நினைத்ததை அருளும் நெய்நந்தீஸ்வரர்!

நந்தி என்றவுடன் தஞ்சை பெரியகோயில், திருவாவடுதுறை, சுசீந்திரம், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் உள்ள பிரமாண்ட நந்திகள்தான் நினைவுக்கு வரும்.
நந்திக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது, வேந்தன் பட்டியில் உள்ள நெய்நந்தீஸ்வரர் திருக்கோயில். சொக்கலிங்கேஸ்வரராக சிவபிரானும், மீனாட்சியாக அம்மையும் அருளாட்சி புரியும் இத்தலத்தில், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் என்று பல சன்னிதிகள் அமைந்துள்ளன என்றாலும், விசேஷ மூர்த்தி இந்த நெய்நந்தீஸ்வரர்தான்!
இவரின் தோற்றம் முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்துள்ளது. அதில் ஈக்கள், எறும்புகள், பூச்சிகள் எதுவும் மொய்க்கவில்லை என்பதும், இவரை மிகுந்த பயபக்தியோடு வணங்கினால் நம் துன்பங்கள் யாவும் நீங்கும்; மனத்தில் நினைத்த காரியங்கள் கைகூடும். வறுமை நீங்கி செல்வ விருத்தி உண்டாகும் என்பதும் பக்தர்களின் அனுபவம்.
பிரதோஷ நாளில், இந்த நந்தீஸ்வரருக்கு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகின்றது. அன்று நந்தீஸ்வரருக்கு பசு நெய்யினால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் செய்த நெய், அவரது தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது. மறுநாள் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நெய்க்கிணற்றில் கொட்டுகிறார்கள்.
வருடந்தோறும், தை மாதத்தில் மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நெய்நந்தீஸ்வரருக்கு ‘நந்தி விழா’ என்ற விழாவினை இவ்வூரில் நடத்தி வருகிறார்கள். அந்த நாளில் அவருக்கு அபிஷேகங்கள் செய்து, 21 வகையான மாலைகளால் அழகுபடுத்தி ஆராதனை நடத்துகின்றனர்.
மாதந்தோறும் வரும் பிரதோஷ காலங்களிலும், முக்கியத் திருவிழா மற்றும் பண்டிகை தினங்களிலும் இவருக்கு அதிகமாக நிவேதனம் செய்யப்படுவது சர்க்கரைப் பொங்கல்தான்.
கோயிலின் உள்ளே வடக்குப்பக்கத்தில் உள்ள நந்தவனத்தில்தான் நெய்க்கிணறு உள்ளது. இதன் உள்ளே தேங்கியிருக்கும் நெய்யில்கூட ஈக்கள், எறும்புகள் பூச்சிகள் எதுவும் மொய்ப்பது கிடையாது.
வேந்தன்பட்டி மற்றும் இதன் சுற்று வட்டாரத்தில் பசுமாடு வைத்திருப்பவர்கள், தங்கள் வீட்டில் காய்ச்சி எடுக்கும் பசு நெய்யை முதலில் நெய் நந்தீஸ்வரருக்கு சமர்ப்பித்த பிறகே, வீட்டுக்கு பயன்படுத்துவது வழக்கம். அதுபோலவே, நெற்றியில் காசுகளை பொட்டாக வைப்பதும், ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிப்பதும் இங்கே காணப்படும் அபூர்வ வழக்கம். இவருக்கு காணிக்கையாக செலுத்தப்படுவதும் பசுநெய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்பட்டியில் உள்ள கச்சேரிக் கூடம் என்னுமிடத்தில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று இருந்து வருகிறது. இந்த வேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றியுள்ளார். மிகப் பழமை வாய்ந்த இந்த வேப்பமரத்தில் நெய்நந்தீஸ்வரரின் முகம் ரொம்பத் தெளிவாக, அழகாகத் தோன்றியிருப்பது பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வூர் மக்கள் இந்த சுயம்பு நந்திக்கு ‘வேப்பமரத்து நந்தி’ என்று பெயரிட்டு, மிகுந்த பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். இந்த அபூர்வ கடவுளைப் பார்ப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து வருகின்றார்கள்.
*
செல்லும் வழி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
தரிசன நேரம்: காலை 7 மணிமுதல் பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை.

Comments