எட்டு; சிறப்புக்குரிய மலர்கள் எட்டு; ஈசனுக்குரிய குணங்கள் எட்டு; திருமாலுக்குரிய மகாமந்திரத்தின் எழுத்துக்கள் எட்டு என்று, எட்டமுடியாதது எட்டின் பெருமை! எட்டு எட்டாகப் பெருகும் அனைத்தையும் எட்டும்படி செய்பவள்; கிட்டச் செய்பவள் என்று தேவியின் எட்டு கரங்களும் உணர்த்துவது போலவே தோன்றுகிறது. கல்விக்கு அதிதேவதையான சரஸ்வதிக்குரிய அக்ஷமாலை, கமண்டலம்; செல்வநாயகியான திருமகள் கொள்ளும் சங்கு, சக்கரம்; உமையவளான பார்வதிக்குரிய பாசம் அங்குசம் ஆகியவற்றை ஆறு திருக்கரங்களில் தாங்கியவள் அம்பிகை. மற்ற இரு கரங்கள் அபய, வரத ஹஸ்தமாக விளங்குகின்றன.
ஆயுதங்களைத் தாங்கிய போதிலும், அளப்பரிய அமைதி துலங்குகிறது தேவியின் திருமுகத்தில்; விழிமலர்கள் அருள் சுரக்கின்றன. ‘முப்பெருந்தேவியராக தோற்றமளிப்பதும் நானே!’ என்று அம்பிகை சொல்வதுபோலவே தோன்றுகிறது.
சுமார் மூன்றடி உயர சிறிய சிலாரூபம்தான். அதற்குப் பின்னே, கல்பலகையில் அமைந்த யந்திரம் ஒன்றையும் காண்கிறோம். கல்லில் பன்னிரண்டு கட்டங்கள். அவற்றில் மந்திர அட்சரங்கள் தென்படுகின்றன. அதன் குறுக்கே சூலத்தில், பலகையின் மேல்பகுதியில் சூரியன் மற்றும் சந்திரனையும் காண்கிறோம்.
உருவ வழிபாடு ஏற்படும் முன்பு, மந்திரத்துக்குரிய அட்சரங்களை பலகைகளில் எழுதி பூஜித்து வழிபட்டனர். இப்போதும், தாமிரம் உள்ளிட்ட உலோகத் தகடுகளில் யந்திரமாக வரைந்து, அட்சரங்களை அதில் பொறித்து, பூஜைகளில் பயன்படுத்துகிறோம். சித்தர்கள் புரச இலையில், சந்தனத்தால் யந்திரத்தை வரைந்து பூஜிப்பார்கள். அப்படி கல்பலகையில் யந்திரம் அமைத்து வழிபட்டார் ருஷ்யசிருங்கர்.
விபாண்டக முனிவரின் மைந்தரான இவர்தான், குழந்தைப்பேறு வேண்டி, தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தியவர். இதன் பயனாகத்தான், ஸ்ரீராமாவதாரம் நிகழ்ந்தது. ருஷ்யசிருங்கர் பூஜித்த யந்திர வடிவ கல்பலகைதான், இங்கே மூலஸ்தானத்தில் காணப்படுகிறது. அதை அமைத்து வழிபட்ட ருஷ்ய-சிருங்கரையும் இங்கே காண்கிறோம். சுமார் நான்கடி உயரம் கொண்ட கல்பலகையைக் காணும் போது, ‘எப்படி வணங்கினாலும், அந்த பக்தியை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அன்னை சொல்வதாகத் தோன்றுகிறது.
நுண்கலைகளுக்கு அடையாளமான சந்திரனை சூடியதன் மூலம் கலைகளின் அரசியாகவும், மனத்தை ஆட்கொண்டு அருளும் மனோன்மணியாகவும் விளங்குகிறாள். கமண்டலம், ஜப மாலை தாங்கியதால் ஞானத்தையும், கட்டுப் பாட்டையும் உணர்த்துகிறாள். சங்கு, சக்கரத்தால் தர்மத்தையும், காலத்தையும் நினைவூட்டுகிறாள். பாசாங்குசத்தால், விருப்பு-வெறுப்பு என்னும் இரண்டு தன்மைகளே, நிகழ்வுகள் அனைத்துக்கும் வேர் என்று அறுவுறுத்துகிறாள்.
இப்படி, தன்னுடைய தோற்றத்தால், ‘எல்லாம் என்னால் அருளப்படுபவை’ என்று காட்டும் லலித செல்வாம்பிகையை பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்த தேவியை வழிபடுவதால், கல்வியில் தேர்ச்சி, தொழில் வளர்ச்சி, வருவாய் பெருக்கம், செயல்களில் வெற்றி என நன்மைகள் பெருகுகின்றன என்பது பக்தர்கள் அனுபவம்! இங்கே தியானம் செய்யும்போது, ‘ஓம்’ என்னும் ஒலி காதில் ஒலிப்பதுபோலவே தோன்றுகிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்த தேவிக்கு, எல்லாப் பூக்களுமே விசேஷமானவைதான். சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமைகளில் பூஜிப்பது சிறப்பு. வெண்ணிற மலர்களால் வெள்ளிக்கிழமைகளில் மாலைப் பொழுதில் அர்ச்சிப்பது விசேஷம். எல்லா நாட்களுமே பூஜைக்குச் சிறந்தவைதான் என்றாலும், இந்த தினங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
கவலைகளைச் சுமந்து கூன் போடாமல், மனம் கோணாமல், லலித செல்வாம்பிகையின் சன்னிதிக்கு நம்பிக்கையோடு நடந்த கால்கள், வெளிச்சத்தைக் காண்கின்றன என்கிறார்கள் பலர். அதே நம்பிக்கையுடன், செல்லப்பிராட்டியில் நம் பாதம் படியட்டும்; அந்த செல்வப் பிராட்டியின் திருவடிகளில் மனம் படியட்டும்; நமக்கும் வெளிச்சம் வரும்!

செல்லப்பிராட்டி - செல்லும் வழி:
செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் செஞ்சி-சேத்பட் சாலையில், செல்லப் பிராட்டி கூட்ரோடு நிறுத்தம். அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ஆலயம்! தொடர்பு எண்: 94440 67172
தரிசன நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை;
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

Comments