அபிராமி செய்தாளா?

நான் பூம்புகார் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பேராசிரியராக இருந்தேன்.
அங்கிருந்து குறுக்கே சென்றால், திருக்கடவூர் ஒன்பது கிலோமீட்டர்தான்.
அநேகமாக வாரம் ஒருமுறை அபிராமியைத் தரிசிக்க சைக்கிளிலேயே போவது வழக்கம்.
அபிராமி அம்மன் கோயில் தர்மகர்த்தா பிச்சைக் கட்டளைக் கனகசபைப் பிள்ளை. அவர் எங்கள் கல்லூரியின் தாளாளர்.
அவர் மனைவிக்கு ஜன்மச் சனி. அதனால், நளவெண்பா படித்து விளக்கம் சொல்ல சனிக்கிழமை தோறும் போவது என் கடமையாயிருந்தது.
இதனால் அபிராமியை அடிக்கடி தரிசிக்கும் பேறு முன் ஜன்ம நற்பலனாகிவிட்டது.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் அக்கோயிலில் மணிவிழா, பவளவிழா, முத்து விழா செய்ய பெரிய கூட்டம் வராது.
யாரோ ஓரிருவர் எப்போதாவது வருவர். அதனால் அபிராமியை அமர்ந்து நெடு நேரம் தரிசிக்கலாம்.
அப்படி அமர்ந்த காலங்களில், அவள் அருள்வீச்சு மனத்தில் பதிந்து, உடலில் சிலிர்க்கும்.
1984ஆம் ஆண்டு அட்டவீரட்ட தலங்கள் எனும் புத்தகம் எழுதும்படி மணிவாசகர் நூலகம் சொன்னது. அதற்காகத் திருக்கடவூர் போனேன்.
அப்போது மயிலாடுதுறையிலிருந்து ஒரே ஒரு டவுன் பஸ்தான் திருக்கடவூர் செல்லும். அதனால் 2 மணி நேரத்துக்கு ஒரு பஸ்தான். நான் காஃபி பிரியன். ஆதலால், முதல் நாள் இரவே காளியா குடி ஓட்டலில் அறையெடுத்துத் தங்கினேன்.
தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை முதலிய ஊர்களில் டிகிரி காஃபி என்று ஒன்று தருவார்கள். தண்ணீர் ஊற்றாத பாலில் போட்ட காஃபி அது. அதுவும் ‘பில்டர்’ காஃபித் தூளில் திக்காகப் போடப்பெறும் காஃபி.
அது குடித்துப் பழகினவர்களுக்கு அது ஒரு காபிச்சாராயம். விடாது டிகிரி காஃபி குடிப்பார்கள். காலை ஐந்து மணிக்கு எழுந்து ஓட்டல் சர்வரிடம் “ஒரு டிகிரி காஃபி கொடுங்கள்” என்று கேட்டேன்.
அவர், “ஓர் ஐந்து நிமிடம் பொறுங்கள். பால் காய்கிறது” என்றார்.
அதற்காகத் தாமத்தித்தால் பஸ் போய் விடுமே என்று, பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன். அங்கே வெளியில் உள்ள ஒரு காஃபி பாரிலும் காஃபி கிக்காக இருக்கும். பார் அல்லவா?
அங்கே வந்து முன்போலவே “ஒரு டிகிரிக் காஃபி கொடுங்க” என்றேன்.
அவரும், “சார் ஓர் ஐந்து நிமிஷம் பொறுங்க. பால் காயுது” என்றார்.
“சரி” என்று அமரும்போது திருக்கடவூர் பஸ் புறப்பட்டு வெளியே வந்து விட்டது. “காஃபி வேண்டாம்” என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறினேன்.
அநேகமாக காஃபி குடிக்காத பஸ் பயணம் அதுதான் முதல்தடவை.
திருக்கடவூர் போனதும் கோபுரமும் கோயிலும் தெரியவில்லை. காஃபி ஓட்டல்தான் தெரிந்தது. ஓடிப்போய் “ஒரு காஃபி கொடுங்க” என்றேன். டிகிரி காஃபி அங்கே கிடைக்காது. வெறும் காஃபிதான் கேட்டேன்.
அவரும் முன் இருவர் கூறிய அதே வாக்கியத்தில், “சார் அஞ்சு நிமிஷம் இருங்க. பால் காயுது” என்றார்.
மூன்றிடத்திலும் ஒரே வார்த்தையைக் கேட்கும்படியாகிவிட்டதே - இன்று காஃபி இல்லாமலே அபிராமியைத் தரிசிப்போம் என்று அவள் கோயிலுக்குள் போனேன்.
அடடா கண்கொள்ளாக் காட்சி - யாரோ ஒரு புண்ணியவான் உபயத்தில் அர்ச்சகர் சிறிய குடம் குடமாகப் பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.
நின்ற திருமேனியான அபிராமி உடல் முழுதும் பால் அருவி அலை அலையாகப் பாய்ந்து வருவதைக் கண்டேன். இன்று கூட அந்தக் காட்சி நெஞ்சில் இருந்து கண்ணில் தெரிகிறது.
பால் காயட்டும் என்று காஃபிக்காக நான் எங்கேயாவது தாமதம் செய்திருந்தால், இந்தப் பாலபிஷேகத்தை நான் பார்த்திருக்க முடியுமா!
‘அம்மா உன் அபிஷேக அழகைக் காணவே மூன்று இடத்திலும் பால் காய வைத்தாயா?’ என்று என் மனம் தடுமாறிச் சொல்லியது. உரோமம் சிலிர்த்தது.
இவ்வளவு சிறப்பான அபிஷேகத்தை அன்பர்கள் காணட்டுமே என்று உபயதாரர் அல்லது அர்ச்சகர் - நினைத்திருக்கலாம். அந்த நினைவு அபிராமி அருள் வெள்ளத்தில் கரைந்து, அவளை நேசிப்பவர்களுக்கு ஒரு செய்தியாகப் போயிருக்கலாம்.
இது ‘விரிச்சி’ என்று சொல்லப்படும், ஒரு வித அருள் அனுபவத்தைச் சேர்ந்தது.
எத்தனையோ ஜாதகம் பார்த்துப் பொருந்தாமல் போனதும் கோயிலில் பூப்போட்டுப் பார்க்கலாம் என்று வருவார்கள்.
ஆண் தெய்வமானால் விபூதி, பெண் தெய்வமானால் குங்குமம் மடித்து அர்ச்சகரிடம் கொடுத்துக் கடவுள் பிரசாதமாக அர்ச்சனை செய்து இரண்டையும் சன்னிதியிலேயே போட்டு ஒரு சிறு பிள்ளைக் கையால் எடுப்பார்கள். பெண் தெய்வச் சன்னிதியில் குங்குமம் அல்லது ஆண் தெய்வச் சன்னிதியில் விபூதி வந்தால் கடவுள் உத்தரவு தந்ததாகக் கொள்வர்.
இப்படி ஒருவர் முயலும்போது கோயிலுக்கு வெளியே போகும் வழிப் போக்கர் மற்றவரிடம், “என்ன ஐயா யோசனை? இதுக்கு இதான் பொண்ணு. போய் பத்திரிகை அடி,” என்று சொல்லியது காதில் கேட்டதும் - அதையே அருள் வாக்காகக் கொண்டு திரும்புவார்கள்.
இது விரிச்சி எனப்படும். அப்படி ஒரு விரிச்சியாகவே ‘பால் காயுது’ என்ற வாக்கியத்தை நான் கேட்டேன்.
அந்தப் பாலபிஷேகம் பார்த்த நினைவு மங்காமல் இருக்க, அன்று முதல் இன்று வரை காஃபி குடிக்காத வைராக்கியத்தைக் கடைபிடிக்கிறேன்.
அபிராமி அருளால் நடந்தது என்று என் மனம் இன்றும் சொல்கிறது.
அவள் அருள்பிரசாதி அல்லவா?

முனைவர் அ.அறிவொளி

Comments