விளக்கேற்றிய வேதிவேளான்!

உங்களுக்குச் செம்பியன் வேதிவேளாரைத் தெரியுமா? ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மண்ணில் கிளியூர் நாட்டுச் சிறுதாவூரில் வாழ்ந்தவர். வள்ளுவரின் ‘ஒப்புரவு’ அதிகாரத்தில் சுட்டப்படும் ‘ஊருணி’, ‘பழமரம்’ போலத் தம்மைச் சூழ வாழ்ந்த சமுதாயத்துக்குப் பயன்பட்ட வாழ்க்கை அவருடையது. சோழ மன்னர் கண்டராதித்தர் காலத்தில் இன்றைய சிராப்பள்ளி மாவட்ட எறும்பியூருக்கும், தஞ்சாவூர் மாவட்டத் திருப்பேர்நகருக்கும் அவர் ஆற்றியுள்ள பணிகளைப் பற்றி இரண்டு ஊர்க்கோயில்களிலும் உள்ள பத்துக் கல்வெட்டுகள் காலங்காலமாய்ப் பேசிக் கொண்டிருக்கின்றன.
கல்லணையை அடுத்துள்ள திருப்பேர்நகர் காவிரியால் செழுமையடைந்த ஊர்களுள் ஒன்று. சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் இங்கு கோயில்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மிகச் சில மாடக்கோயில்களுள் ஒன்றான விஷ்ணு கோயில் பாசுரம் பெற்ற பெருமைக்குரியது. சிவபெருமான் கோயிலோ முற்சோழர் காலச் சிற்பிகளால் கலைக்கோயிலாய் அமைக்கப்பட்டது. கண்டராதித்த சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டின்போது (கி.பி.953) நிகழ்ந்த அத்திருப்பணியை நிறைவேற்றியவர் இந்த செம்பியன் வேதிவேளார். அவர் திருப்பேர் நகர்க் கோயிலுக்களித்த நிலக்கொடைகளால் இறைவனுக்கான வழிபாடும் படையலும் குறைவின்றியும் தொய்வின்றியும் சிறக்கத் தொடர்ந்தன.
கோயில்களில் நிகழ்ந்த வழிபாடுகளும் அளிக்கப்பட்ட படையல்களும் அக்காலத்தே பலருக்கு வேலைவாய்ப்பும் உணவும் அளித்தன. இசைக் கலைஞர்கள், கருவிக் கலைஞர்கள், ஆடற்கலைஞர்கள், நந்தவனம் அமைப்போர், பூக்கொய்வோர், பூத்தொடுப்போர் எனக் கோயில் சார்ந்த வேலை வாய்ப்புகள் கணக் கற்றவையாய் அமைந்தன. அவ்வகையில் திருப்பேர் நகரைச் சேர்ந்த தகுதியுடைய எளியவர் பலர் வாழ்க்கை வளமானது. அக்கோயிலில் சந்தி விளக்குகள், நந்தா விளக்குகள், காப்பு விளக்குகள் எனப் பலவகை விளக்குகள் ஏற்றவும் வேதிவேளார் ஏற்பாடு செய்திருந்தார். பகல் அல்லது இரவில் எரிந்தவை சந்தி விளக்குகள். இரவும் பகலும் இடைவிடாது ஒளி உமிழ்ந்தவை நந்தா விளக்குகள். கோயில்களில் நிகழ்ந்த திருக்காப்புச் சடங்குகள் முடியும்வரை வெளிச்சமிட்டவை காப்பு விளக்குகள்.
மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் ஊர்ப்பொது இடமான கோயிலில் விளக்கேற்றியவர்கள், மக்கள் அங்குக் கூடவும் கலந்துரையாடவும் வழி அமைத்தனர். கதிரவன் மறைந்து இருள் சூழும் நேரத்தில், பணி முடித்தவர்களும் வீட்டு வேலைகளை நிறைவு செய்தவர்களும் கோயில்களில்தான் குழுமினர். அவரவர் வீடுகளை விட ஊர்ப் பொதுவில் இருந்த கோயில்கள் வெளிச்சமாக இருந்தமையால், கூட்டுறவான உரையாடல்களுக்கும், குடும்பச் சந்திப்புகளுக்கும் கோயில்களே இடமாயின.
ஒருவரை ஒருவர் பார்த்து மகிழவும் உரியன தரவும் பெறவும் கோயில் விளக்குகள் இடமளித்தன. அதனால்தான், கோயிலில் விளக்கேற்றும் அறத்தை ஒப்பற்ற அறமாகக் கொண்டாடிப் போற்றினார் அப்பர் பெருமான். அவர் காட்டிய வழியில் திருப்பேர்நகர் கோயிலை வெளிச்சப்படுத்தி மகிழ்ந்தார் வேதிவேளார்.
வீரநாராயணரான இந்தச் செம்பியன் வேதிவேளார் திருஎறும்பியூரில் நிகழ்த்திய அறப்பணிகள் எண்ணற்றவை. அவர் பெயரின் முன்னொட்டாக விளங்கும் ‘வீரநாராயணர்’ என்ற விருதுப் பெயர் கண்டராதித்த சோழரின் தந்தையான முதலாம் பராந்தக சோழரின் அடைமொழிகளுள் ஒன்று. பாடல் பெற்ற மலைக்கோயிலாக விளங்கிய எறும்பியூர்க் கோயிலை வேதிவேளார்தான் கல்லாலான கட்டமைப்பாக, கற்றளியாக மாற்றினார். மூவர் முதலிகள் பாடி மகிழ்ந்த திருமுறைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியாக, அக்கோயிலில் நாளும் திருப்பதியம் பாட ஏற்பாடு செய்த வேளார், பாடிய பெருமக்களுக்கும், அப்பாடல்களுக்கு இசைகூட்டிய கலைஞர்களுக்கும் வாழ்நாள் ஊதியமாக நிலம் அளித்து மகிழ்ந்தார். தலைமுறை தலைமுறையாக அந்நிலத்தை அனுபவித்துக் கொள்ளவும், தொடர்ந்து அக்கலைஞர்கள் கோயிலில் பணியாற்றவும் வேளாரின் ஆவணம் வழிசெய்தது.
அதுமட்டுமல்ல; எறும்பியூர்க் கோயில் மலை மேல் கோயிலாக அமைந்தது. அதனால், மலையேறி வந்து இறைவனை வழிபடும் பொதுமக்கள் இளைப்பாறவும் உணவருந்தவும் வாய்ப்பாக அங்குச் சத்திரம் ஒன்றையும் அமைத்தார். எறும்பியூருக்கு அருகில் உள்ள வேங்கூரில் இருந்து விலைக்குப் பெறப்பட்ட நிலத்தின் விளைச்சல், அச்சத்திரத்தில் தங்கிப் போந்தவர்களுக்கும் அங்குப் பணியாற்றியவர்களுக்கும் உணவளிக்கப் பயன்பட்டது.
மேலும், எறும்பியூர் கோயிலின் ஊழியர்கள் ஒரே இடத்தில் வசிக்க வாய்ப்பாகவும், பணி ஒருங்கிணைவுக்காகவும் கோயில் அருகிலேயே அவர்களுக்கான குடியிருப்புகளை அமைக்க நினைத்தார். அதற்காக அருகிலிருந்த ஸ்ரீகண்ட சதுர் வேதிமங்கல சபையாரை அணுகி வேண்டிய நிலத்தை விலைக்குப் பெற்றார். அவற்றால் உருவாக்கப்பட்ட ‘மட விளாகம்’ என்ற கோயில் சார்ந்த குடியிருப்பு, ஊழியர்களுக்குப் பெரும்பயன் விளைத்தது.
கோயிலின் பல்வேறு பணிகளுக்காகவும் ஊழியர்களின் வாழ்க்கை வளத்துக்காகவும் அவரால் வாங்கப்பட்ட நிலத்துண்டுகள் சில, முறையான பாசன வசதியின்றிப் பயிர் செய்ய முடியாத நிலையில் இருந்தன. அவற்றுக்கு நீர்வரத்துச் செய்வதற்காக, ஸ்ரீகண்ட சதுர்வேதிமங்கலத்தில் இருந்த ஏரியிலிருந்து வாய்க்கால் ஒன்று வெட்டவும், அந்த வாய்க்கால் வரும் பாதைக்கான நிலம் கொள்ளவும் விரும்பிய வேளார், அதற்காகப் பெரும்பொருள் செலவழித்தார். அதுவும் போதுமானதாக அமையாத நிலையில், அருகே ஏரி அகழ முடிவெடுத்து, தனியே நிலம் பெற்றுக் கோயிலார் பொறுப்பில் அதைத் தந்தார். அதனால் ஊழியர் நிலங்களும் கோயில் நிலங்களும் மக்கள் நிலங்களும் ஒன்று போல் பயன்பெற்றன.
இவற்றோடு, கோயில் காவலுக்கும் ஏற்பாடு செய்தார். வாழ்நாள் ஊதியப் பணியாக அமைந்த காவலர் பொறுப்புக்கு, ஊர்க்குடி ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றார்.
(இந்தியக் கல்வெட்டு அறிக்கை 1914: கல்வெட்டு எண்கள் 102-105, 123, 129, 131, 134, 137).

Comments