சிருங்கேரி

கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வற்றாத ஜீவநதியாக சலசலத்து
ஓடிக்கொண்டிருக்கும் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ‘சிருங்கேரி.
’இயற்கைப் பேரெழிலும் தெய்வீகச் சூழலும் நிரம்பப் பெற்ற தலம்.

அடர்ந்த கானகம், சுற்றிலும் மலை முகடுகள், மழை மேகங்கள். எண்ணற்ற பறவைகளின் இனிய கானங்கள் எங்கும். இயற்கை அன்னையின் எழிலாட்சி. அது ரிஷ்ய சிருங்க பர்வதம் எனும் ரம்மியமான மலைத்தொடர் நடுவே, அழகிய துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி.
இங்கேதான், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் பத்தாவது குருநாதரும் தலைசிறந்த யோகீஸ்வரருமான ஸ்ரீவித்யா சங்கர மஹா ஸ்வாமிகளின் நினைவாக அமைந்திருக்கிறது மிகப் பிரம்மாண்டமான ஸ்ரீவித்யா சங்கரர் ஆலயம். விஜய நகர, சாளுக்கிய மற்றும் திராவிட சிற்பக் கலைகளின்படி கட்டப்பட்ட ஆலயம் இது.
சிருங்கேரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இந்த அற்புத ஆலயம்தான். சிற்பக் கலையின் சிறப்பான அம்சங்களையெல்லாம் இதில் காணலாம்.
இவ்வாலயம் முழுவதும் கருங்கற்களாலேயே உருவானது. இதன் ஒவ்வொரு நிலையிலும் அதி நுட்பமான சிற்பக் கலையம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஸ்ரீசக்ர வடிவில் சிற்பக் கலைக்கூடமாக அமைந்திருக்கிறது இத்திருக்கோயில்.
வெளிச்சுவரில் கோயிலைச் சுற்றிலும் கீழிருந்து ஐந்து சிற்பப் பட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாகக் காணப்படுகின்றன. அவற்றில் குதிரை, ஒட்டகம், சிங்கம், யாளி மற்றும் புராண நிகழ்ச்சிகளும் அற்புதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வரிசையில் சித்திரக் குள்ளர்கள் உள்ளனர். நான்கு சீடர்களோடு கூடிய ஆதிசங்கரர் காணப்படுகிறார். வாயிற் படியை ஒட்டிய சிற்பப் பட்டையில் பலவிதமான சக்ர வடிவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள்.
ஆலயத்தின் முன் மண்டபத்துக்குச் செல்ல கிழக்கு, தெற்கு, வடக்குப் புறங்களில் மூன்று நுழை வாயில்கள். இதேபோன்று, கருவறையை அடுத்தடுத்து தெற்கு, மேற்கு வடக்குப் புறங்களில் மூன்று வாயில்கள் உள்ளன. இந்த ஆறு வாயில்களிலும் அழகே உருவான துவார பாலகர்கள் நிற்கின்றனர். இவர்களில் இருவர் சிவச் சின்னங்களையும், இருவர் சக்தி தேவியின் சின்னங்களையும், இருவர் வைணவச் சின்னங்களையும் ஏந்தியிருக்கின்றனர்.
ஆலயத்தின் உட்புறம் ஒரே கல்லில் செதுக்கப் பட்டதான 12 தூண்கள் கலையம்சத்தோடு உள்ளன. ஒவ்வொரு தூணும் மேஷம், ரிஷபம் என ஒவ்வொரு ராசி வீதம் 12 ராசிகளையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் உதிக்கும் சூரியனின் முதல் கிரணமானது அன்றைக்கு என்ன ராசியோ அந்த ராசிக்குரிய தூணில் படுமாறு அமைந்திருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பம்சம்.
கருவறையில் இருக்கும் ஸ்ரீவித்யாசங்கரர் லிங்கம் ஜீவகளையோடு அருள்ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. வெளியே இருபுறமும் உள்ள சிறு மண்டபத்தில் ஸ்ரீவித்யா கணபதியும், இன்னொரு பக்கம் ஸ்ரீதுர்கா தேவியும் சன்னிதி கொண்டிருக்கின்றனர். அருகில் சனி பகவான் காட்சியளிக்கிறார். உருக்கால் ஆன இவர் எண்ணெயில் வைக்கப்பட்டுள்ளார்.
கருவறை மண்டப வெளிப்புறச் சுவரின் தெற்கில் மகாவிஷ்ணுவும், சரஸ்வதியும், மேற்கில் மகேஸ்வரரும். உமாதேவியும் எழுந்தருளியுள்ளனர். மேலும், சிவதாண்டவ மூர்த்தி, நம்பி நாராயணன், ஸ்ரீனிவாசர், ஹரிஹரர் போன்ற வெண்கல விக்ரகங்களும் சிவலிங்கங்களும் சாளக்கிராமங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
இறைநாட்டமுள்ள அன்பர்களுக்கு சிருங்கேரியின் அற்புத ஆலயங்கள் ஆனந்த அனுபவத்தைத் தர வல்லவை. மடத்து வளாகத்தினுள் துங்கா நதியின் தென்கரையில் அமைந்துள்ள பதினைந்து ஆலயங்களும், துங்கா நதியின் வடகரையில் அமைந்துள்ள ஆறு ஆலயங்களும், சிருங்கேரி மடத்துக்கு வெளியே உள்ள ஆறு ஆலயங்களும் காணத் திகட்டாத அற்புதங்கள். இவற்றில் ஸ்ரீவித்யாசங்கரர் ஆலயமே பிரதானமாகவும் கம்பீரமாகவும் காட்சி தருகிறது. இந்திய தொல் பொருள் இலாகா இவ்வாலயத்தின் பராமரிப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது.
துங்கா நதியின் நீர்ப்பெருக்கு எப்படி குளிர்ச்சியைப் பரவ வைக்கிறதோ, அதேவண்ணம் ஞானத்தைப் பெருக வைப்பவளாக எழுந்தருளியிருக்கிறார் அன்னை ஸ்ரீசாரதாம்பாள். ஸ்ரீசங்கரரால் பிரதிஷ்டை செயப்பட்ட தேவியைத் தரிசிக்கும் போது நமக்குள் அளப்பரிய அமைதி பெருக்கெடுப்பது நிஜம்.
நதியின்மேல் அமைந்த பாலத்தில் நடந்து, சிருங்கேரி ஆசாரியரைத் தரிசிக்கிறோம். இந்த மனித குலம் நலம்பெற வேண்டும் என்பதற்காகவே, தம்முடைய நித்ய பூஜைகளைச் செய்து கொண்டிருக்கிறார் ஸ்ரீபாரதி தீர்த்த மகாஸ்வாமிகள். சிருங்கேரி, இறையருள் மட்டுமல்ல; குருவருளையும் கைகூட வைக்கும் அருள் தலம்.
இருப்பிடம்: மங்களூரில் இருந்து சிருங்கேரி சுமார் நூறு கி.மீ. பேருந்து வசதி நிறைய உண்டு.

Comments