சதாசிவ விஸ்வரூபம்!

சிவபிரானின் 64 கோலங்களை, மாகேஸ்வர வடிவங்கள் என்பார்கள். தட்சிணாமூர்த்தி, கல்யாண சுந்தரர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், நடராஜர்... என்று பெருகும் அந்த வடிவங்களில் குறிப்பிடத்தக்கவர் சதாசிவ மூர்த்தி. இவர் ஐந்து திருமுகங்களும், பத்து கரங்களும் கொண்டவராக காட்சியளிப்பார். இதே மூர்த்தி, இருபத்தைந்து திருமுகங்களும், ஐம்பது திருக்கரங்களும் கொண்டு விளங்குவார். மகா சதாசிவர் என்று சொல்லப்படும் வடிவம் இதுதான். மிக அபூர்வமாகவே இந்தக் கோலத்தைக் காணலாம்.
கும்பகோணத்தை அடுத்த நல்லூர் கோயில் கோபுரத்தின் உள்பக்கத்தில் மகா சதாசிவ மூர்த்தியை தரிசிக்கலாம். இதே போன்று, காஞ்சியிலுள்ள சுரகரேஸ்வரர் ஆலய விமானத்திலும் இவரை தரிசிக்கலாம். ‘கைலாயத்தில் உறைபவர்; ருத்திரர்களாலும், ரிஷிகளாலும் துதிக்கப்படுபவர்...’ என்றெல்லாம் சொல்லப்படும் மகா சதா சிவ மூர்த்தியை, பஞ்சலோக விக்ரமாக நாம் தரிசிக்கும் இடம் திருச்சியில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோயில். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னதான சமாஜத்தின் எதிரே அமைந்துள்ளது இக்கோயில்.
பொதுவாக தனித்தே காட்சி தரும் இந்த மூர்த்தி, இங்கே தேவியை மடியில் இருத்தியவராக, அபயகரம் விளங்க தரிசனம் அளிக்கிறார். மற்ற கரங்களில் பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவராக தரிசனம் அளித்தாலும், அபூர்வமான சாந்தம் நிலவுகிறது பெருமானின் திருமுகத்தில். ‘தன்னுடைய அளப்பரிய ஆற்றலை உணர்ந்தவன் எவ்வளவு அமைதியாக இருப்பான்’ என்று உணர்த்துவது போன்று தெரிகிறது பெருமானின் தோற்றம். அது மட்டுமல்ல; பெண்மையை மதிப்பவனாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
வடபத்ரகாளி கோயிலுக்கு நாம் சென்றிருந்தது, நவராத்திரி விழாவின் எட்டாம் நாள். காசி விசாலாட்சியாக அலங்காரம் பெற்று, அருள் பெருக்கிக் கொண்டிருந்தாள் அன்னை வடபத்ரகாளி. வெளியே பெரிதாகத் தெரியவில்லை எனினும், உள்ளே விசாலமாக அமைந்துள்ளது கோயில்.
“மூலிகை ஆராய்ச்சி தொடர்பான ஓலைச்சுவடி ஒன்றில், சதா சிவ விஸ்வரூபம் குறித்தான தகவல்கள் கிடைத்தன. அத்தகவல்களின் அடிப்படையில் விக்கி ரகம் உருவாக்கி, எங்கள் பூர்விக கோயிலாக விளங்கும் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். பக்தர்கள் பலன்பெற வேண்டும் என்கிற எண்ணம் துளிர்விட்டது.
கும்பகோணம் ராமசாமி ஸ்தபதி, இந்தப் பணியை மேற்கொண்டார். இந்தப் பணி முழுமையடைய இரண்டு ஆண்டுகள் ஆயின” என்கிறார் இத்திருக்கோயிலின் நிர்வாகி தண்டபானி சுவாமிகள்.
சமீபத்தில் இத்திருக்கோயிலின் உள்ளே மகா சதாசிவ விக்ரகம் ருத்ரயாகம் செய்விக்கப்பட்டு, மருந்து சாத்தி ஆகம விதிகளின்படி அமையப் பெற்றுள்ளது. அப்படி அமைந்த முதல் சன்னிதி இதுவாகத்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது.
விநாயகர், முருகன்... என்று பல்வேறு சன்னிதிகள் இங்கே இருந்தாலும், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது கண்களைக் கவர்ந்து, நினைவில் உடன் வருபவர் இந்த மகா சதாசிவர் என்பது நிஜம்!

Comments