கல்லானால் தரிசனம்!

‘குரு பாதுகா’ என்ற தலைப்பில் நாகை முகுந்தன் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...
“காட்டுக்குச் சென்ற ராமனை, பரதன் அரசாள அழைத்தான். ஆனால் ராமரோ, 14 வருடங்கள் வனவாசத்தில் இருக்க போவதாக பரதனிடம் உறுதியாகக் கூறினார். ராமனிடம் கொண்ட பாசத்தாலும், பக்தியாலும் அவரின் பாதுகையை தரும்படி வேண்டினான் பரதன். ராமரும் தமது பாதுகையை பரதனிடம் கொடுத்தார். பரதன், அந்தப் பாதுகையை எடுத்து வந்து, அயோத்தி அரியாசனத்தில் வைத்து, நாட்டைப் பரிபாலித்தார்.
பகவானைச் சேர்ந்ததால் பாதுகைக்கும் பதவி வாய்க்கிறது என்கிற சூட்சுமமும் இதில் உள்ளடக்கம்.
***
இன்னொரு இடத்தில், பாதத்தின் பெருமையை ராமாயணம் உணர்த்துகிறது. அது, அகலிகை சாப விமோசனம். ராமரின் பாதங்கள் கல்லின் மீது பட்டதும், சாப விமோசனம் பெற்று அகலிகை என்ற பெண்ணாக மாறுகிறாள்.
சிலரைப் பற்றிச் சொல்லும்போது, அவருக்கு கல்மனசு என்று சொல்கிறோம். கல் என்பது இரக்கமில்லாத தன்மை என்று பொருள் கொள்கிறோம். ஆனால், அப்படியல்ல அர்த்தம். கல்லாக உணர்ச்சியற்று மழையோ வெயிலோ சுகமோ துக்கமோ இல்லாத சமசித்தத்துடன் இருந்தால், பகவானின் திருவடி பட்ட மாத்திரத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கலாம். இப்படியும் அர்த்தப்படுத்தலாம்.
***
திருவடிச் சிறப்பு என்று தனியாகவே சொல்லலாம். சேக்கிழார் பெருமான் ‘மலர் சிலம்படி’ என்று பாடுகிறார். ‘நாதன் தாள் வாழ்க’ என்கிறார் மணிவாகப் பெருந்தகை. அப்பர் பெருமானோ, ‘மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்கிறார்.
பெருமாளை தரிசிக்க சென்றால், முதலில் அவரது பாதத்தைதான் பார்க்க வேண்டும். பாதத்திலிருந்து தொடங்கி பெருமாளின் திருமுகத்தை காணுதல் சிறப்பானது, என்பது சம்பிரதாயம்.
அத்தகைய சிறப்பு குருமாரின் பாதத்திற்கும் இருக்கிறது. எங்காவது குருவை பார்க்க நாம் சென்றால், அவரது பாதங்களை தொட்டு வணங்குதல் மூலமாக அவரது அருளுக்கும், பெருமாளின் அன்புக்கும் நாம் பாத்திரமாவோம்.
***
அந்தக் காலத்தில் வெந்நீர் பாத்திரம் என ஒன்று வீட்டில் இருக்கும், அது நெருப்பு உஷ்ணத்தில் கருப்பு நிறமாக மாறுவது மட்டுமல்லாமல், கரி படிந்து, அடைந்து இருக்கும். அந்த கரியை நீக்குவோ மாயின் பாத்திரம் நிறம் மாறி நீர் வழியத் தொடங்கும்.
அதேபோல், நம் அனைவரிடத்திலும் பக்தி இருக்கிறது, கரிக்கு அடியில் ஒளிந்திருக்கும் உண்மையான பாத்திர நிறத்தில். நாம் எப்படி சுரண்டி கரியை அகற்றுகிறமோ, அதுபோல் நமது உள்ளத்தின் தேவையற்ற எண்ணங்களை நீக்கி விட்டாலே போதும்; பக்தி என்ற நீர் நம்மிடத்திலும் சுரக்கும்.”

Comments