பிரணவ மூர்த்தி!

கணநாதம், மஹேஸ்வரம், அம்பிகாம், விஷ்ணும், ஆதித்யம் கௌமாரம் என்ற ஒரு வழக்கு உண்டு. இதையே ஷண்மத ஸ்தாபனம் என்பர். அதாவது கணபதி வழிபாடு, சிவனைத் துதித்தல், தேவியைப் போற்றுதல், நாராயணனை சரணாகதி அடைதல், சூரியனை ஆராதித்தல், முருகனை பிரார்த்தித்தல் எனும் ஆறுவகை வழிபாடுகளைப் பாகுபடுத்தி, வெகு எளிதாக இறைவன் அருளைப் பெற ஆதிசங்கரர் வழிகாட்டியுள்ளார். இத்தகைய வழிபாடுகளில் முதலாவது காணாபத்யம்.
மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமரகர்ண விலம்பித ஸுத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே!
‘ஓம்’ காரம் எனும் பிரணவ ஸ்வரூபியே ஸ்ரீவிக்ன விநாயகமூர்த்தி. ஜீவராசிகளின் மூலாதாரத்தில் அமர்ந்து ஜீவனைப் பாதுகாப்பவரும் அவரேதான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தோன்றியது இந்த பிரபஞ்சம் என்று எல்லோரும் ஒருமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள். அந்த பஞ்ச பூதங்களின் அதிபதியாகவும், நிர்குண பிரம்மத்தின் வடிவமாகவும், சகலத்தையும் தம்முள் அடக்கிக்கொண்ட பிரணவ மூர்த்தியாகவும் காணாபத்யர்கள் உள்ளத்தில் விநாயர் உறைவதாக நம்பப்படுகிறது.
கணபதியுடைய நாபி பிரம்ம ஸ்வரூபம் என்றும், முகம் விஷ்ணு ஸ்வரூபம் என்றும், நேத்ரம் சிவ ஸ்வரூபம் என்றும், இட பாகம் சக்தி ஸ்வரூபம் என்றும், வல பாகம் சூரியன் என்றும் கூறும் ஒரு ஸ்லோகம் உண்டு. அதாவது நாம் போற்றும் பிரதான தெய்வங்கள் அனைத்தையும் தம்முள் கொண்டிருப்பவர் கணபதி. இவ்வுண்மையை உபாஸிப்பவர்கள் நன்கு உணரும் வண்ணம், புராண வரலாறுகள் சிறப்பாக அமைந்துள்ளன. இத்தகைய உணர்வுடன் ஐங்கரனை உபாசனை புரிபவர்களே காணாபத்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
உமாதேவி உத்யான வனத்திலிருந்த சித்திரத்தில் ஒரு பிரணவம் எழுதப் பெற்றிருந்தது. சக்தியும், சிவனும் ஏக காலத்தில் பிரணவத்தை நோக்கவே அயோனிஜனாக கணபதி பெருமான் பார்வதி புத்திரனாக அவதரித்தான். இவரது இளையவரான முருகனும் அயோனிஜனே. இதைத்தவிர, இவ்விரு சகோதரர்களுக்கும் வேறு சில ஒற்றுமைகளை அதிசயமாகக் காண்கிறோம். இருவரும் விசாக நட்சத்திரத்தில் தோன்றியவர்கள். இருவரும் அசுரனிடமுள்ள ஆணவத்தை அடக்கி, அவனையே வாகனமாகக் கொண்டவர்கள். இருவரும் ‘சித்தி-புத்தி’ அல்லது ‘இச்சா-க்ரியா’ என்ற சக்திகளை கொண்டவர்கள். கணபதி பிரணவ ஸ்வரூபம்; முருகனோ அப்பிரணவத்துக்கு பொருள் கண்டவர்.
தியானிப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தும் கணபதியின் உருவம் அற்புதமானது. யானை முகமும், மூன்று கண்களும், இரு செவிகளும், தும்பிக்கையைச் சேர்த்து ஐந்து கரங்களும், பெரும் வயிறும், குறுகிய இரு திருவடிகளும் கொண்ட விநாயர் பிரணவ ஸ்வரூபி என்பதை யானை முகம் விளக்கு கிறது. ஐந்து கரங்களும், ஐந்தொழிலை செய்யும் ஆற்றலுடையவை என்பதை உணர்த்துகின்றன. முக்கண்கள் சந்திரன், சூரியன், அக்னியை உணர்த்துகின்றன. விசாலமான இரு செவிகளும் ஆன்மாக்களை இடற்பாடுகளால் ஆட்கொள்ளாமல் காத்து, வினை வெப்பத்தைப் போக்கியருளக் கூடியவை. உண்மைக்கொரு விளக்கமாக விநாயகரின் பெருவயிறு. அண்டங்கள் அனைத்தையும் உயிர்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கிறது.

பாதங்களிலிருந்து கழுத்து வரை மனித ரூபமும், அதற்குமேல் யானை முகமும் கொண்டிருக்கும் கணபதி, மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜரூபத்தில் பிரம்ம ஸ்வரூபத்தையும் இரண்டும் இணைந்த ஓர் அற்புத நிலையில் காட்சி அளிக்கிறார். ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை உணர்த்தும் வடிவம்தான் கணபதியின் ரூபம்.

உலகில் எல்லாவித விக்னங்கள் தோன்றக் காரணமாக இருப்பவரும், அவ்விக்னங்கள் விலக அருள் புரிபவரும் விநாயகர்தான். இதனாலேயே அவர் விக்ன விநாயகர், விக்னேஸ்வரர், விக்னாராஜர் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

விநாயகருக்கு ப்ரம்மணஸ்பதி என்று அழகிய நாமமும் உண்டு. இவர் ஸ்வானந்தம், ஆனந்தம் எனும் இரு இன்ப நிலைகளுக்கு அதிதேவதையாவார். ஆதலால் இவருக்கு ஸ்வாநந்தேசர் என்று பெயர்.
எளிய வழிபாடுக்கேற்ற தெய்வம் பிள்ளையாரே. யாரும் எந்த சமயத்திலும் சரண் அடையலாம். தவிர, எளிய முறையில், அதிக நியம, அனுஷ்டான விதிகளை கடைபிடிக்காமலும் வழிபட்டு பெரும்பேறு அடையலாம். நெற்றிப் பொட்டில் இரண்டு குட்டி, நாலு தோப்புக்கரணம் போட்டால் போதும். கணேசர் கட்டாயம் அருள்பாலிப்பார்.
கணபதி வழிபாடு நாடு முழுவதும் தீவிரமாக பரவியிருந்த காலத்தில் முகமதியர் வரவினாலும், அவர்களது ஆட்சி காலங்களிலும் மங்கிப் போய்விட்டது. இருந்தும் பீனிக்ஸ் பறவைபோல் புத்துயிர் பெற்ற காணாபத்யம், மராட்டியர் காலத்தில் மகாராஷ்டிராவிலுள்ள மயூர தேசத்தில் புதுப்பாணியில் தோன்றியது. மயூர தேசத்தில் காணப்படும் பிள்ளையார் கோயிலைத் தவிர, அதனைச் சுற்றி ஏழு கணபதி கோயில்களும் தோன்றின. இவற்றை ‘அஷ்ட விநாயகர்’ என்று அன்போடு அழைத்து ஆராதிக்கின்றனர். அவற்றின் தலப் பெருமையையும், அங்கு செங்கோலோச்சும் விநாயகரையும் தொடர்ந்து தரிசிப்போம்.
வியக்க வைக்கும் விநாயகி!
கஜானனி, கஜானனை, கணேசினி, கணேஸ்வரி, விக்நேஸ்வரி, விநாயகி, லம்போதரி, ஐங்கிணி, வைய நாயகி எனும் பல பெயர்களால் அழைக்கப்படும் பெண் உருவம் கொண்ட இந்த தேவதைக்கும், கணபதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. லலிதாம்பிக்கைக்கு 64 கோடி யோகினிகள், பரிவார தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள் என்று லலிதா ஸகஸ்ர நாமம் கூறுகிறது. பெண் உருவம் கொண்ட விநாயகி, இந்த யோகினிகளில் ஒருவர் என்று வட மாநிலத்தார் கருதுகின்றனர். தென்னாட்டிலோ அவளை ‘ஸ்ரீவாஞ்சா கல்ப லதா ஸ்ரீவித்யா கணபதி’ என்று சக்தி ரூபமாக பாவித்து ஸ்ரீவித்யா உபாசகர்கள் அவளை வழிபடுகின்றனர்.
கஜமுகம் கொண்ட இப்பெண் தேவதையை, விநாயகி என்ற பெயரை மாத்திரம் இலிங்க புராணம் (02-27-215) கூறுகிறது. ஸ்காந்த புராணம் இவளை கஜானனை என்று அழைக்கிறது. விஷ்ணு தர்மோத்ர புராணம் (1-226-6) மாத்ரு கணங்களில் கணேசினியும் ஒருவள் என்கிறது. அந்தகாசூரனின் குருதியைப் பருக, சிவனால் படைக்கப்பட்ட தேவதையே இவள் என்கிறது மத்ஸ்ய புராணம் (179-18). பெண் தெய்வ நாமாக்களை கூறும் வன துர்கோபநிஷத் எனும் கிரந்தத்தில் இவள் நாமம் கணேஸ்வரி என்று கூறப்பட்டுள்ளது.
விநாயகரின் வேறு பெயர்கள்
பர்மா:
மகாபினி மங்கோலியா: தோட்கர்
திபெத்: ஸோக்ப்ராக்
கம்போடியா: பிரஸகணேஷ்
சீனா: க்வான்ஷடியிக்
ஜப்பான்: விநாயக்ஷா

Comments