கண்வ மகரிஷி ஆஸ்ரமம்

உத்தர்கண்ட் மாநிலம் கோட்வார் என்ற இடத்துக்கு அருகில், பவுரி கார்வால் என்னும் குன்றின்மேல் அமைந்துள்ளது கண்வமகரிஷி ஆஸ்ரமம். இங்குதான் அவர் தவம் செய்து முக்தி அடைந்தார். அதற்கு அடையாளமாக அவருக்கு இங்கு ஒரு சமாதி உள்ளது.
இதை ஒட்டி உள்ள இன்னொரு குன்றின் மேல் உள்ள கோயிலில், சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையான கண்வமகரிஷி சகுந்தலை அவள் கணவன் துஷ்யந்தன், இவர்களது மகன் பரதனும் சேர்ந்து காட்சியளிக்கின்றனர்.
இந்த பரதன் பெயரால்தான் நம் நாட்டுக்கு பாரததேசம் என்றும் பெயர் வந்தது. இக்கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகளுடன் கூடிய தனிவழி உள்ளது. செல்லும் வழியில் விஸ்வாமித்திரர் தவம் செய்யும் நிலையில் காட்சியளிக்கிறார். அவர் தவம் செய்து கொண்டிருந்தபோதுதான், இந்திரனால் அனுப்பப்பட்ட மேனகா, அவரது தவத்தைக் கலைத்தாள். அதன் விளைவாகப் பிறந்தவள்தான் சகுந்தலை. இவளது மகன் பரதனும் இங்குதான் பிறந்தான்.
சகுந்தலை குழந்தையாக இருந்தபோது, இங்குள்ள மலைக்காட்டு மயில்கள்தான் அவளை பாதுகாத்ததாக காளிதாசனின் காவியமான ‘சாகுந்தலம்’ கூறுகிறது. இதற்கு ஆதாரமாக இன்றும் இப்பகுதியில் ஏராளமான மயில்கள் வாழ்கின்றன.
“பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேரவும், குடும்ப ஒற்றுமை வேண்டியும், தம்பதியர் மனமொத்து இருக்கவும் பக்தர்கள் இங்கு வந்து வணங்குகிறார்கள்; பலனடைகிறார்கள்” என்கிறார் இந்த ஆஸ்ரமம் கோயிலின் தலைவர் ராமானந்த்ஜி.
கோட்வார் ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் இந்தத் தலம் உள்ளது. தங்குமிட வசதியும் உண்டு. பிப்ரவரி-மார்ச், செப்டம்பரில் இங்கு செல்லலாம்.

Comments