பிரசன்ன வெங்கடேசபெருமாள்






சிவா விஷ்ணு ஆலயங்கள் இந்தியாவில் மட்டு மல்ல, வெளிநாடுகளிலுமே அமைக்கப்பட்டு மிகப் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயமும் ஒன்றாகும். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள். இங்குள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் மூல விக்ரகமே லோகிஜி என்பவரால் திருப்பதியில் இருந்து வரவழைக்கப்பட்டதுதான் என்பதை அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.
இந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் 1992ஆம் ஆண்டில் ப்ளூரிட் பகுதியிலுள்ள சிவா மந்திரில் அமைக்கப்பட்டதாகும். சிவன் கோயிலுக்குள்ளேயே திருமாலின் சன்னிதியும்! முதல் பிரம்மோற்சவ விழா 1993ஆம் ஆண்டில் வெகு விமரிசையாக நடந்தேறியது. அன்று முதல் வருடந்தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரம்மோற்சவ விழா தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஜகார்தாவில் பிரம்மோத்சவ வைபவம், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நட்சத்திரத்தை அனுசரித்து வரும்படியாகக் கொண்டாடப்படுகிறது. அதுவும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் உத்சவம்தான். அங்குரார்ப்பணத்துடன் தொடங்கும் உத்சவம், சுதர்சன ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹுதியுடன் நிறைவுபெறுகிறது.
மூலவர் விக்ரகம் மட்டுமல்லாமல், இங்குள்ள உற்சவர் மற்றும் உபய நாச்சியார் விக்ரகங்கள்கூட 2002ஆம் ஆண்டில் திருப்பதியிலிருந்தே கொண்டுவரப் பட்டவைதான். இவற்றை மைசூரைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண ஸ்வாமி என்பவர் கொண்டுவந்ததாக அறிகிறோம். சன்னிதி அமைக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவான பின்னர், 2004ஆம் ஆண்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா சம்ப்ரோட்சண வைபவமும் நடந்தேறியது.
ஆலயத்துக்குள்ளும் ஆலயத்துக்கு வெளியேயும் வண்டிகளை நிறுத்துவதற்கான வசதிகளும் உண்டு. ஆலய தரிசன நேரமும், இங்கே ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அர்ச்சகர் கோயிலில் இருப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெறுகிறது.
தரிசன நேரம்:
திங்கட்கிழமை: காலை 8.30 முதல் 11 வரை, மாலை 4 முதல் 5.30 வரை, செவ்வா முதல் வியாழன் மற்றும் ஞாயிறு - காலை 8.30 முதல் 11 வரை, மாலை 5 முதல் 8 வரை, வெள்ளிக்கிழமை - காலை 10 முதல் 11 வரை, மாலை 5 முதல் 8 வரை,சனிக்கிழமை - காலை 9 முதல் 11 வரை, மாலை 5 முதல் 8 வரை, ஞாயிற்றுக்கிழமை - காலை 8.30 முதல் 11 வரை, மாலை 5 முதல் 8 வரை.

Comments