பலன் தந்த காயத்ரி!

யமுனையின் நடுவில் ஓடத்தில் பயணம் செய்த பராசரர், ஓடமோட்டிய மச்சகந்தியை பல இச்சக வார்த்தைகள் கூறி இணங்க வைத்து வேதவியாசர் பிறக்கக் காரணமானார்.
மச்சகந்தி இது பகல் வேளை என்று சங்கோஜப்பட, தன் தவ வலிமையால் சூரியனைத் திரும்பி இருக்குமாறு ஆணையிட்டார். கதிரவனைக் கட்டாயமாக மறையுமாறு செய்த ஊழ்வினையால், பராசரர் அந்தண குலத்தில் பிறந்தாலும், நினைவாற்றல் அற்றவனாக மந்த புத்தியோடு பிறந்திருந்தார்.
தந்தையின் குருகுலத்தில் மகன் மடையனா இருந்தான். அவனது செயல்களைக் கண்டு சக மாணவர்கள் கேலி செய்தனர். ஒருநாள் முனிவர் தாங்கமாட்டாமல் அவனை வெளியே தள்ளி, உன்னால் மற்ற சீடர்கள் கெட்டு விடுவார்கள். வனத்தில் காயத்ரியை ஜபித்துத் தவமிரு. பசித்தால் பிட்சை வாங்கிச் சாப்பிடு. சூரியன் நீசமா விரய ஸ்தானத்திலிருக்கையில் பிறக்க என்ன பாபம் செய்தாயோ? காயத்ரி மந்திரமே உன்னைக் கரை சேர்க்கும்" என விரட்டினார்.
காட்டுக்கு வந்த சிறுவன், வனத்தில் விழுதுகளுடனிருந்த இரு பெரிய ஆலமரங்களைத் தேர்ந்தெடுத்தான். பக்கத்துக்கு ஆறாக, பருமனான விழுதுகளை முறுக்கி ஊஞ்சல் போல் பிணைத்தான். அதன் கீழே காட்டுச் சுள்ளிகளைப் போட்டுத் தீ மூட்டினான். கிடைத்த காய், கனிகளை உண்டு பசியைத் தணித்துக் கொண்டான். மனதை ஒருமுகப் படுத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்தான். ஒரு வருடமானதும் ஒரு விழுதைத் துண்டித்தான். இப்படி ஆண்டுக்கொரு விழுதை அறுத்துக் கொண்டிருந்தான். பதினொரு வருடங்கள் கடந்தன. ஒரு பக்கம் மட்டும் இருந்த விழுதில் ஊஞ்சல் நின்றது! காயத்ரி மந்திரத்தின் பலன் அது! பன்னிரண்டாவது ஆண்டும் முடிய இருந்தது.
இன்னுமா பரிதிக்குக் கருணை பிறக்கவில்லை? இன்று மாலை எஞ்சியிருக்கும் விழுதை வெட்டினால் ஊஞ்சலோடு அக்னியில் விழ வேண்டியதுதான்! இந்த ஜன்மாய் பயனின்றிப் போனதே" என்ற வருத்தத்துடன் ஜபத்தைத் தொடர்ந்தான் இளைஞன். அந்தி சாயும் வேளையில் எங்கும் ஒளி வெள்ளம்! ஒரு ரிஷி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். ‘அவர் சூரியனே’ என்று யூகித்து, கீழே இறங்கி சாஷ்டாங்கமா நமஸ்கரித்தான். குழந்தாய்! என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார் பரிதி. ஆதித்தரே! நான் முக்காலத்தையும் உணர்ந்து தெரிவிக்கும் ஜோதிட விற்பன்னன் ஆக வேண்டும்" என்றான் பணிவாக.
கதிரவன் அவனை வாழ்த்தி, சூரிய-சந்திரர் உள்ளவரை உன் புகழ் ஜோதிட உலகில் பிரசித்தி பெற்றிருக்கும். இப்புவி உன்னை மிஹ்ரர் என்று போற்றும். ராஜாதி ராஜன் சபையில் ஆஸ்தான ஜோதிடராகத் திகழ்வாய்" என அருளி மறைந்தார். தந்தையைத் தேடிச் சென்று நடந்ததை எடுத்துரைத்தார் மிஹ்ரர். உஜ்ஜயினி அரசன் விக்ரமாதித்தன், மிஹ்ரரின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அவரை ஆஸ்தான ஜோதிடராக்கினான்.
ஊழ்வினையை, விடா முயற்சியாலும் பக்தியாலும் வெல்லலாம் என்பதற்கு உதாரணமாய் விளங்கினார் ஸ்ரீமிஹ்ரர்.

Comments