பள்ளம் ஸ்ரீபத்ரகாளி

ள்ளம் ஸ்ரீபத்ரகாளி! பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? மேடு- பள்ளம் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில், வழித்துணையாக வந்து நம்மை பத்திரமாகக் காக்கும் ஆதிசக்தியின் அம்சம் இவள். இந்த தேவி கோயில் கொண்டிருப்பதும் பள்ளமான பகுதியில்தான். எனவேதான் இப்படியரு திருநாமம்!
கன்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது மேலகிருஷ்ணன்புதூர். இங்கிருந்து மேற்கே... குளச்சல் செல்லும் பாதையில் (சுமார் 500 அடி தூரத்தில்) குடிகொண்டிருக்கிறாள் பள்ளம் ஸ்ரீபத்ரகாளி. தேவியின் கோயில் அமைந்திருக்கும் பகுதி, தரை மட்டத்தை விட சுமார் 10 அடி அளவுக்குத் தாழ்ந்திருக்கிறது.
இந்தக் கோயிலின் முன் உள்ள சாலையை, 'கொல்லம் கன்யாகுமரி ராஜபாதை' என்கிறார்கள். முற்காலத்தில், திருவிதாங்கூர் ராஜாக்கள், இந்த வழியாகவே கன்யாகுமரிக்குச் செல்வார்கள் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பயணத்தின்போது அரசர்களும் அவரின் பரிவாரங்களும் தங்கிச் செல்ல, இந்தப் பகுதியில் ஆங்காங்கே பல மடங்கள் அமைந்திருந்தனவாம். அவற்றில் ஒன்றே, தற்போது நாம் காணும் காளிதேவியின் கோயிலாக பரிணமித்தது!
இங்கு காளிதேவி குடியேறியது எப்படி?

அரசருக்காக வரி வசூலிக்கச் செல்லும் தண்டல் காரர்கள், அடிக்கடி இந்த வழியே குதிரையில் பயணிப்பது வழக்கம். ஒரு முறை... வரிவசூல் முடித்த தண்டல் காரர்கள், வழியில் உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி கோயிலுக்குச் சென்றனர். கோயிலை அடைந்தபோதுதான் தங்கள் குதிரைகளின் காலடிக் குளம்பில் படிந்திருந்த ரத்தக் கறையை கவனித் தனர்.
வந்த வழியிலேயே திரும்பிச் சென்று காரணத்தை அறிய முடிவு செய்தனர். அப்படி அவர்கள் திரும்பும் வழியில்... தற்போது தேவியின் ஆலயம் (அப்போதைய மடம்) அமைந்திருக்கும் பகுதியில்குறிப்பிட்ட ஓரிடத்தில், ரத்தம் கசிவதைக் கண்டனர்! 'இது ஏதோ தெய்வச் செயல்!' என்று எண்ணியவர்கள், அந்த இடத்தை வணங்கி, கிளம்பி விட்டனர்.
அன்று இரவு அவர்களில் ஒருவரது கனவில் தோன்றிய காளிதேவி, ரத்தம் கசியும் இடத்தில், தான் உறைந்திருக்கும் ரகசியத்தை வெளிப்படுத்தினாள். அத்துடன் அந்த இடத்தில் தனக்குக் கற்கோயில் ஒன்று எழுப்புமாறும் ஆணையிட்டாள்! சரி... கற்களுக்கு எங்கே போவது? இதற்கும் அன்னை பதில் தந்தாள். நல்லதொரு நாளை குறிப்பிட்டு, ''அன்றைய தினத்தில் கற்கள் கிடைக்கும்!'' என்று அருளி மறைந்தாள்! கனவு கலைந்து கண்விழித்தவர், விஷயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அம்பிகை குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது! கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் 'சங்கு துறை' கடல் பகுதியில் நீர் உள் வாங்க... கற்கள் வெளிப்பட்டன. பிறகென்ன? ஆலயத் திருப்பணிக்காக இயற்கையையே மாற்றி அமைத்தாளாம் காளிதேவி. ஆம்! ஏழு நாட்கள் இணைந்து ஒரே நாளாக... அன்றைய தினத்தின் இரவுப் பொழுதுக்குள் ஆலயத்தைக் கட்டி முடித்தார்களாம். கருவறைக்குள் காளிதேவியின் சுயம்பு விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது.
ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கி அமைந் திருக்கிறது ஆலயம். கருங்கல் கட்டுமானத்துடன் திகழும் கருவறையில் அமர்ந்த கோலத்தில், திருவடியில் கிடக்கும் தாரகாசுரனை, சூலாயுதத்தால் வதைக்கும் நிலையில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள் பள்ளம் பத்ரகாளி!
குழந்தை வரம் தருவதில் வரப்ரசாதியாக திகழ்கிறாள் பள்ளம் பத்ரகாளி. இதற்குச் சான்றாக ஒரு சம்பவம்:
கோயிலிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் குஞ்சன்விளை. இங்கு வசித்த ஒரு தம்பதி, குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினர். இந்த நிலையில் பள்ளம் பத்ரகாளி அம்மனின் மகிமை பற்றி பெரியவர்கள் மூலம் அறிந்தனர். மனம் நிறைய பிரார்த்தனையையும் காணிக்கையாக ஒரு பலாப் பழத்தையும் சுமந்தபடி அம்மனின் அருள் நாடி இந்தக் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.
பலாப்பழத்தை அம்மனுக்கு சமர்ப்பித்து விட்டு, பூஜைகளைக் கண் குளிர தரிசித்தனர். அம்மன் பிரசாதமான பலாப்பழத்தை, பக்தர்களுக்கு விநியோகிக்கலாம் என்ற எண்ணத்துடன் அறுத்தனர். என்ன அதிசயம்?! உள்ளே ஒரே ஒரு சுளை மட்டுமே இருந்தது! மெய்சிலிர்த்தனர் தம்பதி.
அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. விரைவில், ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரு குழந்தையைப் பெற்றனர். ஒற்றை பலாச்சுளை மூலம் பள்ளம் பத்ரகாளி குறிப்பால் உணர்த்தியது மெய்யாகிப் போனது!
தற்போதும் இந்தப் பகுதி வழியே பயணிப்பவர்கள், தங்களுக்கு வழித்துணையாக வரும்படி பள்ளம் பத்ரகாளியை வேண்டிக் கொள்கிறார்கள். புதிதாகக் காரியம் துவங்குமுன் பூக்கட்டிப் போட்டுப் பார்க்கும் வழக்கமும் இங்கு உண்டு. வெள்ளைப் பூ வந்தால்- காரியம் துவங்க தடை இல்லை. சிவப்புப் பூ வந்தால், காரியத்தைத் தள்ளிப் போடுவது உத்தமம்.
இந்தக் கோயிலில் பத்ரகாளி அம்மனைத் தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபைரவர் (வைரவன்), பேச்சியம்மன், சுடலை மாடன் மற்றும் நாகர் சிலைகளையும் தரிசிக்கலாம். இங்கு, மாசி மாதம் விழா எடுக்கிறார்கள். சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு, மேலகிருஷ்ணன்புதூர் மக்கள் ஒன்று சேர்ந்து திருப்பணிகள் நிறைவேற்றி, கடந்த தை 19-ஆம் நாள் கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளனர்.

Comments