கணவன் உயிர்மீட்ட காரிகை!

புகுந்தவீடு, பிறந்தவீடு என்று இரண்டு வீடுகளின் மாண்பையும் காக்க வேண்டிய பொறுப்பு, பெண்களுக்குரிய தனிச் சிறப்புகளில் ஒன்று. தாய்வீட்டுச் சீதனமாக அவள் கொண்டு வந்த பண்பும், கற்ற கல்வியும், புகுந்த வீட்டில், அவளை மனையறம் பேணும் மங்கையாக உருமாற்றுகிறது. மனஉறுதியும், பொறுமையும், அவளுக்கு அணிகலன்கள் ஆகின்றன.
இத்தகைய பெண்கள் வரிசையில் வைத்து எண்ணிப் பார்க்கத் தகுந்த ஒரு பெண்மணி சாவித்திரி.
உத்தமகுணமுடைய அசுவபதி என்ற அரசனின் மகளாக வந்து பிறந்த மங்கையர் திலகம். தாய் தந்தையின் பண்பு நலன்களை எல்லாம் வரித்துக்கொண்ட பெண்ணின் நல்லாள். தக்க தருணத்தில், தன் பெண்ணை கன்னிகாதானம் செய்து வைக்கவேண்டிய முக்கியமான தன் கடமையை உணர்ந்தான் மன்னன் அசுவபதி. மகளின் விருப்பத்திற்கிணங்க அவள் விரும்பும் மணாளனையே மண முடிப்பதென முடிவு செய்தான். சாவித்திரியோ தபோவனத்தில் வாழ்ந்து வரும் சத்தியவானையே, தான் திருமணம் புரிந்து கொள்ள விரும்புவதைத் தெரிவித்தாள்.
சத்தியவான், சாலுவதேசத்து மன்னன் த்யுமத்சேனனின் மகன். பெயருக்கு ஏற்றபடி சத்தியவழி நிற்பவன். அன்பும், அறமும் இரு கண்களெனக் கருதி வாழும் ஆண்மகன். த்யுமத்சேனனின் நாட்டைப் பகைவர்கள் கவர்ந்து கொள்ள, செல்வம் இழந்து, அரசு இழந்து புதல்வனோடும் மனைவியோடும், ஒரு துறவியைப் போல், கண்ணில்லாமல் வாழ்ந்து வந்தான் மன்னன் த்யுமத்சேனன். இச்செய்தி நன்கு தெரிந்து மகளின் விருப்பப்படி, சத்தியவானுக்கு தன் பெண்ணை மணமுடிக்க விரும்பினான் அசுவபதி.
மன்னன் அசுவபதியைச் சந்திக்க வந்த நாரத மகரிஷி, சாவித்திரி மணக்க விரும்பும் சத்தியவானின் சிறப்புக்களை எல்லாம், அவனுக்கு எடுத்துரைத்தார். “சத்தியவான் அரிச்சந்திரனைப் போல் வாய்மை தவறாதவன்; நற்பண்புகள் வாய்க்கப் பெற்றவன்; அறிவிற் சிறந்தவன்; பொறுமைமிக்கவன், சிறந்த கொடையாளி; பெருந்தன்மையும், பெரியோரை மதிக்கும் பண்பும் உடையவன்” என்று சத்தியவானின் நற்குணங்களை எல்லாம் நாரதர் எடுத்துரைத்தார்.
நிறைகளை எல்லாம் அடுக்கிச் சொன்ன நாரதர், அடுத்துச் சொன்னார். “ஆனால், அவன் இன்னும் ஓராண்டு காலம் மட்டும்தான் உயிருடன் இருப்பான்” என்றார். இந்த பதிலைக் கேட்ட மன்னன் அசுவபதி நடுநடுங்கிப் போனான். தன் பெண்ணைப் பார்த்து, “சாவித்திரி இன்னும் ஓராண்டு மட்டுமே வாழ இருக்கும் ஒருவனை மணந்துகொள்வது சரியா? என் மனம் அதனை ஏற்க மறுக்கிறது. எனவே உன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, வேறு ஒருவனைக் கணவனாக வரிப்பதுதான் உனக்கு நல்லது” என்றான்.
ஆனால், “தந்தையே! எப்பொழுது அவர்தான் என் கணவர் என்று மனத்தால் வரித்துவிட்டேனோ, இனி அதில் மாற்றம் செய்வதற்கு என்னால் இயலாது. என்ன குறை இருந்தாலும், நான் மணக்கப் போவது சத்தியவானைத்தான். என் முடிவில் மாற்றம் இல்லை” என்று திட்ட வட்டமாகக் கூறினாள் சாவித்திரி.
மனத்தில் கலக்கம் இருந்தாலும், மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமே என்று எண்ணினான் மன்னன். தன் மகளது விருப்பத்தை நிறை வேற்றுவதற்காக, த்யுமத்சேனனின் ஆசிரமத்தை அடைந்தான். அங்கு தருப்பை ஆசனத்தில் அமர்ந்திருந்த ராஜ ரிஷியைக் கண்டான். அவர் கண்பார்வையற்றவர் என்பதையும் தெரிந்து கொண்டான்.
தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டதும், த்யுமத்சேனன், “வந்த காரணம் யாது?” என வினவினார். “என் பெண் சாவித்திரியை தங்கள் மகன் சத்தியவானுக்கு முறைப்படி கன்னிகாதானம் பண்ணச் சித்தமாயிருக்கிறேன்” என்றான் அசுவபதி. அதனைக் கேட்ட த்யுமத்சேனன், “அரசாட்சியை இழந்து, நாடுவிட்டு காட்டில் தவநிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து, உன் அன்பு மகள் துன்பங்களை அனுபவிக்க நீயே வழி செய்வதா?” என்றார். அது கேட்ட அசுவபதி, “வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரத்தானே செய்யும். இன்பம், துன்பம் எல்லாம், அவரவர் மனத்தைப் பொறுத்தது. என் மகள் பண்பட்டவள்.
சத்தியவானை என் மகளுக்குக் கணவனாக்கி, அவளை உங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான்.
த்யுமத்சேனன், அசுவபதியின் வார்த்தைகளில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டார். வனத்தில் வாழ்ந்த முனிவர்களை எல்லாம் வரவழைத்து, சத்தியவான்-சாவித்திரியின் திருமணத்தை நிகழ்த்தி வைத்தார். அசுவபதி தன் மகளுக்கு வேண்டியன எல்லாம் தந்து விடைபெற்று, தன் நகருக்குத் திரும்பிச் சென்றான்.
வனவாழ்க்கைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு, தன் கணவனிடம் மாறாத அன்புடையவளாகி, அவனுக்கு வேண்டிய அனைத்துப் பணி விடைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள் சாவித்திரி.
கண்ணில்லாத தன் மாமனாருக்கும் உரிய பணிவிடை புரிந்தாள். தன் அன்பினால் தன் மாமியின் மனத்திலும் இடம்பிடித்தாள். மனத்தால் வரித்தவனையே கணவனாக அடைந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நாள் செல்லச் செல்ல, ‘இன்னும் சில நாட்கள்தானே’ என்று அச்சம், சாவித்திரியை நாட்களை எண்ண வைத்தது. சத்தியவானின் காலம் நிறைவடைய வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.
இன்னும் நான்கு நாட்கள்தான் என்று கணக்குப் போட்டவள், மூன்று நாட்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு விரத நியமத்தை ஏற்றுக்கொண்டாள். திரயோதசியில் விரதத்தைத் தொடங்கி, உணவையும் நீரையும் துறந்து, ‘பரம்பொருள் கணவனைக் காக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்தாள். இந்த விரதத்தின் மூலம் கணவனுக்குத் தேவைப்படும் ஆயுள் பலத்தை இறையருளால் பெறலாம் என்றெண்ணி, தன்னையே வருத்திக் கொண்டாள். சாவித்திரியின் சஞ்சலத்தை எண்ணி, த்யுமத்சேனனும் வருந்தி, “அம்மா! உன் விரதம் நன்கு நிறைவேறி, சிறந்த பலனைக் கொடுக்கட்டும்” என்று ஆசீர்வதித்தான்.
நான்கு நாள் என்றிருந்த நிலைமாறி, நாளை என்ற நிலை வந்தது. நாளை என்பது மாறி, இன்று என்ற நிலையை சந்திக்க வேண்டிய கட்டாயம் வந்தது. சூரியன் உதித்ததும், தன் மாமன்-மாமியையும் வனத்தில் வாழும் அந்தணர்களையும் மனமொன்றி வணங்கினாள்.
அவர்களும்,‘சாவித்திரி தீர்க்க சௌமாங்கல்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று வாழ்த்தினர். சாவித்திரியை நோக்கி, “உன்னால் இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டது. நீ உணவு கொள்ளும் சமயம் வந்துவிட்டது. எனவே, நீ உணவை உண்பாயாக” என்றனர் மாமனும் மாமியும். “சூரியன் அஸ்தமனமான பின் என் மனத்தில் இருக்கும் எண்ணம் நிறைவேறியபின், உணவு கொள்வது என்று சங்கல்பம் செய்திருக்கிறேன்” என்றாள் சாவித்திரி.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தோளில் கோடரியைச் சுமந்த படி காட்டுக்குப் புறப்பட்டான் சத்தியவான். சாவித்திரியும் உடன் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டாள். சத்தியவான் காட்டினுள் சென்று, பழங்களைப் பறித்துக் கூடையில் நிரப்பினான். வனத்தின் அழகைப் பார்த்து மகிழமுடியாத அளவுக்கு சாவித்திரிக்கு மனத்தில் துக்கம். பழங்களைப் பறித்து முடித்துவிட்டு, கோடரியால் கட்டைகளைப் பிளந்தான் சத்தியவான். அப்போது, திடீரென்று தலையில் வலி! அங்கங்கள் சோர்ந்து, ஏதோ தன்னைத் துன்பப்படுத்துவது போன்ற உணர்வு. சாவித்திரியின் மடியில் தலைவைத்துப் படுத்தான் சத்தியவான்.
சாவித்திரிக்குப் புரிந்துவிட்டது, காலன் வந்துவிட்டான் என்று. எமபாசத்துடன் அருகில் வந்து நின்ற எமதர்மனைப் பார்த்துவிட்டாள்; கரம்குவித்தாள்; அழுது புலம்பினாள். “கருணை காட்டு” என்று கெஞ்சினாள்; எமதர்மனோ, “நான் தர்மம் தவறாதவன். என் செயலில் எந்த மாற்றமும் ஏற்படாது. நான் சத்தியவானின் உயிரைக் கொண்டு செல்வேன்” என்று சொல்லி, சத்தியவானின் உடலினின்றும் உயிரைப் பிரித்துக்கொண்டு, தெற்கு நோக்கிச் சென்றான். சாவித்திரியோ, “கணவனோடு வருவேன்” என்று எமதர்மனைத் தொடர்ந்தாள்.
எமதர்மன் “பெண்ணே இந்த எல்லை தாண்டி, நீ வரக்கூடாது” என்றான்.
சாவித்திரியோ “என் பதி எங்கு போகிறாரோ! அந்த இடத்துக்கு நான் செல்வதுதான் தர்மம்’ என்று சொல்லி, தான் அறிந்த தர்மங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துரைத்தாள். அந்த தர்மங்களைக் கேட்டு மகிழ்ந்த எமதர்மன், “பெண்ணே! நீ தெரிந்து வைத்திருக்கும் தர்மங்களைக் கேட்டு மகிழ்ந்தேன். இருப்பினும் உன் கணவன் உயிரைத் திருப்பித்தர இயலாது. வேண்டுமானால் உனக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன் பெற்றுச் செல்” என்றான்.
அதனைக் கேட்ட சாவித்திரி “என் மாமனார் த்யுமத்சேனர் கண்ணற்றவராயிருக்கிறார். அவருக்கு கண்பார்வை தர வேண்டும். இழந்த அரசை, அவர் மீண்டும் பெறவேண்டும். என்னுடைய பிதாவான அசுவபதிக்கு புத்திரர்கள் உண்டாக வேண்டும்” என்றாள். மூன்று வரங்களையும் கொடுத்த எமதர்மனிடம், சாவித்திரி “எனக்கும் சத்தியவானுக்கும், எங்கள் குலம் விளங்க புத்திரர்கள் உண்டாக வேண்டும்” என்று கேட்டாள். எமதர்மனும், “நீ அறிந்து வைத்திருக்கும் தர்மங்களைக் கேட்டு மகிழ்ந்த நான், இந்த வரத்தையும் நல்கினேன்” என்றான்.
அதனைக் கேட்ட சாவித்திரி, “சத்யவந்தரே! நீர் வாக்குத் தவறாதவர். எனக்குப் புத்திரசந்தானம் உண்டாகும் என்று வரமளித்தீரே! அந்த சத்தியவாக்கை நிறைவேற்ற, என் கணவர் உயிரைத் திருப்பித் தாரும்” என்றாள். சாவித்திரியின் மதி நுட்பத்தையும், மன உறுதியையும் பார்த்த எமதர்மன், தான் கொடுத்த வரத்தை நிறைவேற்ற, சத்தியவானின் உயிரைத் திருப்பி அனுப்பினான். சாவித்திரி திரும்பிவந்து, கணவனைத் தன் மடியில் போட்டுக்கொள்ள, சத்தியவான் தூக்கத்திலிருந்து விடுபட்டவனைப் போல எழுந்தான். பிறகு, சாவித்திரியை அழைத்துக் கொண்டு, தன் தாய்-தந்தை இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.

‘பதிவிரதா சிரோமணியான சாவித்திரியின் கற்பே, சத்யவானை எமனிடமிருந்து மீட்டது’ என்று முனிவர்கள் எல்லோரும் புகழ்ந்தனர்.
கற்புடைய மனைவியால் தேசும், வெற்றியும், புகழும் இன்பமும் ஒருவனை வந்தடையும் என்கிறது மகாபாரதம்.
அப்படி, காலன் கையிலிருந்து கணவனை மீட்ட காரிகையைப் போற்றுவோம்.

Comments